home டிரெண்டிங், நேர்காணல் முகநூல், கூகுள், அமேஸான் : பெரும் தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்

முகநூல், கூகுள், அமேஸான் : பெரும் தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்

ஃப்ராங்க்ளின் ஃபோயருடன் நேர்காணல்

 

ஆண்ட்ரூ கீன்

 

 World Without Mind: the Existential Threat of Big Tech என்ற நூலை எழுதிய ஃப்ராங்க்ளின் ஃபோயர் ஒரு இதழாசிரியர், நூலாசிரியர். அவருடைய How Soccer Explains the World என்ற நூல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகை, குறிப்பாக, அமெரிக்காவை, டிஜிட்டல் தொழில் நுட்பம் எப்படி கபளீகரம் செய்கிறது என்பதை முன்வைத்து, World Without Mind என்ற தனது நூலில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்.  ”ஃபோயர் தனது எச்சரிக்கைக் குரலுக்குப் பல ஆதாரங்களைச் சேர்க்கிறார். கூகுளின் விரிவாக்கங்கள் மனிதனின் தனித்தன்மையைக் குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவுக் கோட்பாட்டைப் புகுத்துகின்றன என்று கடுமையாக விமர்சிக்கிறார். உதாரணமாக, திசைகளைக்காட்டவும், நாம் விரும்பும் இடங்களுக்குப் போய்ச் சேரவும் நாம் இப்போது மூளையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து கூகுள் வரைபடங்களில் நம்பிக்கை வைக்கிறோம்.  அமேஸான் புத்தக வெளியீட்டைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து விட்டது. மிகப் பெரிய பத்திரிகையாளர்கள் கூடத் தங்கள் புத்தகங்களைப் பற்றிய கவலையில் அதனை விமர்சிக்க அஞ்சுகிறார்கள். ஃபேஸ்புக் அதனைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான பயனாளிகளைக்கொண்டு சோதனை செய்கிறது. அது விரும்பும் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு மறைமுகமாகத் தூண்டுகிறது. மந்தை உணர்ச்சிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மனிதர்களை எந்திரங்களோடு கலக்கச்செய்து மனிதத் தன்னறிவை நீத்துப்போகச் செய்யும் நுட்பத்தை சுட்டிக் காட்டுகிறார்.” என்று  Los Angeles Times இதழ் இவரைப் பாராட்டுகிறது.

 

இந்த நேர்காணல் செய்தவர்: ஆண்ட்ரூ கீன்.

 

ஆண்ட்ரூ கீன்: World Without Mind என்பதற்கு என்ன பொருள்?   

 

ஃப்ராங்க்லின் ஃபோயர்: நாம் பின்னால் வரப்போகும் அழிவைப் பற்றி நினைப்போம். மொத்தக் கண்காணிப்புக்கும் உட்படும் உலகை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம், மூலமுதலான புதுமையான மாற்றம் விளைவிக்கக்கூடிய நமது சிந்தனைகளைக் கவனிக்கும் கண்கள் நம்மைத் தடுக்கின்றன என்று நான் கவலைப்படுகிறேன். நாம் நமது அறிவுசார் விஷயங்கள் பலவற்றை எந்திரங்களின் கையில் (outsource) விட்டுவிடுகிறோம் என்று நான் கவலைப்படுகிறேன். மேலும் இந்த எந்திரங்கள் ஒருசில ஏகபோக உரிமை கொண்ட கூட்டிணையங்கள் (monopolistic corporates) கையில் இருக்கினறன. அறிவை உற்பத்தி செய்கிறவர்களை, – பத்திரிக்கையாளர்கள், நாவலாசிரியர்கள்,கட்டுரையாளர்கள் ஆகியோரைப் பிழிந்தெடுக்கும் ஒரு பொருளாதாரத்தை நாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நான் கவலைப்படுகிறேன். இவர்கள் தானே உலகம் என்ன என்று நாம் புரிந்துகொள்ள உதவுபவர்கள்? பெரிய தொழில்நுட்பக் குழுமங்கள் நமது அறிவின் முழு உருவத்தையும் படம் பிடிக்கத் தங்கள் வேவுச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றன என்று நான் கவலைப்படுகிறேன். சுருக்கமாகச் சொன்னால், சிந்தனை இல்லாத உலகை நோக்கி, தற்படைப்பாற்றல் இல்லாத ஆழமும் இல்லாத ஒரு உலகை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை முன்வைக்கும் பதம்தான் அது.

 

கீன்: உங்கள் துணைத்தலைப்பில் ‘வளரும் தொழில் நுட்பத்தின் இருத்தல் பற்றிய அச்சுறுத்தல்’  என்று நீங்கள் சொல்லவருவது உருவகமாக இல்லை. நேரடியான பொருளையே தருகிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கு நமது பண்பாட்டை, ஏன் நமது சமுதாயத்தைக்கூட கொன்று கொண்டிருக்கிறது என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்கள. நூலில் ஒரு அத்தியாயத்திற்கு ‘ஆசிரியரின் மரணம்’ என்று தலைப்பிட்டிருக்கிறீர்கள். இது ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட நாடகம் போல இல்லையா? ஒவ்வொரு தொழில்நுட்பமும் – எழுத்தைக் கண்டுபிடித்தது முதல், அச்சடிக்கப்பட்ட நூல்கள், நாவல், திரைப்படம், தொலைகாட்சி வரையில் – இப்படிப்பட்ட அழிவின் முன்னறிவிப்பாகத்தானே கருதப்பட்டு வந்திருக்கின்றன? எனினும் பண்பாடும், படைப்பாற்றலும், படைப்பாளிகளும் அவற்றைத் தாண்டிப் பிழைத்துத் தானே வந்திருக்கிறார்கள்! அப்படியானால் இன்று மட்டும் ஏன் வேறுபடுகிறது?  

 

ஃபோயர்: இருத்தல் என்று  நான் சொல்லும் போது அதற்கு நேரடியாகவே பொருள் கொள்கிறேன். மனிதர்களின் நீண்ட வரலாற்றில் நமக்குக் கருவிகள் இருந்திருந்தன. அந்தக் கருவிகள் நம்முடைய நீட்சிகள். அவை உன்னதமானவையும்கூட. அவை நம்மை வளப்படுத்தியிருக்கின்றன, புதியன காணச் செய்திருக்கின்றன. எனினும் இப்போது நம்முடைய எந்திரங்களோடு நாம் வித்தியாசமான இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த எந்திரங்கள் அறிவுடையவை. நமக்கு உலகை வடிகட்டித் தருகின்றன. நாம் மெய்நிலையைப் பார்க்கும் வழியை உருவாக்குகின்றன. உண்மையில் அவை மாயமெய்நிலையை உண்டாக்குகின்றன. விரைவிலேயே இந்த எந்திரங்கள் நமக்குள்ளேயே உட்புகுத்தப்படும். இதனால் என்ன தவறு? நாம் எந்திரங்களோடு மட்டும் நம்மை இணைத்துக் கொள்ளவில்லை. இந்த எந்திரங்களை லாபத்திற்காக இயக்கும் குழுக்களோடு நம்மை இணைத்துக் கொள்கிறோம். இதோ இதனால் இருத்தலுக்கான ஆபத்து – மனிதராக இருப்பதன் பொருளையே இந்த தொழில்நுட்பங்கள் மாற்றிவிடும். நாம் இதில் குதித்து விட்டோமென்றால், மீள்வது கடினம்.

 

கீன்: உங்களுடைய   இருத்தலின் நெருக்கடி  பற்றிய இந்தக் கதையாடல் தனிப்பட்டதாகவும் இருக்கிறது. முகநூலின் இணை நிறுவனர்களில் ஒருவர் New Republic- ஐ விலைக்குவாங்கி உங்களை அதிலிருந்து நீக்கினார். அந்தப் பத்திரிக்கையில் உங்களது அனுபவம் பெரிய தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தல் பற்றிய உங்களது கருத்துக்குக் காரணமா? இந்த மகத்தான தொழில்நுட்பத் ‘தாவலின்’ மத்தியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒருமனிதராக – உங்களைப் பற்றிய உங்களது சிந்தனையை அது பாதித்ததா?

 

ஃபோயர்: கண்டிப்பாக! இது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய நூல். என்னுடைய விவாதம் அனுபவத்திலிருந்து வருகிறது. New  Republic- லிருந்து காயம்பட்டு வெளியே வந்தது மட்டுமல்ல, வழியில் முகநூலின் மோசமான தாக்கம் பற்றிய அனைத்தையும் கற்றுக்கொண்டேன். ஃபிரெஞ்ச் வெளியீட்டுக் கூட்டிணையமான Hachette உடன் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தேன். புத்தக விற்பனை ஒப்பந்தம் பற்றி மறுபேரம் செய்தபோது அமேஸான், Hachette ஐ எப்படி ஆட்டிப்படைத்தது என்பதைக் கவனித்தேன். அமேஸானுடைய வியூகங்களையும், வெளியீட்டாளர்களையும் ஆசிரியர்களையும் அவர்களுடைய ஏகபோக உரிமையைப் பயன்படுத்தி கசக்கிப் பிழிந்ததையும் பார்த்து நான் பயந்துவிட்டேன். இந்தக் குழுமங்கள் தனி உரிமையை – ஏகபோகத்தைப்  பெற்றுவிட்டால், அவர்களுடைய மேடைகளை உலகம் சார்ந்திருக்கத் தொடங்கி விட்டால் நாம் அவர்களுடைய பணியாட்களாக ஆகிவிடுகிறோம்.

 

கீன்:  பெரிய தொழில்நுட்பத்தினால் இன்று ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை ஒப்பிடக்கூடிய வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றனவா? உதாரணமாக, இப்போதுள்ள சூழலை தொழில் புரட்சியின் தொடக்ககால வரலாற்றோடு ஒப்பிடமுடியுமா? அப்போதிருந்த இதயமில்லாத தொழிற்சாலை உரிமையாளர்கள், மிருகத்தனமான தொழிற்சூழல்கள், சுற்றுச்சூழலின் அழிவு, ஒழுங்கு முறையில்லாத சந்தை ஆகியவற்றோடு ஒப்பிடமுடியுமா?  

 

ஃபோயர்: இன்றைய ஏகபோக உரிமைகளுக்கு முன்னுதாரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், அப்படி எளிதான ஒற்றுமைகளைப் பார்ப்பதோடு நாம் இருந்துவிடக் கூடாது. இறுதியில் எல்லாம் சரியாக வேண்டும் என்றும் நாம் சமாதானப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், இந்த ஏகபோக உரிமைகள் முற்றிலும் மாறுபட்டவை. ஏனென்றால்அவற்றின் தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதலில் அவை அறிவுசார் தொழில்நுட்பங்கள். அவை வெறும் தொலைத்தொடர்பு அல்லது போக்குவரத்துச் சாதனங்கள் இல்லை. அவை நமது மெய்நிலையை வடிகட்டுகின்றன. இரண்டாவதாக, இவற்றோடு நமது இணைப்பு மிக நெருக்கமானது. கூகுளுக்கே நன்றாகத் தெரியும். தரவுகளையெல்லாம் கூட்டிச் சேர்த்து நமது மனநிலையைப் பற்றிய விபரமான படங்களைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். இவற்றிற்கு மேலாக நாம் அவர்களது தொழில்நுட்பத்தை நமது மணிக்கட்டுகளிலும், கண்ணாடிகளாவும் அணிந்து கொள்ளப் போகிறோம். ஒருவேளை நீங்கள் இப்போதே அணிந்திருக்கலாம். அதன் பிறகு தொழில் நுட்பம் நம்மோடு இன்னும் நெருக்கமாக ஒட்டிக்கொள்ளும். ஷுகர்பெர்க் மற்றும் மஸ்க் ஆகியோர் தொலைவிலுணர்தல் (telepathy) செய்தித் தொடர்பு பற்றி மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பிரின்,கூகுளை நமது மூளையின் உள்ளே பொருத்துவது பற்றி யோசிக்கிறார்.

 

 கீன்:  இந்த  நூலை உங்கள் தந்தை ஆல்பர்ட் ஃபோயருக்குக் காணிக்கையாக்கியிருக்கிறீர்கள். அவர் முதலீட்டு நிதிய எதிர்ப்பு வழக்கறிஞர் (Anti-Trust lawyer). நீங்கள் இன்றைய ஏகபோக உரிமைகள் பற்றியே பேசுகிறீர்கள். இந்த அச்சுறுத்தலை நீதிமன்றங்கள் மூலம் தடுப்பதுதான் சரியா? உங்களுடைய இன்னொரு அறிவுசார் வீரரான லூயிஸ் பிராண்டேஸ் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஏகபோக உரிமையாளர்கள் சிலரை உடைத்த வழியில் கூகுள், அமேஸான் போன்ற குழுமங்களையும் உடைக்கவேண்டுமென்று நினைக்கிறீர்களா?  

 

 ஃபோயர்: ஒரு ஆள் அல்லது குழுமத்தின் ஏகபோக ஆட்சி பற்றி விவாதிக்க வேண்டுமென்று கூறுகிறேன்  நான். பல ஆண்டுகள் எனது தந்தை தனி ஆளாக நின்று கார்ப்பரேட் ஆதிக்கத்தனத்திற்கு எதிராகப் போராடினார். இதுபற்றி நான் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த நாட்டின் உயிர்த்துடிப்புள்ள மரபு என்பது, கூகுள் அமேசான் போன்ற குழுமங்களைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுதான் என்பதை  அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். இன்னும் பின்னோக்கி தாமஸ் ஜெஃபர்சனிடம் போனால், நமது மக்களாட்சித் தத்துவம் பிழைக்க அது தேவையென்பது தெரியும். அந்தப் பாரம்பரியத்தை நாம்மீட்டெடுக்க வேண்டும். ஆம், அப்படியென்றால் கூகுள், அமேஸான் போன்ற குழுமங்களை உடைக்க வேண்டும். அல்லது குறைந்தது அவர்கள் புதிய துறைகளில் தங்கள் ஏகபோகஉரிமையை நீட்டிக்காமலாவது செய்யவேண்டும். என்னுடைய தந்தையைப் போல இதில் நிபுணன் என்று நான் சொல்லமாட்டேன். முதலீட்டு நிதியத்துக்கு எதிரான கட்டுப்பாடுகளின் நுணுக்கங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் இந்தச் சட்டங்கள் இந்த சக்திவாய்ந்த குழுமங்களைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அவற்றால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்தவன்.

 

கீன்:  பெரும் தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல் ஒரு கோட்பாட்டு ரீதியானது என்று கூறுகிறீர்கள். சிலிக்கன் பள்ளத்தாக்கின் பண்பாட்டுக்கு எதிரான தொடக்கங்களை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். ஒரு குழுவின் ஏகபோகக் கொள்கை அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது என்று நினைவுபடுத்துகிறீர்கள். ‘சிலிக்கான்  பள்ளத்தாக்கு எப்போதுமே அப்படியாகத்தான் இருந்து வந்திருக்கிறது’ என்று எழுதுகிறீர்கள். எனவே ‘ஏகபோக உரிமை சிலிக்கான் பள்ளத்தாக்கின் ஆன்மீக தாகம்‘ என்று குறிப்பிடுகிறீர்கள். தனிமனித சுதந்திரத்தை முகநூல் அரிக்க விரும்புகிறது. கூகுள் தன்னுடைய விழுமியங்களையும் மறையியல் நம்பிக்கைகளையும் உலகின் மேல் திணிக்கிறது’ என்றுகுறிப்பிடுகிறீர்கள். எனவே நமது அறைகூவல் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு எதிராகச் சிந்திப்பது என்பது போலத் தோன்றுகிறது. நாம் என்ன சிந்திக்க வேண்டும்?       

 

ஃபோயர்: நாம் நமது அறிவுசார் வாழ்க்கையில் செயல் திறனுடைய செயல்களில் பங்கெடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் தங்களது தொலைபேசியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முயலுகிறார்கள். ஏன்? ஏனென்றால் அது பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. நான் இந்தப்பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போதே என்னுடைய தொடர் சிந்தனையிலிருந்து என்னைப் பிரிக்க டிவிட்டரிடமிருந்தும், ஆப்பிள் நியூசிலிருந்தும் அழைப்புக்கள் வருகின்றன. நாம் நமது மனித உள்மனத்தைக் காக்கும் வழிகளைக் காணும், வேண்டும்போது தொடர்பை அறுக்கும் கணங்களைத் தேடும், மிதமாகச் செயல்படக்கூடிய, நவீன தொழில்நுடபங்களை எதிர்க்கும், தத்துவார்த்த (Luddism)வகையைத் தேடவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தக் கணங்கள் வாசிக்கும்போது ஏற்படுகின்றன. காய்ந்துபோன மரங்களிலிருந்து உண்டாக்கப்பட்ட இரண்டு அட்டைகளுக்கு இடையில் உள்ள அந்தப் புத்தகம்தான் என்னுடைய தனிப்பட்ட சிந்தனையை நான் நிலைப்படுத்த உதவுகிறது. பெரிய தொழில்நுட்பத்திலிருந்து எனக்குப் புகலிடம் அங்குதான் கிடைக்கும். தனிப்பட்ட மனிதரின் அந்தரங்கத்தை (Privacy) நாம் போதுமான அளவு மதிப்பதில்லை. நமக்கு அந்த விழுமியங்களின் நோக்கம் புரிவதில்லை;. ஆம். நம் மதிப்பெண்கள் வெளியில் தெரிவதை விரும்பமாட்டோம். ஆனால் உண்மையில் அது மையக்கருத்து இல்லை. நமக்கு எது தேவையென்றால் நாம் சிந்திப்பதை யாரும் கவனிக்கமுடியாத ஓர் இடம் வேண்டும். யாரோ நம்மைக கவனிக்கிறார்கள் என்பது தெரிந்தால் நாம் நம்மைக் கவனிப்பவர்களுக்குத் தகுந்தவாறு இருக்கத் தொடங்குகிறோம். ஏற்கனவே இருந்த கருத்தை ஒட்டியே சிந்திக்கிறோம். அதாவது நாம் சிந்திப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்; அல்காரிதங்களால் (கணினியில் பயன்படும் தர்க்கக் கோட்பாடுகளால்) திணிக்கப்படும் செய்திகளையும், தகவல்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது; நமது தொலைபேசிகளை மயக்க நிலையில் பயன்படுத்தக் கூடாது.

 

கீன்:  இப்படிப்பட்ட உயிர் வாழ்க்கை முறையை ‘இயற்கை மதி’ (organic mind)) என்று அழைக்கிறீர்கள். சில ஆண்டுகளாகக் காணப்படும் இயற்கை உணவு இயக்கத்தின் வளர்ச்சிக்கு இதை ஒப்பிடுகிறீர்கள். இயற்கை மதியின் வளர்ச்சியில் உணவுத் தொழிற்சாலையின் வரலாறு பற்றி எதைத் தெரிந்து கொள்கிறீர்கள்? உண்மையில் மதிக்கு -அறிவுக்கு – மொத்த உணவுகளை நாம் உண்டாக்கிவிடுவோமென்றால் அதையும் அமேஸான் விலைக்கு வாங்கி விடும் என்று கவலைப்படுகிறீர்களா?   

 

ஃபோயர்: முன்னொரு காலத்தில் தொலைக்காட்சி விருந்துகளையும் பலசரக்கு கடைகளை நிரப்பி இருந்த பதம் செய்யப்பட்ட உணவு வகைகளையும் வாயைப் பிளந்து கொண்டு  சாப்பிட்டோம். அவற்றின் ருசியும் பிரமாதம். ஆனால் பத்திருபது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நம்மைப் பருமனாக்குவதற்கென்றே தயாரிக்கப்பட்டவை அவை என்று புரிந்தது. அவை இந்த நாட்டின் உணவுப்பொருள் உற்பத்தி செய்கின்ற முறையையும் விற்பனையையும் மாற்றி சுற்றுப்புறத்தை நாசப்படுத்திவிட்டன. நமது அறிவின் வழியாகச் செலுத்துபவற்றிற்கும் அப்படியே நிகழ்கிறது என்பதால் நான் கவலைப்படுகிறேன். நம்முடைய அறிவுசார் தொழிற்சாலைகள் சக்தி வாய்ந்த புதிய காவல்காரர்களால் ஆட்டிப்படைக்கப்படுகின்றன. உற்பத்திக்கான ஒரு புதிய அறிவியலைச் சுமத்துகின்றன. அதாவது இதழியல் நம்மை ஒருவகைப் போதைக்கு அடிமையாக்க இயக்கப்படுகிறது. இதுமன அழுத்தத்தைத்தரும் உருவகம். நாம் பதப்படுத்தப்பட்ட உணவின் ஆபத்துகளுக்குத் காலம் கடந்து விழித்துக் கொண்டோம். பண்பாடு பற்றிய ஆபத்து பற்றியும் விழித்துக் கொள்வோம் என்று நம்புகிறேன். மதிக்கும் – அறிவுக்கும் – ஒரு இயற்கை இயக்கத்தை உண்டாக்க முடியும் என்று நம்புகிறேன். செய்தியையும், பண்பாட்டையும் உண்டாக்குவதில் விழுமியத்தை வலியுறுத்தித் தருவோம். தரத்திற்காக திறமையைத் தியாகம் செய்வோம். சந்தையில் காய்கறிகள் வாங்கும்போது அதைத்தான் செய்கிறோம்.

 

கீன்:  கடைசியாக, நான் அந்த  T  – யில்  தொடங்கும் வார்த்தையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. (அவரைப்பற்றிப் பேசுவதைக் கேட்பதில் சலிப்புத் தட்டிப் போயிருக்கும் எல்லா வாசகர்களும் மன்னிக்க வேண்டும்) டிரம்ப், ‘செசில் என்ற சிங்கமாகத் தொடங்கி, அமெரிக்க அதிபராக முடிந்துவிட்டார்’ என்று சொல்கிறீர்கள்; டொனால்ட் டிரம்பின் அரசியல் வெற்றியை டிஜிட்டல் பண்பாட்டின் ‘வைரஸோடு’ இணைக்கிறீர்கள். இவ்வாறு டிரம்பின் கதையாடலை சிலிக்கான் பள்ளத்தாக்கு, பெரிய தொழில் நுட்பத்தோடு பொருத்துகிறீர்கள். இணையதளம் இல்லாமல் நாம் டிரம்பை அணுகியிருக்க முடியுமா? மனித இனத்தின் வருங்காலத்திற்கு முன்னே இருக்கும் பெரிய ஆபத்து எது?  DT(டொனால்ட் டிரம்ப்)யா, B.T (பெரிய தொழில் நுட்பம்)யா?    

 

ஃபோயர்: முகநூலில் நாம் டிரம்பைக் குற்றம் சொல்ல முடியுமா? முடியும் என்று நினைக்கிறேன். டிரம்பை முன்னிலைப்படுத்தி மேலே கொண்டுவர ரஷியர்கள் முகநூலை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்று நாம் பார்க்கிறோம். ஹிலாரியைப் பற்றிய பொய் செய்திகள் வாக்காளர்களை எப்படிக் கவர்ந்தன என்பது, மிக ஆழமாக இணையதள யுகத்தின் விழுமியங்கள் எப்படி டிரம்பை முன்னால் தள்ளின என்பதெல்லாம் என்னைத் திகைக்க வைத்தன. அதாவது ஊடகம் இப்போது இணையதளப் போக்குவரத்து பற்றி மிகுந்த அக்கறை காட்டுகிறது. டிரம்ப் ஒரு போக்குவரத்து ஹீரோ. அவரது சர்க்கஸ் காட்சி தோன்றினால், உடனே அதைப்பலர் ‘கிளிக்’ செய்து பார்ப்பார்கள். (முன்னரெல்லாம் செய்தித்தாள் விற்பனை பற்றியும், தொலைக்காட்சித் தரவரிசைகள் (TV ratings) பற்றிக் கவலைப்பட்டார்கள். ஆனால் இப்போது இணையதளப் போக்குவரத்து பற்றிய ஆர்வம் மீதூறுகிறது. போக்குவரத்து ஆட்டத்தில் (Traffic game) வெற்றிபெற பல மில்லியன் கண்கள் தேவைப்படும் அதிக எண்ணிக்கையிலுள்ள பார்வையாளார்களின் விருப்பு வெறுப்புகளுக்குத் தகுந்தாற்போலக் காட்டினால்தான் முடியும்). கண்டிப்பாக மனித இனத்திற்கு உடனடியான ஆபத்து டிரம்ப் தான். அவர் பகுத்தறிவில்லாத நடிகர். மார்க் ஷுகர்பெர்க் அணுஆயத நெருக்கடியை ஏற்படுத்த முடியாது, ஒட்டுமொத்தமாக மக்களை வெளியேற்றும் ஆணையைப் பிறப்பிக்க முடியாது. டிரம்ப் முட்டாள், தொழில் நுட்ப டைட்டன்கள் கெட்டிக்காரர்கள். ஆனால் இது அவ்வளவு நல்ல கேள்வி இல்லை.

 

தமிழாக்கம் : ச.வின்சென்ட்

 

ஆண்ட்ரூ கீன்: பிரிட்டிஷ்-அமெரிக்கத் தொழில் முனைவர், நூலாசிரியர். இன்றைய இணயதளப் பண்பாடும், வலைத்தளமும் பண்பாட்டைச் சீரழிக்கின்றன எனற கருத்துடையவர். The Cult of the Amateur, The Internet is not the Answer ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!