home கட்டுரை, தமிழி மருத்துவர்: அன்றும் இன்றும்

மருத்துவர்: அன்றும் இன்றும்

– பேராசிரியர். கோ.ரகுபதி

காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர்.  சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது.  வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை.

தென்னிந்தியாவில் உள்ள சாதிகளின் வரலாற்றினை எழுதுவதற்கு எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலே வேதநூல்.  இந்த நூலில் பிராமண ஆணுக்கும் பிராமணர் அல்லாத பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்றே பெரும்பாலான சாதிகளின் தோற்றம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாவிதர், நாசுவர், பண்டிதர், பண்டுவர், மருத்துவர், பரியாரி, குடிமகன் என பல பெயர்கள் இருந்த போதிலும் அவர்களை அம்பஷ்ட்டர் என்ற தலைப்பின் கீழ் எட்கர் தர்ட்ஸன் அவர்களின் தோற்றக் கதையை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: ”பிராமணருக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்தவர்கள் அம்பஷ்ட்டர்”.  1909ல் எட்கர் தர்ட்ஸன் என்ன எழுதினாரோ அதே விவரணைதான் ஒரு நூற்றாண்டை கடந்த பின்னரும் தொடர்கிறது. ராம சாஸ்திரி 2003ல் வெளியிட்டுள்ள The People of India என்ற நூலிலும் எட்கர் தர்ட்ஸனின் பதிவே தொடர்கிறது.

ஆங்கில மற்றும் தமிழ் அகராதிகள் மருத்துவர்களை சவரத் தொழிலாளர்கள் என்றே அடையாளப்படுத்துகிறது.  மருத்துவ சாதி குறித்த இப்பதிவினை வாசிக்கும் ஒருவர் மருத்துவ சாதியினர் பாரம்பரியம் சவரம் செய்தல் என்ற முடிவுக்கே வருவார்.  இந்த முடிவினையும்விட இதில் இருக்கின்ற பேராபத்தானது 1) சம்பந்தப்பட்ட சாதியினரின் அறிவுப் பாரம்பரியத்தை பிராமணர் சாதிக்கு உரித்தாக்குவதும் 2) பிராமணர் சாதியினருக்கு மட்டுமே அறிவுப் பாரம்பரியம் உண்டென அறிவிப்பதும் 3) அறிவுடையவரெல்லாம் பிராமணர்களுக்கு பிறந்தவர்களே.  இவை எல்லாவற்றினை விடவும் காலனிய ஆட்சியாளர்களின் இனவரைவியல் நூல்களில் கூறப்பட்டிருக்கிற தோற்றக் கதைகளை அவ்வாறே இன்றும் பின்பற்றுகிற பொழுது ஒரு சாதியினுடைய தோற்றத்தின் உண்மையான வரலாறு மறுக்கப்படுகிறது. மேலும், சாதிக்கு மாறாதத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.  உண்மையில் சாதிகள் தோன்றுவதும் மறைவதும் இந்திய சமூகத்தில் நிகழ்ந்து கொண்டு இருக்கத்தான் செய்கிறது, எனவே சாதி வரைவியலில் அச்சாதியின் தோற்றத்தினை வரலாற்று ரீதியாகவே அணுக வேண்டும்.

இனவரைவியல் நூல்கள் மருத்துவ சாதியினரின் பாரம்பரியத் தொழில் சவரம் செய்தல் என்று அடையாளப்படுத்துகிறது; மக்களின் பொதுப்புத்தியும் அவ்வாறே கருதுகிறது. மேலும் அத்தொழில் இழிவானது, அதனைச் செய்பவர்கள் இழிவுக்குரியவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். இதனை மறுதலிக்கின்றனர் மருத்துவ சாதியினர்.  பிராமண ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவர்களே அம்பஷ்ட்டர் (மருத்துவர்) என்பதை கட்டுக்கதை என்று கூறும் அவர்கள் தங்களின் பாரம்பரியத் தொழில் மருத்துவம் என்ற வரலாற்றினை முன்வைக்கின்றனர்.  மருத்துவ சாதியினர் சவரத் தொழில் செய்தது எந்த அளவுக்கு உண்மையோ அதையும்விட கூடுதலான வரலாற்று உண்மை அவர்கள் தமிழ் சமூகத்தின் மருத்துவர்கள் என்பதும்.

இனவரைவியல் நூல்கள் உட்பட இதர பதிவுகளிலும் அம்பஷ்ட்டர் நாவிதர் என்றழைக்கப்படும் சாதியின் தொழில் மருத்துவம் என்று கோடிட்டுக் காட்டியிருப்பினும் கள ஆய்வில் மருத்துவத் தொழிலில் அதன் சில தேவைகளுக்காக மயிர் நீக்குதல் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர், அதுவே சவரத் தொழில் செய்வதற்கும் வழிவகுத்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது.  வெட்டுக் காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்கிற பொழுது காயம்பட்ட இடத்திலுள்ள ரோமங்களை நீக்கிவிட்டு அவ்விடத்தில் மருந்திட்டு வெட்டுக்காயத்தினை குணப்படுத்துகிற வழக்கத்திலிருந்து நாளடைவில் சவரம் செய்வதும் ஒரு தொழிலாக உருவானது.

வெட்டுக் கருவி, கத்தரிப்புக் கருவி, மருந்து வழிதகடு, எருமைக் கொம்புச் சிமிழ், குழியம்மி, குழவி, மருந்துரல், இரும்புத் தண்டம், உலக்கை, வடிதட்டு, தைலப்பாண்டம், உரைகல், சுடுஅகல், நெடுங்கைக் குறடு, மயிர் மழிப்புக் கூர்வாய்க் கத்தி, படுவன், சிலந்தி கட்டிகள் கீறும் கொடுவாய்க் கத்தி, மூக்கு, காது முதலிய துளைகளில் மயிர் போக்கும் சிலிம்பிக் கருவி, காலாணி, கையாணி, நகங்கள் முதலியனை களையும் சாவணக் கூர்முனைக் கத்தி, அடிநாக்கு, உள்நாக்கு முதலியவற்றை வெட்டி எடுக்கும் கொக்கு மூக்கு வெட்டுக்குறடு, செவிப்படுவன், தண்டப்படுவன், இராஜப்பிளவை முதலியவற்றை அறுத்துப் பிளக்கும் செப்புவாய்க் கத்தி, நாக்குப்படுவன், நாக்குமுளை முதலியவற்றை பொன்வாய்க் கத்தி, தற்செயலாய் அல்லது எதிரிகளால் தாக்குண்ட வெட்டுகள், குத்துகள், பிளப்புகள் முதலியவற்றை தைக்கும் வெள்ளி ஊசி, பரு, முளை, சிலந்தி, ஆணி முதலியவற்றைப் பிடுங்கி எடுக்கும் சிமிட்டா, மயிர் வெட்டும் கத்திரிக் கோல் போன்ற  கருவிகளை பயன்படுத்தி இருப்பதானது மருத்துவ சாதியினரின் அறுவை சிகிச்சை கூரறிவினை வெளிப்படுத்துகிறது.

மாப்பிளைச் சவரம் என்ற பெயரில் ஒரு மணமகனின் ஆண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கு சடங்கியல் அடிப்படையில் செய்யப்பெற்ற பரிசோதனையும், ஆணாதிக்கப் பார்வையில் மண மகளின் பெண்மையை அறிந்து கொள்வதற்கு கடைபிடிக்கப்பட்டு வந்த சேலை கட்டிவிடுகின்ற (இன்று நாத்தனார் சேலை கட்டுதல் என்ற பெயரில் அவ்வழக்கும் இருக்கிறது) முறையிலும் மருத்துவ பரிசோதனையே இருந்தது.  மாப்பிளை சவரம் பெரும்பாலும் உடைமை வர்க்கங்களிடையே இருந்திருக்கிறது.

மருவத்திச்சி என்றழைக்கப்பட்ட மருத்துவச் சாதி பெண்கள் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணர்களாக இருந்திருக்கின்றனர்.  வயிற்றிலிருக்கும் குழந்தை இயல்பு நிலைக்கு மாறாக இருந்தால் அதனை இயல்புத் தன்மைக்குக் கொண்டு வந்து சுகப்பிரசவ நிலைக்கு மாற்றுகின்ற திறமை மருத்துவ சாதிப் பெண்களுக்கு (மருவத்துச்சி) இருந்தது.

மருத்துவர்களின் சேவைக்காக அவர்கள் குடியிருப்பதற்கும் விவசாயம் செய்து கொள்வதற்கும் நிலம் தானமாக வழங்கப்பட்டது.  அவர்களின் வசிப்பிடம் மருவத்தூர், மருத்துவன்குடி, மருந்தூர், மருத்துவநேந்தல், மருத்துவன்சேரி என்ற பெயர்களிலும் விவசாய நிலம் நாவிதச்செய், நாவிதனோடை, நாவிதன் பொட்டல், நாவித வாய்க்கால், நாவிதத்திட்டை, நாவிதத்திடல் என்றும் பெயரில் அழைக்கப்பெற்றன.

தமிழகத்தின் சாதிய அடுக்கில் மேற்குறிப்பிட்ட தொழிலினை அனைத்து மேல் சாதியினருக்கும் செய்த போதிலும் வெவ்வேறு மருத்துவ சாதியினர் இருந்திருப்பதனை அறியமுடிகிறது.

வெள்ளாளர், தேவர், கவுண்டர் என பல சாதியினருக்கு தனித்தனியான நாவிதர் இருந்தனர்.  சில கிராமங்களில் பல சாதியினருக்கும் ஒரே ஒரு மருத்துவ சாதியினர் இருந்திருப்பினும் இவர்கள் தீண்டத்தகாதோர் என்று கருதப்பட்ட மக்களுக்கு சேவகம் செய்ய மறுத்திருக்கின்றனர்; இந்த மறுத்தலை செயல்படுத்துவதில் சாதி இந்துக்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால் தீண்டாமைக்குள்ளான சாதியினரிடத்தில் அவர்களுக்கென தனியாக நாவிதர் சாதியினர் இருந்திருக்கின்றனர், அவ்வாறு இல்லாத பகுதிகளில் புதிரை வண்ணார் சாதியாரே நாவிதரின் பணியையும் செய்திருக்கின்றனர்.

ஒரே தொழிலையே பல்வேறு ஏற்றத்தாழ்வான சாதிகளுக்கு செய்த காரணத்தினால் மருத்துவர் சாதியினரிடத்திலும் அந்த ஏற்றத்தாழ்வு செயல்பட்டிருக்கிறது, அவர்களுக்குள் சார்புத் தன்மை இல்லாதிருந்த போதிலும்கூட.  மேல் சாதியினருக்கு சேவகம் செய்து வருகின்ற மருத்துவரை அதற்கு கீழுள்ள சாதியினருக்கு சேவகம் செய்கின்ற மருத்துவர் காணும் பொழுது வணக்கம் என்று பணிவுடன் மரியாதை செய்வது வழமையாக இருந்தது.  மருத்துவ சாதியினருக்குள் மண உறவானது ஒரு மருத்துவ சாதியினர் எந்த சாதியினருக்குச் சேவகம் செய்கின்றனரோ அதே சாதிக்கு சேவகம் செய்கின்ற மருத்துவச் சாதியாரோடுதான் மேற்கொள்வார்.

உதாரணமாக, வெள்ளாள சாதிக்குச் சேவகம் செய்கின்ற மருத்துவர் வெள்ளாள சாதிக்கு சேவகம் செய்கின்ற மருத்துவ சாதியுடனேயே மண உறவு ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கம் இருந்தது.  ஆனால் கடந்த சில பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த உட்சாதி திருமண உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  தான் சேவகம் செய்யாத சாதிக்கும் சேவகம் செய்கின்ற மருத்துவரோடு திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கம் தோன்றிவிட்டது, இதனால் ஓரளவுக்கு உட்சாதி உணர்வு மறையத் தொடங்கியிருக்கிறது.  எண்ணிக்கையில் மிக சொற்ப அளவிலேயே இருந்து வந்த தலித் சாதிகளுக்கான நாவிதர்களை கண்டுபிடிப்பது இயலாத செயல்.

அனைத்து மருத்துவ சாதியினரிடத்திலும் அவர்களுக்கென தனித்துவமான சமூக வழமைகள் இருந்திருக்கவில்லை.  இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படும் சடங்கு முதற்கொண்டு அவர்களின் உணவுப் பழக்கம் வரையிலும் அவர்கள் எச்சாதியினருக்கு சேவை செய்கின்றனரோ அச்சாதியின் பண்பாட்டினையே பிரதிபலித்திருக்கின்றனர்.  ஊர் சோறு எடுக்கும் வழமையினால் மருத்துவ சாதிக்கென தனித்த உணவுப் பண்பாடு இருந்ததெனக் கூற இயலாது.  இந்தப் பண்பாட்டு பிரதிபலிப்பு மருத்துவ சாதியில் சிலர் தாங்கள் எச்சாதியினருக்கு சேவகம் செய்து வந்தனரோ அச்சாதியினரோடு கரைந்து போவதற்கு வழிவகுத்திருக்கிறது.

காலனிய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட மேற்கத்திய மருத்துவமுறை அதனை அவ்வாறே காலனிய ஆட்சிக்குப் பின்னரும் பின்பற்றியதின் விளைவு மருத்துவ சாதியினர் மருத்துவத் தொழிலில் ஈடுபடுவதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.  சமூக இழிவுகளிலிருந்தும் அதனால் ஒடுக்கப்படுவதிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வதற்கு முனைந்தவர்கள் தங்களை பாரம்பரிய மருத்துவ மற்றும் சவரத் தொழிலிருந்து விடுவித்துக் கொண்டு மாற்று தொழிலுக்குள் சென்றனர்.

ஆனால் அவ்வாறு செய்ய இயலாததாலும் மருத்துவத் தொழிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டக் காரணத்தினாலும் சவரத் தொழிலையே நம்பி பலரும் வாழ்ந்து வருகின்றனர்.  மேலும், தையல், சாணை பிடித்தல், திரைப்படத் துறையில் ஒப்பனை செய்தல் போன்ற தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் இன்று சவரம் செய்தல் வருமானம் கொழிக்கின்ற தொழிலாக மாறிவிட்ட காரணத்தினால் அத்தொழிலிலும் மருத்துவ சாதி அல்லாதோர் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.  இதனால் சவரத் தொழிலிலிருந்தும் மருத்துவ சாதியினர் அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.  இது எதிர் காலத்தில் என்ன விளைவினை ஏற்படுத்தும் என்பதனை இப்பொழுது அறுதியிட்டுக் கூற இயலாது. எனினும், மருத்துவ சாதியினர் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பே இருக்கிறது என்று கருதலாம்.  காரணம், பொருளாதாரத்தில் வசதி படைத்த மருத்துவ சாதி அல்லாதோர் எளிதாக பெரும் முதலீட்டில் கவர்ச்சிகரமான அழகு நிலையம் தொடங்கிவிடுகின்றனர்.  ஆனால் பொருளாதார வசதியின்மை மருத்துவர்களை பெரும் பொருளாதார முதலீட்டில் அழகு நிலையம் தொடங்குவதில் அல்லது இருக்கின்ற அழகுநிலையத்தை புதுப்பிப்பதில் தடங்கலை ஏற்படுத்துகிறது.  பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழல் அவர்களை சவரத் தொழில் செய்வதிலிருந்து விலக்கி வைக்கும் அபயாம் இருக்கிறது.

மருத்துவச் சாதியினரின் பாரம்பரியத் தொழில் வணிகமயமானதால் கிடைக்கின்ற வருமானம் அவர்களின் பண்பாட்டில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு சாதியின் பாரம்பரியம், பண்பாடு, சமூகப் பொருளாதார நிலை எல்லா காலத்திலும் மாற்றமின்றி இருக்க இயலாது, அது மாற்றத்திற்கு உட்பட்டதே. மேலும் ஒரு காலத்தில் ஒரு சாதிக்கென ஒரு தொழில் இருந்திருந்த போதிலும் இன்று அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.  இதன் பொருள் ஒருசாதியின் கடந்த கால பாரம்பரியத் தொழிலையே இன்றும் அச்சாதியின் தொழிலெனக் குறிப்பிடுவது தவறானதே.

காலனிய ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பெற்ற இனவரைவியல் தரவுகளையே இன்றும் எடுத்துக் கையாள்வதும், அதற்கு அப்பாற்பட்ட ஆய்வுக்குள் செல்லாதிருப்பதும் ஆய்வாளர்கள் மீது ஐயத்தினையே ஏற்படுத்துகிறது.  பிராமணீய அல்லது இந்துமய நோக்கில் பதிவு செய்யப்பற்றத் தரவுகளையே மீண்டும் மீண்டும் கூறுவதிலிருந்து விடுபட வேண்டிய தேவை இருக்கிறது.  ஒரு சாதியின் தோற்றம், பாரம்பரியம், சமூகப் பொருளாதார நிலை இவை வரலாற்று ரீதியாகவே எழுதப்பட வேண்டும்; அதுவே குறிப்பிட்ட சாதியின் உண்மையான சாதி வரைவியலாக இருக்க முடியும்.  மாற்றத்தினைக் கணக்கில் கொள்ளாத சாதி வரைவியல் ஒரு சாதியின் முழுமையான சாதி வரைவியலாக இருக்க இயலாது.

 

 

2 thoughts on “மருத்துவர்: அன்றும் இன்றும்

  1. அண்ணே பிரசவம் பார்ப்பதற்குனே ஒரு சமூகம் உண்டு அந்த சமூகம் பெயர் என்ன???
    எனக்கு நியாபகம் இல்லை ஒரு முறை ஏதோ செய்தி ஊடகத்தில் அந்த நிகழ்ச்சி பார்த்து இருக்கேன்
    அந்த சமூகம் பெயர் தெரிந்தால் சொல்லவும் அண்ணே

  2. நூனி‌ப் புல் மேய்ந்தது போல் தெரிகிறது உங்கள் கட்டுரை முழுமையாக எழுதவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!