home கட்டுரை, டிரெண்டிங் மனதுக்குள் கரையும் வெளி

மனதுக்குள் கரையும் வெளி

– நெற்கொழு தாசன்

 

ஏனோ தெரியவில்லை, மிக நீண்ட நாட்களின் பின் நினைவுகளில் அந்த வெளி வந்து நிறைகிறது. தொண்ணூறுகளின் ஆரம்பகாலங்கள் என நினைக்கிறேன், அம்மாவின் மடியில் அமர்ந்து இலங்கைப்பேருந்தில் “அரைரிக்கற்” எடுத்துச்சென்ற முதல்பயணத்தில் மோதிய வெப்பமான உலர்ந்த உவர்க்காற்று இன்னும் முகத்தருகில் கடப்பது போலவே இருக்கிறது.

சிதிலமடைந்து கிடந்த கட்டடங்களை காட்டி, இது, நெசவு ஆலை, இது ஆஸ்பத்திரி, இது நீர்த்தாங்கி கட்ட ஒதுக்கிய நிலம் என அம்மா கூறியது, வளர்ந்த பின் ஒவ்வொரு முறையும் இந்த வெளியினை கடக்கும் போது என்னையறியாமல் நினைவுக்கு வரும். சில பயணப் பொழுதுகளில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வெளியின் மதகுகளில் அல்லது வீதியின் மருங்கில் நாட்டப்பட்டிருக்கும் மைல்கல்லில் இருந்து வெளியின் மௌனத்தில் கரைந்து போவதுமுண்டு.

வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரித்து நிற்கும் இந்த சதுப்பு நிலம் ஒரு இயற்கையான பறவைகள் சரணாலயம். வலசை வரும் பெயர் தெரியாப் பறவைகள் உயர்ந்து நிற்கும் தாழைமரங்களில் தங்கி சல்லாபித்து குஞ்சுகள் பொரித்து தம்மிடம் ஏகும். கொக்குகளும், நாரைகளும், நீர்க்காகங்களும் காலம் முழுதும் நிறைந்திருக்கும். மண்திட்டுகளும், சிறியநீர் தேக்கங்களும் ஆங்காங்கே பரவிக் கிடக்கும். நீண்டிருக்கும் வெளியினை ஊடறுத்துப் போகும் ஆமையின் ஓடு போன்ற வீதியின் அருகில் அரசமர நிழலில் ‘முனியப்பர்’ என்ற சிறு கோயிலும் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளாலும் வரலாற்றுப் பதிவுகளாலும் குறிப்பிடப்படும் இந்த வெளி குறிப்பிடப்படாத எத்தனை எத்தனையோ வரலாறுகளை தன்னுள்ளே கொண்டு அடங்கி இருக்கிறது.

கால நீட்சியானது எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. எதிலிருந்தெல்லாம் நீங்கினானோ அதையெல்லாம் கொண்டாடுபவனாகவும், எதையெல்லாம் தேடினானோ அதையெல்லாம் நிராகரித்து விடுபவனாகவும் மாற்றிவிடுகிறது. சமூகத்தின் மீதான நம்பிக்கையில், சமூகத்துக்காக தன்னை மாற்றத்தொடங்குகிறான். இருந்தபோதும், ஏதாவதொரு கணத்தில் நிகழ்ந்துவிடும் ஒரு சிறு அதிர்வு அவனை மீள ஒருமுறை உருக்குலைத்துப் போட்டும் விடுகிறது. ஒவ்வொருவரும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கணங்களை நினைவுகளோடு கடந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

நீளும் அந்த வெளியில் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன் தனியனாக. வழமையாக என் கூடவரும் நண்பனும் இல்லை. காகங்களும் நீண்ட அலகுகளைக் கொண்ட பறவைகளும் குவிந்து ஒரு இடத்தை வட்டமிட்டுக் கொண்டிருகின்றன. யாரோ ஒருவர் ஒரு கால்நடையை திருடிக் கொன்றபின் அதன் எச்சங்களை அல்லது இறந்தபின் அதனையே கொண்டுவந்து போட்டிருக்கலாம்.

இப்படிதானே அன்று அவர்களும் கிடந்திருப்பார்கள்.

1989 களின் இறுதிக் காலம். வல்வைப் படுகொலைகளை நிகழ்த்தி தம் கோரமுகத்துடன் திரும்பிக் கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை, ஊரில் இருந்த இளைஞர்களை கைதுசெய்து அழைத்துச் சென்றது. எட்டுப்பேரை தடுத்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுதலை செய்தது. சிலநாட்களில் எட்டுப்பேரில் ஐவர் வீடு சேர்ந்தனர். இரத்தம் தோய்ந்து கிழிந்தும் சிதைந்தும் கிடந்த உடலுடனும் ஆடைகளுடனும்.

எஞ்சிய மூவரும் இதோ இந்த வெளியில் தானே யாருமில்லாமல் கிடந்திருப்பார்கள். நரிகளும் காகங்களும் அவர்கள் உடலங்களை அன்றும் இப்படித்தானே வட்டமிட்டிருக்கும்.

திரும்பி வந்தவர்கள் சொன்ன கதைகள் தாயால் மகளுக்கும், அண்ணன்களால் தம்பிகளுக்கும், தோழர்களுக்கும் கடத்தப்பட்டதே தவிர எங்குமே பதியப்படவில்லை. சாட்சியங்களாக இருந்தவர்களும் எங்கெங்கோ வாழ்ந்தாலும் அவர்களின் நினைவுகளிலும் இந்த வெளி ஒரு மரணவெளியாகவே நீண்டிருக்கும் எப்போதும்.

தூக்கம் வராத இரவுகளில் அம்மாவின் கண்களில் இருந்து நீர் வழிய அவர்களைப்பற்றிய கதைகளை சொல்லுவாள். ஒரே குடும்பமாக வாழ்ந்த ஊரில் அவர்களும் அம்மாவுக்கு என்னைப் போலவோ, அண்ணாவைப் போலவோ ஒரு மகன்களாகதானே இருந்திருப்பார்கள். சந்தையில் இருந்து நடந்து திரும்பும் அம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டிருக்கலாம். வீடு வேய்ந்து கொடுத்திருக்கலாம், தோட்டத்தில் வயலில் உதவிகள் செய்து கொடுத்திருக்கலாம்.. ஏன் என்னைக்கூட அவர்கள் தூக்கிவிளையாடி இருக்கலாம்…

இந்த வெளி இத்தோடு மட்டும் அடங்கிப்போனதா?

1996 யாழ்குடா நாடு முழுமையாக சிறிலங்கா இராணுவ வளையத்துக்குள் சிறைப்பட, கன்னிப் பெண்ணாய் கலகலத்து நின்ற இந்த வெளி விதவைக் கோலம் பூண்டு சூனியமாகிப் போனது. சந்தியில் பிரதான முகாம் அமைத்து தமது வேட்கைகளை தணிக்கத் தொடங்கினர் சிங்கள இராணுவத்தினர். அன்றைய நாட்களில் இந்த வெளியினை கடப்பது குறித்து பேசாத எவரும் இருந்திருக்க மாட்டார்கள். செம்மணி வெளி கிருசாந்தியின் அவலக்குரல்களால் நிறைந்திருந்த காலமல்லவா.

அன்றிலிருந்து, பத்துவருடங்களின் பின்னும், எப்போது எங்கே என்ன நடக்கும் என்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் இதுதான் கடைசி சந்திப்பாக இருக்குமோ என்ற அச்சத்துடன் சந்தித்த காலமாக இருந்தது. சுமார் நூற்றியைம்பதுக்கும் அதிகமான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட காலம் அது.

கார்த்திகை மாதத்தின் மெல்லிய குளிரோடு நீண்டநேரம் கதைத்துவிட்டு வீடு திரும்புகையில் காத்திருந்து மறித்த இராணுவத்தினர் அடையாள அட்டையை பறித்து விட்டு மறுநாள் இந்த முகாமுக்கு வரும்படி கூறி சென்றனர். மறுநாள் காலை, அவன் போக மறுக்கிறான். ஊரெல்லாம் நிகழும் படுகொலைகள் மனதில் வருகிறது. கண்களில் அச்சம் வளர மூச்சு ஏறி இறங்கத் தொடங்குகிறது. அக்காவைப் பார்க்கிறான், அம்மாவைப் பார்க்கிறான். அவன் பாசத்துடன் வளர்த்த சிவப்பி ஆடு அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றது.

அடையாள அட்டை இல்லாமல் எதுவுமே செய்யமுடியாது. முகாமுக்கு போயே தீரவேண்டும் இல்லாவிட்டால் நாளை அவர்கள் வீடுதேடி வரக்கூடும். அப்படி வந்தால் வீட்டில் எல்லோருக்கும்… வேட்டைநாயின் கோரமுகம் நினைவுகளில் வர, வேறு தெரிவுகள் இன்றி முகாம் நோக்கி பயணிக்கிறான். கையைப் பிசைந்து கொண்டு, உறுத்தும் மனதோடு அவன் வீட்டு வாசலில் ஏதும் செய்யமுடியாத நிலையில் நண்பர்களாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வளவும் போய்ச் சேர்ந்திருப்பான். இப்போ வந்துகொண்டு இருப்பான். என்ன கேட்டிருப்பாங்கள், அடித்திருப்பாங்களோ, எங்களுக்குள் எதுவும் வாய்களால் பேசாவிட்டாலும் மனங்கள் பேசிக்கொண்டிருந்தன. அமைதியை குலைத்து எழுந்தது மூன்று சூட்டுச்சத்தம். அது காதுகளில் விழுந்த அதே கணத்தில் விட்டுக்குள் இருந்து தாயின் ஓலம் எழுந்தது. “ஐயோ சுட்டுப்போட்டாங்கள்”

நீண்ட அந்த வெளியின் நடுவீதியில், சைக்கிள் கால்களுக்கிடையில் கிடக்க, சாரம் உயர்ந்து முழங்கால் தெரிய விழுந்து கிடந்தான். தலையின் பின்புறமிருந்து வழிந்திருந்த குருதி வீதியின் கருமையோடு கலந்து தேங்கி நின்றது. நெற்றியில் வைத்திருந்த சந்தனப்பொட்டு அப்போதும் அப்படியே இருந்தது. திறந்திருந்த அவன் கண்களில் படர்ந்திருந்த அச்சம் அந்தக் கணத்தில் அங்கு பெருகத் தொடங்கியது.

நீண்ட அந்த வெளி அப்போதும் மௌனமாகவே கிடந்தது. அவன் சுடப்பட்ட அந்தக் கணத்தில் அந்த வெளியின் அரசமரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் கூச்சலிட்டுப் பறந்தனவாம்.

அதன் பின் ஒருபோதும் அவன் விழுந்த அந்த இடத்தை கடக்கவே இல்லை. இனியும் அதன் அருகில் போகும் துணிவும் இல்லை.

அன்று அவன் கண்களில் இருந்து பெருகிய நிர்ணயிக்கமுடியாத அந்த அச்சம் கலந்த உணர்வுப்படிவு என் அறை சுவர்களில் இருந்து பெருகி என்னை மூழ்கடித்து விடும். அந்தக் கணங்களில் என்உதடுகள் என்னையறியாமல்

“எரிக்கப்பட்ட காடு நாம்
ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது.
எஞ்சிய வேர்களில் இருந்து
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இல்லம் மீழ்தலாய்
மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்
சுகந்திர விருப்பாய்
தொடருமெம் பாடல்”
என்ற கவிஞர் வ ஐ ச ஜெயபாலனின் வரிகளையே உதிர்த்து தேறும்.

இப்போது அந்த வெளி மாறிப்போயும் இருக்கலாம். உயர்ந்த புகைப்போக்கிகளாலும் இயந்திர ஓசைகளாலும் நாளை நிறைந்தும் போகலாம். மீண்டும் ஆஸ்பத்திரியும், நீர்த்தாங்கியும் திரும்ப எழக்கூடும். நீண்ட அந்த வீதியில் அங்காங்கே கடவைகள் போட்டு பள்ளி செல்லும் மழலைகள் கடக்கவும் கூடும். மகாவலி ஆறு திசை திருப்பட்டு வந்து கலந்து நன்செய் நிலங்களாக மாறியும் போகலாம்.

எது எப்படி மாறிப்போனாலும்,

உயர்ந்து நிற்கும் பனைமரங்களும், தொடர்ச்சியான ஈச்சம் பற்றைகளும், தடித்த இலைகளைக் கொண்டுயர்ந்த தாழை மரங்களும், அவைகளுடே வாழ்ந்து பெருகிப் போன அந்த பெயர் தெரியாப் பறவைகளும், இன்னும் அங்கேயே இருக்கும் முனியப்பரும், அந்த நிலத்தில் விளைந்து எங்கெல்லாமோ பரவும் உப்பும் இந்த வெளியின் மௌனத்தினை மொழி பெயர்த்துக் கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!