home கட்டுரை, டிரெண்டிங் மாண்டோ என்னும் மகத்தான கலைஞன்

மாண்டோ என்னும் மகத்தான கலைஞன்

 

  • மஹாரதி

 

“பாரதநாடு சுதந்திரமடைந்து விட்டது; பாகிஸ்தானும் சுதந்திரமடைந்து விட்டது; ஆனால் இரண்டு நாடுகளிலும் மனிதன் இன்னும் அடிமையாகத்தான்இருக்கிறான், குறுகிய கண்ணோட்டத்தின் அடிமையாக; மதவாதசக்திகளின்அடிமையாக; காட்டுமிராண்டித்தனத்தின்அடிமையாக; மனிதாபிமானமின்மையின் அடிமையாக….”

இப்படி எழுதினார் சதாத் ஹசன் மாண்டோ (1912-55), தேசம் துண்டாடப்பட்டு ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் அருவியாக எல்லைகளில் கொப்பளித்த 1947 பிரிவினைக் காலகட்டத்தில்.

2017-ல் இருந்து கொண்டு சரியாக எழுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும்போது, இந்திய பாகிஸ்தானி எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்ட அந்த உருதுச்சிறுகதை மேதை சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சைக் கிழிக்கின்றன. அவர் படம் பிடித்துக் காட்டிய பல்வேறு நிதர்சனங்கள், நிஜங்கள், நிர்மூலவெளிகள் இன்றைக்கும் அவரது எழுத்துக்களைப் போலவே உயிர்ப்போடுதான் இருக்கின்றன.

மதவாதச் சக்திகள், ஜெகந்நாதத் தேர் வடிவில் உருண்டோடி, வெட்டவெட்ட முளைக்கும் மனிதத்தின் தலைகளை நசுக்கி, அச்சுறுத்திக் கொண்டே வருகின்ற இன்றைய காலகட்டத்தில், மாண்டோவின் எழுத்துக்களை மீண்டும் வாசிக்கும் கட்டாயம் எழுந்திருக்கிறது.

அவர் இறந்துவிட்டார், 62 ஆண்டுகளுக்குமுன்பு; ஆனால் அவர் எழுத்துக்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன; மனிதவரலாற்றில் அசாதாரணமான ஓர் சரித்திரத் துயரம் நிகழ்ந்தகாலத்தில் புலம் பெயரப்பட்ட, கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, சொத்துக்களை, சொந்த பந்தங்களை இழந்து நிர்க்கதியான, இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் – அல்ல- மனிதர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், வாலிபர்கள் அந்த எழுத்துக்களில் இன்னும் மரணம் தாண்டி முனகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மதத்தின் பேரால் நிகழ்ந்த மனிதவேட்டைச் சூறாவளியில், அதிகார வர்க்கத்தினர் எடுத்த அசாதாரணமான ஓர்முடிவு சாதாரண ஜனங்களை சம்ஹாரம் செய்தது. நேற்றுவரை ரம்ஜானுக்கு பிரியாணி கொடுத்த இஸ்லாமியநண்பன் திடீரென்று ஒருநாள் எதிரியாகிறான்; தீபாவளிக்கு தீபங்களும் பட்சணங்களும் ஏந்தி இஸ்லாமிய நண்பன் வீட்டுக்கு வந்த இந்து நண்பனும் திடீரென்று ஒருநாள் எதிரியாகிறான்.

பலநூற்றாண்டுகளாக இந்தியர்களாகவே இருந்தவர்கள், ஒரு துயரமான நாளில் பாகிஸ்தானியர்களாகவும், இந்தியர்களாகவும் முத்திரை குத்தப்பட்டு இடமாற்றி வைக்கப்பட்டனர்; வாழ்ந்த நிலத்தை, பழகிய பண்பாட்டை, படித்த இலக்கியத்தை, வழிபட்ட ஆலயங்களை, பள்ளிகளை, கல்லூரிகளை விட்டுப்போகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்; ஓர் இருத்தலியல்வலியைச் சுமந்து நிர்க்கதியானார்கள்.

மும்பையில் பத்திரிகை ஒன்றில் தன் சக பணியாளர் ஒருவர், “நீ மட்டும் என் நண்பனாக இல்லாதிருந்தால், இந்நேரம் உன்னை நான் கொலை செய்திருப்பேன்” என்ற வார்த்தைகளில் ஒலித்த சங்கொலி, மாண்டோவுக்குள் அவர் ஒரு இஸ்லாமியர் என்ற பிரக்ஞையை வலிந்து திணித்தது; வேதனையோடு தான்நேசித்த மும்பையை, திரைக்கதைகள்எழுதி, மதுவருந்தி, இலக்கியம் படைத்து, பேசிஉலாவி இருந்த மும்பையை விட்டு அவரை லாகூர்க்கு மூட்டை முடிச்சுகளோடு பயணப்பட வைத்தது. பிரிவினையின் வலி அவரது இதயத்திலிருந்து பேனாவுக்குள் குடியேறி காகிதங்களில் கதைகளாக விரிந்து கிடக்கின்றன.

இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மனிதர்கள் மதத்தின் பேரால் இடம் பெயர்ந்த சம்பவத்தை, அதிகார வர்க்கத்தினரின் கட்டாயத்தினால் ரத்தம் சிந்திய கோரத்தை, மாண்டோ “டோபாடெக்சிங்” கதையில் மிக நுட்பமாக,  ’பொன்னகரம்’ எழுதிய நமது புதுமைப்பித்தனின் சாட்டையடி பாணியில், வர்ணித்திருக்கிறார். பைத்தியக்காரர்களை எப்படி இந்தியாவும் பாகிஸ்தானும் பரிவர்த்தனை செய்கின்றன என்று சொல்வதுபோல பாசாங்கு செய்த பிரதிஅது; ஆனால் டெரிடாவின் கட்டுடைப்புச் சித்தாந்தத்தின் உதவியோடு பிரதியை உடைத்துப் பார்த்தால், தேன்கூட்டைக் கலைத்தது போலாகிவிடும். மாண்டோ அடைத்து வைத்திருந்த கிண்டல் என்னும் தேனீக்கள் வந்து கொட்டிவிடும். ”எனது ஊர் ’டோபாடெக்சிங்’ எங்கிருக்கிறது. இந்தியாவிலா இல்லை பாகிஸ்தானிலா?” என்று பைத்தியக்கார விடுதியில் தங்கியிருக்கும் பீஷன்சிங் கேட்கும் கேள்விக்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை. நியாயமான கேள்வி கேட்பவனுக்கு இங்கே பதில் இல்லை (இந்தக் கால கட்டத்திலும்தான்).

“அடபோங்கடா. எனக்கு இந்தியாவும் வேண்டாம்; பாகிஸ்தானும் வேண்டாம்; நான் இங்கேயே இருந்து விடுகிறேன்,” என்று ஒரு பைத்தியம் மரத்தில் ஏறி கிளையைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது,  அங்கே நின்று ஏளனம் செய்வது பைத்தியம் அல்ல. அது மாண்டோ.

பதினைந்து வருடங்கள் உட்காராமல் நின்றுகொண்டே இருக்கும் பீஷன்சிங் ஒருபைத்தியம். கால்கள் வீங்கியிருக்கின்றன. மாண்டோ என்ன சொல்ல வருகிறார்?

கதையின் ஆரம்பவரி மிகமிகச் சாதாரணமான, பத்திரிகைச் செய்திக்குறிப்பு ஒலியில் இருக்கிறது. “1947 பிரிவினை நிகழ்ந்து இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து இந்திய அரசுக்கும், பாகிஸ்தானிய அரசுக்கும் திடீரென்று தோன்றியது: குற்றவாளிகளைப் பரிவர்த்தனை செய்ததைப்போல, இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களை பாகிஸ்தான்அரசிடமும், பாகிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கிய முஸ்லீம்களை இந்தியஅரசிடமும் ஒப்படைத்து விடவேண்டும் என்று.”

சபாஷ்! சாதாரண வரியாஅது? எத்தனை உபப்பிரதிகள் அதற்குள் ஒளிந்து கிடக்கின்றன. டெரிடாவைத்தான்  அழைக்கவேண்டும்

ஓ! இத்தனைக் கண்றாவிகளுக்கெல்லாம் அதுதான் காரணமா? என்று இப்போது படிக்கும் வாசகனுக்குத் தோன்றும். தீர்க்கதரிசனம்!

அதனால்தான் புகழ் பெற்ற ‘கார்டியன்’ இதழ் மாண்டோவை, “துயரம்தரும் தீர்க்கதரிசனம் கொண்ட தைரியமான எழுத்தாளர்” என்று சொல்லிவிட்டு, அவர் இன்று அப்படிஎழுதியிருந்தால் அவர்க்குப் ”பதிப்பகத்தார் கிடைத்திருப்பார்களா” என்ற ஒரு வினாவையும் எழுப்பியிருக்கிறது.  (கார்டியன், ஜுன் 11, 2016)

பிரிவினை வலியை ஏராளமான இந்திய, பாகிஸ்தானிய எழுத்தாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். குஷ்வந்சிங், ஃபைஸ் அகமத்ஃபைஸ், மனோகர் மல்கோங்கர், பாப்சி சித்வா, சல்மான் ருஷ்டி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் மாண்டோ தென்னாசிய சிறுகதை எழுத்தாளர்களில் ஆகச்சிறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர். மாப்பசான், ஆஸ்கர்வொயில்ட், டி.எச்.லாரன்ஸ், காஃப்கா போன்றவர்களோடு ஒப்பிடப்படுபவர்.

ஒருமதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு மதத்துப் பெண்களை சூறையாடினார்கள் என்று  ‘பிரிவினைக்காலத்து இலக்கியம்’ பதிவு செய்திருக்கிறது. ஆனால் மதவெறியைவிட, தனிமனித வக்கிரங்களும், மதத்தைத் துஷ்பிரயோகப்படுத்தும் சுயநலமும்தான் பிரிவினைக் கலவரங்களில் தெரிந்தது என்பதுதான் அவர் கதைகளின் நிதர்சனம். வன்முறைக்குள்ளானது இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியனோஅல்ல; மனிதன். இதுதான் அவர் கதைகளின் அடிநாதம். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் அவரது மிக அருமையான படைப்பான “கோல்டோ” (அதைத்திற).

அமிர்தசரஸிலிருந்து லாகூர்க்கு பயணம் செய்தவர்கள் வன்முறைக்கு ஆளானதை அது விவரிக்கிறது. மனைவியை இழந்த சிராஜுதீன் இடது கன்னத்தில் மச்சம் கொண்ட தன்மகள் சகீனாவைத் தேடித்தேடி அகதி முகாம்களில் அலைந்து திரிவதை சித்திரமாக்குகிறது. காணாமல் போன தன் மகளைக் கண்டு பிடித்துத் தரும்படி ஆயுதம் ஏந்திய சிலஇளைஞர்களிடம் சிராஜூதீன் கேட்டுக் கொள்கிறார். அந்த இளைஞர்களும் அவளைக் கண்டு பிடிக்கிறார்கள்; அவளுக்கு உணவும் உடையும் தருகிறார்கள். பின்பு காட்சி மறைகிறது.

சிலநாட்கள் கழித்து மயக்கமான ஒருபெண்ணின் உடலைச் சிலர் தூக்கி வருகிறார்கள். முகாம் மருத்துவமனையில் ஒருஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண்ணின் முகத்தில் மச்சத்தைப் பார்த்ததும் மகள் கிடைத்து விட்டாள் என்று ஆனந்தத்தில் குதிக்கிறார் சிராஜூதீன். டாக்டர் அவளது கையைப் பிடித்து நாடி பார்க்கிறார்.‘கோல்டோ” என்கிறார். சிராஜூதீனைப் பார்த்து. அதாவது ’ஜன்னலைத்திற’ என்கிறார். மயக்கநிலையில் இருந்த பெண் அது தனக்கான கட்டளை என நினைத்துதான் அணிந்திருந்த சல்வாரின் இடுப்பு நாடாவை மெல்ல அவிழ்க்கிறார். அதைப் பார்த்து அரண்ட டாக்டரின் நெற்றி வியர்த்தது.

ஒரு சின்ன வார்த்தை; சிறியதொரு உடலசைவு; எத்தனை பயங்கரங்களை எப்படிப்பட்ட கோரஅனுபவத்தை வாசகனின் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறது. அவளைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். ஸ்தூலத்தால் சொல்லாமல் சூட்சுமத்தால் சொன்னது மாண்டோவின் வித்தகம்.

மாண்டோவின் கலை, மனசாட்சியின் புண்ணைக் குத்தி ரத்தத்தைப் பீறிட்டெழ செய்கிறது. அதைக் தாங்கமுடியாமல்தான், அவரது ‘தண்டாகோஷ்’ (ஆறிப்போனமாமிசம்) போன்ற கதைகளைக் காட்டி, அவர் கொடூரபாலியல் உணர்வுகளை, வக்கிரங்களை எழுதுகிறார் என்று அவர் மீது வழக்குப் போட்டது, பிரிட்டிஷ் இந்தியாவும், சுதந்திரமான பாகிஸ்தானும். முன்னது மூன்றுதடவை; பின்னது மூன்று தடவை. இன்று அவர் இருந்திருந்தால் அது பலதடவையாக இருந்திருக்கும்.

(மே 11, 2017 சதாத் ஹசன் மாண்டோவின் 105-வது பிறந்தநாள்)

2 thoughts on “மாண்டோ என்னும் மகத்தான கலைஞன்

  1. மிருகத்தின் வக்கிரம் கோபம் எல்லாம்
    வயிற்று பசிக்காக மட்டும் மனிதனது கோபம் வக்கிரம் உயர்ந்த சிந்தனை என்னும்ஆறாம் அறிவால் உண்டானது இந்த பிரபஞ்சத்தை அழிக்க வல்லது

  2. மாண்டோ இந்த பூமிக்கு உயிர்ப்புள்ள உண்மை வண்ணங்களை தெளித்த சிவப்பு சூரியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!