home உன்னதம், சிறுகதை முதலாம் இலக்கச் சிறை

முதலாம் இலக்கச் சிறை

  • சிமமண்டா அடிச்சி

 

முதன் முறையாக எங்களது வீட்டில் திருடியவன் எமது அயல்வீட்டைச் சேர்ந்த ஒஸிட்டா. சமையலறை ஜன்னலூடாக ஏறிப் புகுந்து எங்களது தொலைக் காட்சி, வீடியோ பார்க்கும் கருவியுடன்  அப்பா அமெரிக்காவிலிருந்து வரும்போது கொண்டு வந்த “Purple Rain” “Thriller”  ஆகிய படங்களின் வீடியோ நாடாக்களையும் திருடிச் சென்றிருந்தான். இரண்டாவது முறை நடந்த திருட்டைச் செய்தவன் எனது சகோதரன் நமாபியா. யாரோ திருடியதைப் போல் ஏமாற்றி அம்மாவின் தங்க நகையை எடுத்துக் கொண்டு போயிருந்தான்.

இந்தத் திருட்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை நடந்தது. அம்மாவும் அப்பாவும் அவர்களது பெற்றோரைப் பார்ப்பதற்காகத் தமது சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால் நமாபியாவும் நானும்தான் சர்ச்சுக்குப் போயிருந்தோம். அம்மாவின் பச்சை நிற Peugeot 504’  காரை அவன்தான் ஓட்டி வந்திருந்தான். வழமைபோல ஒன்றாகத்தான் சர்ச்சில் இருந்தோம். ஆனால் அன்று யாருடையவாவது அழுக்குத் தொப்பியைப் பார்த்தோ, கிழிந்து நைந்த மேலாடையைப் பார்த்தோ முழங்கையால் ஆளுக்காள் இடித்து, அசிங்கமாக இளித்துச் சிரிக்காதிருந்து விட்டோம். சர்ச்சில் இருந்த பத்தாவது நிமிடத்தில் என்னிடம்; ஒரு வார்த்தையும் சொல்லாமல் நமாபியா அங்கிருந்து வெளியேறியிருந்தான். ‘பிரார்த்தனை முடிந்து விட்டது, அமைதியாகச் செல்லுங்கள்’ என்று பாதிரியார் சொல்வதற்குச் சில கணங்களுக்கு முன்தான் அவன் அங்கு வந்தான். நான் லேசான எரிச்சலோடுதான் நின்றிருந்தேன். சிகரெட் புகைப்பதற்காகவோ அல்லது காரைத் தனியே எடுத்துக் கொண்டு வரும் சந்தர்ப்பம் ஒன்று அவனுக்குக் கிட்டியுள்ளதால் யாராவது ஒரு பெண்ணைப் பார்ப்பதற்காகவோ அவன் போயிருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அப்படியென்றாலும் கூட அவன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்.

எதுவும் பேசாமல் வீட்டை நோக்கிச் சென்று முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கி அவன் வீட்டுக் கதவைத் திறந்து நுழைந்தான். நான் முன்றிலில் நின்ற செடியிலிருந்து சில பூக்களைப் பறித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததும் முன்னறையில் நின்றிருந்த நமாபியா சொன்னான்:-

‘நமது வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது!’

அந்த அறைக்குள் நுழைவதற்கு எனக்கு ஒரு கணம் போதுமாயிருந்தது. லாச்சி இழுத்தத் திறக்கப்பட்டுக் கிடந்த விதத்தில் அது திட்டமிடப்பட்ட ஏற்பாடு என்று புரிந்தது. அல்லது எனது சகோதரனைப் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று சொன்னால் புரிந்து கொள்ளப் போதுமானது. பின்னர் பெற்றோர் வந்ததும் அயலவர்கள் கூட ஆரம்பித்தனர். ‘ஐயோ’ என்றனர். ஆத்திரத்தை வெளிப்படுத்துவது போலத் தமது விரல்களை மடக்கித் தோள்களைக் குலுக்கினர். மேல் மாடியில் உள்ள எனது அறைக்குச் சென்று அமர்ந்தேன். நினைக்க நினைக்க அருவருப்பாக இருந்தது. நமாபியாதான் நிச்சயமாக இதைச் செய்திருக்கிறான். அப்பாவும் இதை அறிவார். ஜன்னலில் உள்ள பலகைகள் உள்புறமிருந்து வெளிப்புறத்துக்குத் தள்ளப்பட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். (இந்தமாதிரி விஷயங்களில் நமாபியா கைதேர்ந்தவன். பிரார்த்னை முடிவதற்குள் சர்ச்சுக்கு வந்து விட வேண்டும் என்ற அவசரம் அவனுக்கு!)

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அம்மா நகையை வைத்திருக்கும் இடம் உலோகப் பெட்டியின் இடதுபுறப் பின்பக்கம் என்பது திருடனுக்கு மிகச் சரியாகத் தெரிந்திருக்கிறது. நமாபியா தனது கலங்கிய கண்களால் அப்பாவைப் பார்த்தான். கடந்த காலத்தில் தான் தப்பாக நடந்தது உண்டு என்றும் அது பெற்றோரை வருத்தப்படுத்தியிருப்பது தெரியும் என்றும் சொன்ன அவன், இதைத் தான் செய்யவே இல்லையென்று சாதித்தான். சொல்லி விட்டுப் பின் கதவால் வெளியேறிய நமாபியா அன்றிரவு வீடு திரும்பவில்லை. அடுத்த இரவும் வரவில்லை. அதற்கடுத்த இரவும்கூட வரவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு பியர் வாசனையுடன் வந்த அவன் அழுது புலம்பியபடி மன்னிப்புக் கேட்டான். Enugu  வில் உள்ள Hausa traders ல் நகையை அடகு வைத்துப் பணத்தைச் செலவழித்து முடித்து விட்டதாகச் சொன்னான்.

‘என்னுடைய நகைக்கு அவர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்?’

– அம்மா கேட்டார்.

அவன் பதில் சொன்னபோது தனது இரண்டு கரங்களையும் தலையில் வைத்துச் சொன்னார்:-

‘ஓ… ஓ… என் ஆண்டவன் என்னைக் கொன்று விட்டான்….’

அம்மாவை ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது எனக்கு!

எப்படி நகையை அடகு வைத்தாய், எதற்காகவெல்லாம் பணத்தைச் செலவு செய்தாய், யார் யாருடன் சேர்ந்து அப்பணத்தைச் செலவிட்டாய் என்பதையெல்லாம் ஓர் அறிக்கையாக எழுதித் தரும்படி அப்பா நமாபியாவிடம் கேட்டார்.

நமாபியா உண்மை சொல்வான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அறிக்கைகளை விரும்பும் பேராசிரியரான அப்பா அவன் உண்மையை எழுதுவான் என்று நம்பினார். எல்லாவற்றையும் எழுத்தில் எடுத்து அவற்றை அழகாகக் கோப்பிட்டு வைப்பது அப்பாவுக்கு வழக்கம்.

நமாபியாவுக்கு வயது பதினேழு. இரண்டாம் நிலைக் கல்விக்கும் பல்கலைக் கழகக் கல்விக்கும் இடையில் உள்ளவன். அவனைப் பிரம்பால் அடிக்க முடியாது. அப்பா என்ன செய்யப் போகிறார்? ஆனால் நமாபியா அறிக்கையை எழுதிக் கொடுத்தான். அப்பா அதனைத் தனது தஸ்தாவேஜூகள் வைக்கும் இரும்பு அலுமாரிக்குள் எமது பாடசாலைத் தஸ்தாவேஜூகளுடன் சேரத்துப் பத்திரப்படுத்தினார்.

‘இப்படித்தான் தனது அம்மாவை இவன் நோவினைக்குள்ளாக்கியிருக்கிறான்!’

– இந்த விடயத்தில் அப்பா கடைசியாகச் சொன்னது இவ்வளவுதான்!

ஆனால் அம்மாவை நோவினைப்படுத்தும் நோக்கில் இதைச் செய்யவில்லை. வாழ்நாள் முழுக்கச் சிறுகச் சிறுகச் சேமித்த இந்த நகையொன்றுதான் வீட்டில் பெறுமதிக்குரியதாக இருந்தது என்பதுதான் உண்மையான காரணம். இதை அவன் செய்ததற்கு இன்னொரு காரணம் மற்றையப் பேராசிரியர்களின் பிள்ளைகளும் இதே மாதிரி செய்கிறார்கள் என்பதும்தான். அமைதியான எங்கள் பல்கலைக் கழகத்தில் இது திருட்டுக்களுக்கான காலம்.

“Sesame Street”  பார்த்துக் கொண்டும் Enid Blyton னின் நூல்களை வாசித்துக் கொண்டும் காலையுணவுக்கு  கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிட்டும் வளர்ந்து தூசு படியாத சப்பாத்துக்களுடன் பல்கலைக் கழக ஆரம்பக் கல்விக்கு வந்த இளைஞர்கள் இப்போது அயலவர்களின் வீட்டு ஜன்னல்களில் உள்ள நுளம்பு வலைகளை அறுப்பதும் கண்ணாடியணிகளைக் கழற்றுவதும் பின் ஜன்னல்களூடாகப் புகுந்து தொலைக் காட்சிப் பெட்டிகள் மற்றும் வீடியோ பார்க்கும் கருவிகளைத் திருடிச் செல்லவும், தொடங்கியுள்ளனர்.

திருட்டுப் பயல்கள் பிரபலமானவர்கள். பின்னேரங்களில் தமது தந்தையர்களின் கார்களில் சாரதி ஆசனத்தைப் பின் தள்ளி அமர்ந்து கைகளை நீட்டி ஸ்டியரிங்கில் வைத்த படி ஓட்டிச் செல்வார்கள். நமாபியா திருடுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எமது வீட்டில் திருடிய ஒஸிட்டா எந்தக் குறுகிய இடத்துக்குள்ளும் நுழையக் கூடியவன் மட்டுமல்ல, குறுக்கு வழயில் மிக நுணுக்கமாகவும் சிந்திக்கக் கூடியவனும் ஒரு பூனையைப் போல் அமைதியாக நடந்து செல்பவனும் கூட. அவனது ஆடைகள் மிக நேர்த்தியாக அயர்ன் செய்யப்பட்டிருக்கும். எங்காவது ஓர் ஒதுக்குப் புறத்தில் அவனை நான் காண்பது வழக்கம். அப்போதெல்லாம் நான் எனது கண்களை மூடி என்னிடம் எதையோ கேட்க அவன் வருவது போல் கற்பனை செய்வதுண்டு. ஆனால் அவன் என்னை ஒருபோதும் அவதானித்ததில்லை. அவன் எங்கள் வீட்டில் திருடிய பிறகு பேராசிரியர் எபுபேயின் வீட்டுக்குச் சென்று திருடி வந்த பொருட்களைத் தருமாறு எமது பெற்றோர் கேட்கவில்லை. ஆனால் திருடியது ஒஸிட்டாதான் என்பது அவர்களுக்கும் தெரியும். அவன் நமாபியாவை விட இரண்டு வயது மூத்தவன். அதே போல் அநேகமான திருடர்கள் நமாபியாவை விடச் சற்று மூத்தவர்களாகத்தான் இருந்தார்கள். அதனால்தான் நமாபியா மற்றவர்களின் வீடுகளுக்குள் புகுந்து திருட முயற்சிக்கவில்லை. அம்மாவின் நகையைத் திருடியது பற்றிக் கவலைப்படுமளவுக்கு அவன் இன்னும் உணரும் நிலைக்கு வந்திருக்கவில்லை.

நமாபியா பெரிய கண்களும் பொது நிறத்துடனுமாக அம்மாவைப் போல இருப்பான். நேர்த்தியான வாயமைப்பும் கனிந்த பேச்சும் ஒரேமாதிரித்தான் இருக்கும். சந்தைக்கு எங்களை அழைத்துக் கொண்டு சென்றால், வியாபாரிகள் அம்மாவைப் பாரத்துக் கேட்பார்கள்:

‘உன்னுடைய பொது நிறத்தை மகனுக்கும் கருப்பு நிறத்தை மகளுக்கும் ஏன் கொடுத்தாய்? இவ்வளவு அழகையும் இவன் என்ன செய்யப் போகிறான்?’

எந்த அம்மாவாக இருந்தாலும் தமது மகனின் அழகைப் பற்றி யாராவது குறும்பாகப் பேசினால் மகிழ்ச்சியடைந்து கொடுப்புக்குள் சிரித்துக் கொள்ளாமலா இருப்பாள்?

பதினொராவது வயதில் நமாபியா பாடசாலை ஜன்னல் கண்ணாடியைக் கல்லெறிந்து உடைத்தான். புதிய கண்ணாடி பொருத்துவதற்கு அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா காசு கொடுத்தாள். இரண்டொரு வருடங்களுக்குப் பிறகு அப்பாவின் கார்ச் சாவியை சவர்க்காரத்தில் பதித்தெடுத்தான். கள்ளச் சாவி செய்பவனிடம் நமாபியா அதைக் கொண்டுசென்றதை நல்ல வேளையாக அப்பா அறிந்து கொண்டார். அம்மா விஷயத்தை விளங்கிக் கொள்ளாமல் நமாபியா பரிசோதனை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவனுக்கு வேறு என்ன தெரியும் என்றும் பிதற்றுவார். ஒரு முறை அப்பாவின் அறையிலிருந்த பரீட்சைக் கேள்விகளைத் திருடி அவரது மாணவர்களுக்கு விற்ற போது, அம்மா அவனைப் பார்த்துச் சத்தம் போட்டார். பிறகு, அப்பாவிடம், அவனுக்கு இப்போது பதினாறு வயது ஆகிறது.. கைச் செலவுக்குக் கொஞ்சம் அதிகமாகப் பணம் கொடுத்தால் நல்லது என்று சிபாரிசு செய்தார்.

அம்மாவின் நகையைத் திருடி விற்றதற்காக அவன் மனம் வருந்தினானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனது சகோதரனின் கவர்ச்சியான, புன்னகை முகத்தைக் கொண்டு அவன் என்ன நினைக்கிறான் என்பதை என்னால் சொல்ல முடியாது. நகைத் திருட்டு விஷயமாக நானும் அவனும் பேசிக் கொண்டதில்லை. பெற்றோரும் கூடப் பேசியதில்லை. அம்மாவின் தங்கை அம்மாவுக்குத் தங்கக் காதணி ஒன்றை அனுப்பியிருந்த போதும் – இத்தாலியிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யும் கவர்ச்சிப் பெண்ணான திருமதி மோஸியிடம் அம்மா ஒரு தங்கச் சங்கிலியை தவணைக் கட்டணத்தில் வாங்கி மாதா மாதம் அவளது வீட்டுக்குச் சென்று அதற்குப் பணம் செலுத்திய போதும் – அம்மாவின் நகைக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாங்கள் பேசிக்கொள்வதில்லை. அப்படியொரு விஷயம் நடந்ததாக நாங்கள் யாரும் நமாபியாவுக்குக் காட்டிக் கொள்ளாதமைக்கு முக்கிய காரணம் என்னவெனில் இதை மறந்து அவன் ஒரு புதிய மனிதனாக ஆகுவதற்கான ஓரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கற்கும் போது அவன் கைது செய்யப்படாதிருந்திருந்தால் நகைத் திருட்டு ஒரு போதும் வெளியே வந்திருக்காது.

அப்போது Nsukka பல்கலைக் கழகத்தில் பக்தி சிரத்தைக் காலமாக இருந்தது. அதாவது ஆடல் பாடலுடன் கூடிய ஒரு வகையான சமய நம்பிக்கை கொண்டவர்களது கொண்டாட்டக் காலம். அதே வேளை பல்கலைக் கழகம் முழுவதும்  ‘பக்தி சிரத்தை வேண்டாம்!’ என்கிற பெரிய எழுத்துக்களிலான பேனர்களும் சுவரொட்டிகளும் நிறைந்திருந்தன. ‘The Buccaneers’, ‘The Pirates’  –  ஆகியன அன்றைய பிரதான சமயக் குழுக்களாக இருந்தன. இவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த சகோதரத்துவ மனப்பான்மையுள்ளவர்களாக இருந்த இவர்கள் பின்னர் படிப்படியாக வேறு விதமாக மாற்றம் பெற்றனர். இவற்றில் அங்கம் வகிக்கும் பதினெட்டு அளவு வயதுக்காரர்கள் அமெரிக்கன் ‘ரப்’ இசையில் புகழ் பெற்று விளங்கிய போதும் பின்னணியில் மோசமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆங்காங்கே ஒரு சிலர் அவ்வப்போது இறந்து கிடக்கக் காணப்பட்டனர். துப்பாக்கியும் துன்புறுத்தலும் இவர்களுக்குள் பொதுவான அம்சங்களாக ஆகிவிட்டிருந்தன.

சமயக் குழுவில் அங்கம் வகிக்கிறானா என்று பெற்றோரும் மிக உன்னிப்பாக, ஆனால் அமைதியாக நமாபியாவை அவதானித்துக் கொண்டிருந்தனர். சமயக் குழுக்களில் உள்ள இளைஞர்கள் மிகவும் பிரபல்யமானவர்கள். நமாபியா அவர்களை விடப் பிரபல்யமானவன். ஆனால் இளைஞர்கள் அவனைப் ‘பயந்தாங்கொள்ளி’ என்ற பட்டப் பெயர் கொண்டு வெளிப்படையாகவும் சத்தமிட்டும் அழைத்தனர். இளைஞர்கள் அவனைத் தாண்டிச் செல்லும் போது கைகுலுக்கிக் கொள்வார்கள். இளம் பெண்கள் ‘ஹலோ’ சொல்லியபடி அவனை அணைத்துக் கொள்வார்கள்.

நமாபியா எல்லா விருந்துகளுக்கும் செல்வான். பல்கலைக் கழகத்தில் உள்ள சாதுவான ஒருத்தன் அழைத்தாலும் ஒரேயிடத்தில் அமர்ந்து ஒரு பெட்டியில் உள்ள எல்லா பியர் போத்தல்களையும் குடிக்கக்கூடிய, தினம் ஒரு சிகரெட் பாக்கெட் ஊதிப் பழக்கப்பட்ட நகரில் வாழும் மூர்க்கக் குணம் கொண்டவன் அழைத்தாலும் சரியே. குழுக்களிலுள்ள சகல இளைஞர்களுடனும் அவன் நன்கு பழகினாலும் தன்னளவில் அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவில்லை என்றே தெரிந்தது. அவன் இவற்றில் இணையாத துணிச்சல் உள்ளவனா அல்லது இவற்றில் இணைவதற்குத் தயக்கம் காட்டுபவனா என்று முழுமையாக என்னால் கணிக்க முடியவில்லை.

ஏதாவது ஒரு குழுவில் இருக்கிறாயா என்று நான் அவனை ஒரு முறை கேட்ட போது, அவன் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான். ‘நிச்சயமாக இல்லை!’ என்று அவன் பதில் சொல்வதற்கு முன்னர் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாகத் துருவிப் பார்த்திருக்கலாமோ என்று நினைத்தேன். நான் அவனை நம்பினேன். அப்பாவும் அவனை நம்பினார். ஆனால் எங்கள் நம்பிக்கையில் மாற்றம் இருந்தது. ஏனென்றால் குழுக்களில் இணைந்திருப்பதற்காக அவன் கைது செய்யப்பட்டான்.

நடந்தது இதுதான். ஒரு மழை நாளான திங்கட்கிழமையில் குழுவில் உள்ள நான்கு இளைஞர்கள் பல்கலைக் கழக நுழைவாயிலில் பேராசிரியர் ஒருவர் செலுத்தி வரும் சிவப்பு நிற மேஸிடஸ் காரைப் பறிக்கக் காத்து நின்றார்கள். அப்பெண் பேராசிரியையின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை இறங்கச் செய்து விட்டு பொறியியல் பீடத்துக்குக் காரை ஓட்டிச் சென்றார்கள். அங்கே கட்டிடத்திலிருந்து வெளியேறி வந்த மூன்று மாணவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். இது நடந்தது மதிய வேளையில்.  நான் எனது வகுப்பில் இருந்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டு முதலில் வெளியே ஓடியவர் எங்களது விரிவுரையாளர். ஒரு பெரிய அலறல் சத்தம் கேட்டது. எங்கே ஓடுவது உன்று தெரியாமல் தடுமாறிய மாணவர்களால் படிக்கட்டுகள் நிரம்பியிருந்தன. வெளியே இறந்த உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன. மேர்ஸிடஸ் கார் கிறீச் ஒலி எமுப்பியபடி ஏற்கனவே சென்று மறைந்திருந்தது. மாணவர்கள் விரைவாகத் தமது புத்தகங்கள் இத்தியாதிகளைப் பைக்குள் திணித்தனர். பஸ் நிலையம் வரை கொண்டு சென்று இறக்கி விடும் சிறு வண்டிக்காரர்கள் வழமையான கூலியைவிட இரட்டைக் கூலி கேட்டார்கள். பிற்பகல் வகுப்புகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இரவு 9.00 மணிக்குப் பிறகு யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் துணை வேந்தர் அறிவித்தல் விடுத்தார்.

பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடந்த போதும் நான் இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நமாபியாவைப் பற்றியும் நான் யோசிக்கவில்லை. முதல் நாளிரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் நமாபியா வீட்டுக்கு வந்து சேரவில்லை. அன்றிரவு நமாபியா தனது நண்பர்களில் ஒருவனது வீட்டில் தங்கியிருக்கலாம் என்று யூகித்தேன். தவிர, எல்லா இரவுகளிலும் அவன் வீட்டுக்கு வருவதுமில்லை.

அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த ஒரு போலிஸ் அதிகாரி, மதுக்கடையில் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் இருந்த நமாபியா கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்தில் இருக்கும் தகவலைச் சொன்னார். அம்மா அதிர்ச்சியடைந்து, ‘அப்படிச் சொல்லாதீர்கள்…!’ என்று உரத்த குரலில் அலறினாள். அப்பா மிக அமைதியாக போலிஸ்காரருக்கு நன்றி சொன்னார். நாங்கள் போலிஸ் நிலையம் சென்றோம். ஓர் அழுக்குப் பேனா முனையைக் கடித்தபடி அங்கிருந்த போலிஸ்காரர் எங்களைப் பார்த்துக் கேட்டார்:-

‘நேற்றிரவு கைது செய்யப்பட்ட அந்தக் குழுக்களில் உள்ள பயல்களைப் பற்றியா விசாரிக்கிறீர்கள்? அவர்கள் நுரெபர வுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். மிக மோசமாக கேஸ்…! இந்தக் குழுக்களின் அட்டகாசத்தை ஒரேயடியாகத் தொலைத்துக்கட்ட வேண்டும்.’

நாங்கள் மீண்டும் காரில் ஏறினோம். எங்களை ஓர் இனந்தெரியாத பயம் பற்றிக் கொண்டது. எங்களை மிக மெதுவாக நகர்த்தும் எங்களது ஒதுக்குப்புறமான பல்கலைக் கழகத்தை விட எங்களது நகரம் மிக மெதுவாக எம்மை நகர்த்தக் கூடியதும் ஒதுக்குப் புறமானதுமாகும். இரண்டையுமே சமாளித்துக் கொள்ளலாம். போலிஸ் உயர் அதிகாரியுடன் அப்பாவுக்குப் பழக்கம் உள்ளது.ஆனால் Enugu   வில் யாரையும் எமக்குத் தெரியாது. அதிகம் அழுத்தம் இருக்குமாக இருந்தால் அதற்கு முடிவான ‘ஆளை முடித்துவிடுவது’ என்ற நிலைப்பாட்டை எடுப்பதில் பெயர் பெற்றது Enugu போலிஸ்.

Enugu  போலிஸ் நிலையம் ஒழுங்கமைப்பற்றிருந்தது. சுற்றுப்புறம் வெறும் மணல் தரையாக இருந்தது. அங்கிருந்த போலிஸ்காரருக்கு அம்மா லஞ்சமாகப் பணம் கொடுத்தாள். அத்துடன் இறைச்சியுடன் jollof  சோறும் வாங்கிக் கொடுத்தார். எனவே தடுப்புக் கூட்டிலிருந்து நமாபியா வெளியே எடுக்கப்பட்டு மாமரத்துக்குக் கீழேயிருந்த பெஞ்சில் எங்களுடன் அமர அனுமதிக்கப்படடான். கடைசி இரவு வீட்டுக்கு வராதது பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. மதுக்கடைக்குள் நுழைந்து அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை – மதுக்கடைக்காரன் உட்பட – போலிஸார் கைது செய்தது தவறு என்றும் யாரும் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக நமாபியா சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

‘இந்தப் போலிஸ் நிலையத்தைப் போல் நைஜீரியாவை நிர்வாகம் செய்தால் ஒரு பிரச்சினையும் வரப்போவதில்லை. எல்லாமே திடடமிடப்பட்டுள்ளன. எங்களது தடுப்புக் கூட்டுக்கு ஓர் அதிகாரி. அவருக்கு அடுத்ததாக இன்னொரு அதிகாரி. நீங்கள் போலிஸ் நிலையத்துக்குள் நுழைகிறீர்கள் என்றால் உங்களிடம் அவர்கள் பணம் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அவ்வளவுதான்! நீங்கள் பிரச்சினைக்குள் மாட்டிக் கொள்வீர்கள்!’

‘உன்னிடம் பணம் இருக்கிறதா?’

– அம்மா கேட்டார்.

நமாபியா சிரித்தான். நெற்றியில் பருக்கள் இல்லாமல் அவனது முகம் என்றைக்குமில்லாதவாறு அழகாகவும் பிரகாசமாகவும் இருந்தது. கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குள் தன்னிடமிருந்த பணத்தைக் குதத்துக்குள் செருகிக் கொண்டதாகச்  சொன்னான். அப்படி அவன் பணத்தை ஒளித்துக் கொள்ளாவிடில் போலிஸ் அதனை எடுத்துக் கொள்ளும் என்பதை அவன் தெரிந்திருந்தான். தவிர கூட்டுக்குள் இருக்கும் போது நிம்தியாக இருக்க வேண்டுமானால் அதற்குப் பணம் தேவை.

பெற்றோர் எதுவும் பேசவில்லை. நூறு நைரா நோட்டுக்களை உருட்டிச் சிகரெட் வடிவாக்கித் தனது காற்சட்டைப் பின்புறமாக அவன் தனக்குள் அதைச் செருகுவதைக் கற்பனை செய்தேன்.

பிறகு நாங்கள் திரும்பி வரும் வழியில் அம்மாவிடம் அப்பா சொன்னார்:

‘உனது நகையை அவன் திருடிய போது இதைத்தான் நான் செய்திருக்க வேண்டும். அவனைப் பிடித்துக் கூட்டில் அடைத்திருக்க வேண்டும்!’

கார் ஜன்னலூடாக வெளியே பார்த்தபடி அம்மா கேட்டார்:

‘ஏன்?’

‘ஏனென்றால் இது கொஞ்சம் அவனை நடுங்க வைத்திருக்கும்! நீ பார்க்கவில்லையா?’

– அப்பா ஒரு புன்னகையுடன் கேட்டார்.

நமாபியாவுக்கு முதல் அதிர்ச்சி Buccaneers குழுவைச் சேர்ந்த ஒருவன் விம்மி அழுததுதான். அந்தப் பையன் உயரமானவனாகவும் கட்டுமஸ்தானவனாகவும் இருந்தான். அவனுக்கு ஒரு கொலையில் சம்பந்தம் இருந்தது என்றும் அடுத்த அரையாண்டில் இவன்தான் பெருஞ் சண்டியனாகத் திகழ்வான் என்றும் பேசப்பட்டது. ஆனால் அவன் இன்னும் தடுப்புக் கூட்டில்தான் இருந்தான். பெரிய போலிஸ் அதிகாரி அவனது தலையின் பின்புறத்தில் லேசாகத் தட்டியதற்காக முகத்தை மூடித் தேம்பியழுதான். இவையெல்லாம் அளவுக்கு மீறிக் கற்பனை செய்த பேசப்படும் சமாச்சாரங்கள் என்று ஏமாற்றத்தோடும் வெறுப்போடும் உடைந்த குரலில் நமாபியா சொன்னான்.

அவன் அடைந்த இரண்டாவது அதிர்ச்சி, அவன் தற்போதிருக்கும் தடுப்புக் கூட்டிலிருந்து கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் அமைந்துள்ள முதலாம் இலக்கத் தடுப்புக் கூடு பற்றியது. அவன் அதை ஒருபோதும் பார்த்தில்லை. ஆனால் தினமும் இரண்டு போலிஸ்காரர்கள் ஒரு இறந்த உடலை முதலாம் இலக்கத் தடுப்புக் கூட்டிலிருந்து கொண்டு வருவார்கள்.  அங்கிருக்கும் எல்லோரும் பார்க்கும் விதமாக நமாபியாவின் தடுப்புக் கூட்டுக்கு முன்னால் சற்றுத் தரித்து விட்டு எடுத்துச் செல்வார்கள்.

தடுப்புக் கூட்டில் இருப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலை குளிப்பதற்காகப் பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கி வைத்திருந்தார்கள். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின் அவர்களை கவனித்துக் கொண்டிருக்கும் போலிஸ்காரர்கள், ‘அதனை நிறுத்து.. இல்லாவிட்டால் முதலாம் இலக்கக் கூட்டுக்குள் அனுப்பப்படுவாய்’ என்று சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்கள். மிக நெருக்கடியான, சுவரில் தன்னை நசுக்கிக் கொண்டு நிற்கவேண்டியிருக்கும் அந்த இடத்தைக் கற்பனை செய்து பார்க்கக் கூட நமாபியாவுக்கு விருப்பமில்லை.

சுவர்களில் எல்லா இடங்களிலும் வெடிப்புக்கள் இருந்தன. அவற்றுள் கூர்மையானவையும் கொடூரமானவையுமான சிறிய  பூச்சிகள் வாழ்ந்தன. கால் முதல் தலை வரை இரவில்தான் அவை அதிகமாகக் கடிக்கத் தொடங்கும். தினமும் இரண்டு முழுக் கவளங்கள் சாப்பிட மட்டுமே போதுமான ஒரு பீங்கான் சோறு இரண்டு வேளைகளுக்குக் கூட்டுக்குள் தள்ளிவிடப்படும்.

நமாபியா இந்த விபரங்களை முதலாவது வாரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னான். சுவர்ப் பூச்சிகள் கடித்து அவனது  நெற்றியில் பல இடங்களில் வீங்கிப் பருக்களைப் போல் கிளம்பியிருந்தது. சில பருக்களின் முனைகளில் சீழ் கோத்திருந்தது. அவ்வப்போது அவன் அவற்றைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அவன் தனது பேச்சை நிறுத்த வேண்டும் என்று விரும்பினேன். ஏளனமாக நடத்தப்படுவதால் மனக்கஷ்டம் அடையும் நிலைமையையிட்டும் அவன் கொஞ்சம் திருப்திப்படுகிறான் போல் தோன்றியது எனக்கு. போலிஸார் அவனை எம்முடன் கதைக்கவும் சேர்ந்து உண்ணவும் அனுமதித்தது அவனது அதிர்ஷ்டம்தான் என்பதையும் அதேபோல் அன்றிரவு மது அருந்தியது எவ்வளவு மடத்தனம் என்பதையும் அதனால் விடுதலையாகி வெளியே வருவதற்கான வாய்ப்பு நிச்சயமற்றது என்பதையும் அவன் உணர்ந்ததாகத் தெரியவில்லை

முதலாம் வாரத்தில் ஒவ்வொரு நாளும் அவனைப் போய்ப் பார்ப்போம். அம்மாவுடைய Peugeot கார்  Nsukka வுக்கு வெளியே பயணம் செய்வதற்கு நிச்சயமற்றது என்பதால் அப்பாவின் Volvo காரிலேயே போவது வழக்கம். வாரக் கடைசியில் எனது பெற்றேர் கொஞ்சம் வித்தியாசமாக – கொஞ்சம் தந்திரமாக இயங்குவதை அவதானித்தேன்.

போலிஸ் சோதனைச் சாவடிகளைத் தாண்டிச் செல்லும் போது போலிஸாரின் தற்குறித்தனம், லஞ்ச லாவண்யங்கள், நேர்மையற்றதன்மை பற்றி எப்போதும் கோபத்துடன் முணுமுணுக்கும் அப்பா இப்போது எதுவும் பேசவில்லை. அன்று போலிஸாருக்கு லஞ்சம் கொடுக்காத காரணத்தால் எங்களை ஒரு மணிநேரம் தாமதப்படுத்தினார்கள். எனது மாமியின் அழகிய மகள் ஒகேச்சியை பஸ்ஸிலிருந்து இறக்கி, அவளிடம் இரண்டு அலைபேசிகள் இருந்த காரணத்தால் அவளைப் ‘பரத்தை’ என்று ஏசிய போலிஸ்காரர்கள் பணம் தரும்படி அவளை வற்புறுத்தி மழைக்குள் முழங்காலில் நிறுத்திவிட்டுப் போக அனுமதித்திருந்தார்கள். அப்பா அது பற்றியும் கூட எந்த நடவடிக்கைக்கும் முயற்சிக்கவில்லை.

போலிஸாரின் செயற்பாடுகள் மிக மன உளைச்சலைக் கொடுத்த போதும் அம்மா வாயைத் திறக்கவில்லை. போலிஸாரைக் குறைசொல்லி விமர்சிக்காமல் இருந்தால் அது நமாபியா நிம்மதியாக இருக்க உதவும் என்று பெற்றோர் நம்பினார்கள். ‘சாத்தியப்பாடுடையது’ – Nsukka போலிஸ் தலைமையதிகாரி பயன்படுத்திய வார்த்தை இதுதான்.

நமாபியாவை சீக்கிரம் வெளியே கொண்டுவருவது சாத்தியப்பாடுடையதாக இருக்கும். குறிப்பாக நுரெபர  போலிஸ் கமிஷனரை அடிக்கடி சந்தித்து வினயமாகவும் லாவகமாகவும் குழுக்களின் கைது பற்றிப் பேச வேண்டும்.

அடுத்த வாரம், இந்த முறை நாம் நமாபியாவைச் சந்திக்கப் போகத் தேவையில்லை என்று பெற்றோரிடம் சொன்னேன். இன்னும் இது எவ்வளவு காலம் எடுக்குமென்று நமக்குத் தெரியாது. ஒவ்வொரு முறையும் மூன்று மணித்தியாலம் பயணம் செய்து சென்று வருகிறோம். பெட்ரோல் விலையும் அதிகரித்து விட்டது. ஒரு நாள் போகவில்லை என்பதற்காக அது  நமாபியாவைப் பெரிதாகப் பாதிக்கப் போவதில்லை என்பது எனது வாதமாக இருந்தது.

நீ வந்துதான் ஆக வேண்டும் என்று யாரும் இங்கே கெஞ்சவில்லை என்று அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார். எனது சகோதரன் அங்கே துன்பத்தில் இருக்கும் போது, நானும் வீட்டில் உட்கார்ந்து என்னதான் செய்ய முடியும்? அம்மா எதுவும் சொல்லாமல் காரை நோக்கிச் சென்றார். நானும் பின்னால் ஓடினேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. புதருக்குப் பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து வோல்வோ காரின் முன் கண்ணாடியில் வீசியெறிந்தேன். கண்ணாடி உடையும் சத்தத்தைக் கேட்டேன். கண்ணாடியில் வரி வரியாக வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு வீட்டுக்குள் ஓடிச் சென்று எனது அறைக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டேன். அம்மா சத்தமிடுவது எனது காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து அப்பாவின் குரலும் கேட்டது. அன்று யாரும் நமாபியாவைப் பார்க்கச் செல்லவில்லை. இந்த சின்ன வெற்றி எனக்கு வியப்பை ஏற்படுத்தத்தான் செய்தது.

அடுத்த நாள் நமாபியாவைப் பார்க்கப் போனோம். பனிப்படலத்தில் வெடிப்பு விழுந்தாற்போலக் காரின் கண்ணாடி வெடித்து நூலோடியிருந்த போதும் அதைப்பற்றி எதையும் அங்கு நாங்கள் பேசவில்லை. அன்றைக்குக் கடமையில் இருந்த போலிஸ்காரன் ஏன் நேற்று வரவில்லை என்று கேட்டான். அம்மா வழமையாகக் கொடுத்து வரும்  சாப்பாட்டை நேற்று இழந்த கவலை அவனுக்கு. நமாபியாவும் நேற்று நாங்கள் வராததைப் பற்றிக் கேட்பான் என்று எதிர் பார்த்தோம். ஆனால் கேட்கவில்லை. ஆனால் அவன் மிக நிதானமுள்ளவனைப் போல் இருந்தான்.

‘ஏதாவது பிரச்சினையா?’

– அம்மா கேட்டார்.

கேட்கும் வரை காத்திருந்தவனைப் போல் அவன் பேச ஆரம்பித்தான். ஒரு வயதான மனிதனை நேற்றைக்கு முந்திய தினம் நமாபியா வைக்கப்பட்டிருந்த சிறைக் கூட்டுக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள். எழுபது வயதுக்கு மேற்பட்ட அவர் நரைத்த தலைமுடியும் சுருங்கிய தோலுமாகத் தோற்றமளித்தார். அவரைப் பார்த்தால் கண்ணியமான ஒருவரைப்போல் இருந்தார். அவரது மகள் ஆயுத முனையில் கொள்ளை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வருகிறான். போலிஸாரால் அவனைப் பிடிக்க முடியாத காரணத்தால் அவனது தந்தையைப் பிடித்துக் கூட்டுக்குள் கொண்டு வந்து போட்டுள்ளனர்.

‘அந்த மனிதர் எந்தக் குற்றமும் செய்யவில்லை!’

– நமாபியா சொன்னான்.

‘நீயும்தான் ஒன்றும் செய்யவில்லை!’

– அம்மா சொன்னார்.

தொடர்ந்து வந்த நாட்களில் நமாபியா தனது பேச்சைக் குறைத்துக் கொண்டவனாகக் காணப்பட்டான். கொஞ்சமாகவே பேசினான், அதுவும் அந்த வயதான மனிதர் பற்றி. குளிப்பதற்கு அவருக்கு நீர் வழங்கப்படாதது பற்றியும் மகனை ஒளித்து வைத்திருப்பதாக மற்றவர்கள் அவரைக் குற்றம் சொல்வது பற்றியும் அவரைக் கிண்டல் பண்ணுவது பற்றியும் போலிஸ் தலைமையதிகாரி அவரை எப்படி அலட்சியப்படுத்துகிறார் என்பது பற்றியும் பயந்து போன நிலையில் அவர் இருப்பது பற்றியும் அவன் பேசினான்.

‘அவரது மகன் எங்கிருக்கிறான் என்று அவருக்குத் தெரியுமா?’

– அம்மா கேட்டார்.

‘நாலு மாதங்களாக தான் தன் மகனைக் காணவில்லை என்று சொல்கிறார்.’

‘பிழைதான். போலிஸ்காரர்களே இப்படித்தான். தேடிக் கொண்டிருப்பவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் அவரது உறவினர்களைப் பிடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்.’

‘பாவம் அந்த மனிதர். சுகவீனமான ஒருவர். அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன, அவர் தூக்கத்தில் இருக்கும் போதும் கூட!’

நமாபியா தனது சாப்பாட்டுப் பொதியை மூடி விட்டு அப்பாவைப் பார்த்துச் சொன்னான்:

‘நான் இந்த சாப்பாட்டில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் நான் உள்ளே இதைக் கொண்டு சென்றால் தலைமைப் போலிஸ் அதிகாரி எடுத்துக் கொள்வான்!’

அப்பா உள்ளே சென்று காவலில் இருந்த போலிஸ்காரனிடம் தான் அந்த முதியவரைப் பார்க்கலாமா என்று கேட்டார். இயல்பிலேயே அந்தப் போலிஸ்காரன் கடுகடுப்புச் சுபாவம் கொண்டவன். இதுவரை அம்மாவிடம் பெற்ற லஞ்சப் பணத்துக்கோ சாப்பாட்டுப் பொதிக்கோ நன்றி என்று ஒரு வார்த்தை சொல்லாதவன். அப்பாவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தபடி, உமது மகனை வெளியே உங்களுடன் விட்டது தெரிந்தாலே எனது தொழில் போய்விடும் என்றிருக்கும் போது நீ இன்னொரு ஆளையும் பார்க்க வேண்டும் என்று கேட்கிறீர் என்றான். இதென்ன பாசாலை விடுதி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். அப்பா வெட்கத்துடன் வந்து அமர்ந்தார். நமாபியா பருக்கள் நிறைந்த தனது நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

அடுத்த நாள் தனது உணவில் அதிக நாட்டம் காட்டவில்லை. கொஞ்சமாகவே உண்டான். சவர்க்கார நீரை சுவர்களிலும் சிறைக் கூட்டுக்குள்ளும் அந்த வயதான மனிதரிலும் வீசியதாக நமாபியா சொன்னான். அந்த மனிதர் ஒருவாரமாகக் குளிக்கவில்லை. அவர் அவசரமாகத் தனது சட்டையைக் கழட்டிவிட்டுத் தனது மெலிந்த தேகத்தின் பின்புறத்தால் சுவரில் தேய்த்துக் கொண்டார். அவர் இப்படிச் செய்வதைப் பார்த்த போலிஸார் எள்ளி நகையாடிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு  கூட்டிலிருந்து அவரை வெளியே எடுத்து ஆடைகள் எல்லாவற்றையும் களைந்து விட்டு அணிவகுத்து நடப்பது போல் நடக்கச் செய்தார்கள். அவர்கள் சொன்னது போல் அவர் செய்ததும் பெருஞ் சத்தமெழுப்பிச் சிரித்தபடி, உமது திருட்டு மகனுக்கு அப்பாவின் பின்புறம் சுருங்கிப் போயிருக்கிறது தெரியுமா என்று கேட்டார்கள். சொல்லிக் கொண்டே தனது உணவை பொதிக்குள்ளிருந்த மஞ்சள் சோற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்த போது கண்களில் கண்ணீர் நிறைந்திருப்பதைப் பார்த்தேன். அவனை நினைத்து இரக்கப்பட்டேன். அந்தக் கணத்தை விவரிப்பதற்கு என்னிடம் சொற்கள் கிடையாது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு பல்கலைக் கழகத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருவன் இன்னொருவரை கோடரியால் கொத்தியிருந்தான்.

‘இது நல்லது… குழுக்களிலுள்ள எல்லாரையும் பிடித்து விட்டதாக இனிமேல் அவர்களால் சொல்ல முடியாது!’

– அம்மா சொன்னார்.

அன்று நாங்கள் நமாபியாவைப் பார்க்கச் செல்லவில்லை. உள்ளுர் போலிஸ் தலைமையதிகாரியைப் பார்ப்பதற்காகப் பெற்றோர் சென்றிருந்தார்கள்.நமாபியாவும் மதுச்சாலை உரிமையாளரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நல்லசெய்தியுடன்தான் திரும்பி வந்தார்கள். குழுக்களில் ஒரு இளைஞன் விசாரணையின் போது நமாபியா எந்தக் குழுவையும் சார்ந்தவன் அல்லன் என்று உறுதி கூறியிருக்கிறான்.

அடுத்த நாள் காலை சாப்பாடு எதுவும் வாங்கிக் கொள்ளாமலே புறப்பட்டோம். நாங்கள் நுழையும் போது இரண்டு போலிஸ்காரர்கள் ஒரு தடித்த பிரம்பினால் ஒரு மனிதனை அடித்துக் கொண்டிருந்தார்கள். அடிவாங்குவது நமாபியாவே என்று நினைத்தேன். பிறகு அது அந்த வயதான மனிதராக இருக்குமோ என்று எண்ணினேன். ஆனால் இருவரும் இல்லை. நிலத்திலே கிடந்த அந்த இளைஞன் ஒவ்வொரு அடிக்கும் சத்தமிட்டு அழுது துடித்துக் கொண்டிருந்தான். அவனது பெயர் எபோய். ஒரு வாகனத்தில் பல்கலைக் கழகத்துக்குப் போய் தான் Buccaneers குழுவில் இருப்பவன் என்று சொல்லியிருக்கிறான். உள்ளே நுழையும் போது நான் அவனைப் பார்க்க முயற்சிக்கவில்லை. கன்னங்களில் தனது குல அடையாளத்தைக் கொண்டிருந்த, லஞ்சம் பெறும் போது ‘கடவுள் உங்களுக்கு அருள்புரியட்டும்’ என்று சொல்லுகின்ற கடமையில் இருந்த போலிஸ்காரன் எம்மைக் கண்டதும் தனது முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஏதோ ஒரு விபரீதம் நடந்திருப்பதை நான் உணர்ந்தேன். தலைமையதிகாரியிடமிருந்து பெற்று வந்த கடிதத்தை அப்பா அவனிடம் கொடுத்தார். அது விடுதலைப் பத்திரம் என்பது அவனுக்குத் தெரியும். ‘மதுச்சாலைக்காரனை விடுவித்தாயிற்று, ஆனால் உங்கள் பையன் விஷயத்தில் ஒரு சிறு பிரச்சினை’ என்று அவன் அப்பாவிடம் சொன்னான். அம்மா தன்னை மறந்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.

‘நீ என்ன சொல்கிறாய்… எனது பிள்ளை எங்கே?’

போலிஸ்காரன் தனது ஆசனத்தை விட்டு எழுந்தான்.

‘நான் பெரியவரைக் கூப்பிடுகிறேன்… அவர் சொல்லுவார்..!’

அம்மா வேகமாக அவனை நெருங்கி, அவனது சீருடையைப் பற்றிக் கோபத்தோடு கேட்டார்:

‘எனது மகன் எங்கே… எனது மகன் எங்கே…?’

அப்பா அம்மாவைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்து விலக்கி விட்டு அப்பா தாழ்ந்த குரலில் கேட்டார்:-

‘எனது மகன் எங்கே…?’

‘அவனை அங்கே கொண்டு சென்று விட்டார்கள் ஸார்..!!’

‘அவனை அங்கே கொண்டு சென்று விட்டார்கள்… நீ என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாய்.. எனது பிள்ளையைக் கொன்று விட்டீர்களா…?’

– அம்மா கோபமும் பதட்டமுமாகக் கேட்டார்.

‘எல்லா விபரத்தையும் பெரியவர் சொல்லுவார்..!’

– சொல்லி விட்டு சட்டென அங்கிருந்து மறைந்தான் அந்தப் போலிஸ்காரன்.

அவன் போனதும் பயத்தில் எனது உடல் திடீரெனச் சில்லிட்டுப் போயிற்று. அம்மாவைப் போல அவன் பின்னால் ஓடிச் சென்று அவனது சட்டையைப் பிடித்து நமாபியாவைக் கொண்டு வா என்று சத்தம் போட வேண்டும் போலிருந்தது எனக்கு. போலிஸ் உயர் அதிகாரி வந்தார்.

‘உங்களுக்கு நன்னாளாகட்டும் ஸார்.. எனது மகன் எங்கே…?’

– அப்பா கேட்டார். அம்மா பெருமூச்சு வாங்கினார்.

‘பிரச்சினை இல்லை ஸார்… நாங்கள் அவனை சும்மா இடம் மாற்றியுள்ளோம்… உங்களை அங்கே நேரடியாகவே அழைத்துச் செல்கிறேன்..!’

அந்தப் போலிஸ்காரர் கொஞ்சம் இயல்பற்றவராகக் காணப்பட்டார். முகத்தில் எந்த உணர்ச்சியுமற்றவராக இருந்தார். அப்பாவை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தார்.

‘இடம் மாற்றியிருக்கறீர்களா..?’

‘கட்டளை இன்று காலைதான் கிடைத்தது. அவனுடன் இன்னொருத்தரை அனுப்பியிருக்க வேண்டும். வாகனம் இல்லாத காரணத்தால் அது சாத்தியப்படவில்லை. அதனால் நீங்கள் வரும் வரை காத்திருந்தேன். எல்லோரும் சேர்ந்து போகலாம்தானே…!’

‘அவனை ஏன் இடம் மாற்றினீர்கள்…?’

‘நான் இங்கிருக்கவில்லை. நேற்று அவன் கொஞ்சம் கிறுக்குத் தனமாக நடந்து கொண்டான் என்று சொன்னார்கள். அதனால் முதலாம் இலக்கச் சிறைக் கூட்டுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.’

‘கிறுக்குத் தனம் பண்ணினானா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’

‘நான் இங்கிருக்கவில்லை ஸார்!’

அம்மா உடைந்த குரலில் சொல்லத் தொடங்கினார்:

‘என் பிள்ளை இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்… இப்பவே கூட்டிக் கொண்டு செல்லுங்கள்…!’

நான் போலிஸ்காரர் அமர்ந்திருந்த ஆசனத்துக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். எப்போதும் அம்மாவின் ட்ரங் பெட்டியிலிருந்து வரும் கற்பூர வாசம் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. போகும் வழியைக் காட்டிக் கொண்டிருந்த போலிஸ்காரரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. அப்பா காரை வேகமாகச் செலுத்திக் கொண்டு வந்திருந்ததால் பதினைந்து நிமிடங்களில் வந்து விட்டோம். கைவிடப்பட்ட இடத்தைப் போல் இருந்தது அந்தப் பகுதி. புற்கள் பெரிதாக வளர்ந்திருந்தன. பிளாஸ்டிக் பைகளும் வெற்று போத்தல்களும் ஆங்காங்கே கிடந்தன.

கார் நின்றதும் போலிஸ்காரர் விரைந்து கதவைத் திறந்து வெளியேறினார். எனது உடல் மீண்டும் சில்லிட்டது. நாங்கள் நம்பிக்கையிழந்த இடத்தில் இருந்தோம். போலிஸ் நிலையம் என்பதற்கான எந்த அறிவிப்புப் பலகையும் அங்கில்லை. இது தனித்து விடப்பட்ட இடம் என்பதை அப்பிரதேசக் காற்று உணர்த்தியது. ஆனால் போலிஸ்காரர் நமாபியாவுடன் விரைவாக வெளியே வந்தார். இதோ.. எனது சகோதரன்! அவனில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அவன் அருகே வந்ததம் அம்மா அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார். அவனது கரத்தைச் சுற்றி  ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. அவனது மூக்கில் இரத்தம் காய்ந்திருந்தது.

‘ஏன் இப்படி உன்னை அடித்தார்கள்?’

– அவனைப் பார்த்துக் கேட்ட அம்மா போலிஸ்காரரைப் பார்த்துக் கேட்டார்:-

‘நீங்கள் ஏன் என் பிள்ளைக்கு இப்படிச் செய்தீர்கள்? ஏன்?’

போலிஸ்காரன் ஏளனமாகத் தனது தோளை அசைத்தான். அவனது அந்த நடத்தையில் ஆணவம் தெரிந்தது. நமாபியாவின் நிலை என்னவாகும் என்ற நிச்சயமின்மை இருந்தது. ஆனால் இப்போது அந்த அச்சம் நீங்கி விட்டது.

‘நீங்கள் பல்கலைக் கழகத்தில் கற்பிப்பவர்கள். ஆனால் உங்களது பிள்ளைகளை நீங்கள் சரியாக வளர்ப்பதில்லை. உங்களது பிள்ளைகள் தவறு செய்தால் தண்டிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். அவனை விடுதலை செய்து விட்டார்கள்.’

– போலிஸ்காரன் சொன்னான்.

‘நாங்கள் போவோம்!’ என்றார் அப்பா.

வரும் வழியில் ஏதாவது குளிர்பானம் வாங்கித் தரட்டுமா என்று நமாபியாவிடம் கேட்டார் அம்மா. அவன் மறுத்து விட்டான்.

‘உனக்கு அரை வாளி நீர் தரட்டுமா என்று போலிஸ்காரன் முதியவரிடம் கேட்டான். ஆடைகள் யாவற்றையும் களைந்து அணி நடை பயிலுமாறு கேட்டுக் கொண்டார்கள். கூட்டுக்குள் இருந்தவர்கள் சிரித்தார்கள். இந்த மனிதனை இப்படி நடத்துவது பிழை என்று சிலர் சொன்னார்கள். நான் போலிஸகாரனைப் பார்த்துச் சத்தமிட்டேன். அந்த மனிதன் ஓர் அப்பாவி, சுகவீனமாவனர் என்று உரக்கக் கத்தினேன். அவரை இங்கே வைத்திருப்பதால் அவரது மகனைப் பிடிக்க முடியாது என்று சொன்னேன். ஏனென்றால் அவன் எங்கே இருக்கிறான் என்பது அவருக்குத் தெரியாது. என்னைப் பார்த்து வாயை மூடச் சொன்னார்கள். அதனால்தான் என்னை முதலாம் இலக்கச் சிறைக் கூட்டுக்கு அவர்கள் எடுத்துச் சென்றார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் வாய் மூடவேயில்லை. என்னை கூட்டிலிருந்து இழுத்தெடுத்து அடித்து முதலாம் இலக்கச் சிறைக் கூட்டுக்குள் போட்டார்கள்.’

நமாபியா சொல்லி முடித்தான். நாங்கள் வேறு எதையும் அவனிடம் கேட்கவில்லை. ஆனால், போலிஸ்காரர்களை மடையர்கள், முட்டாள்கள், முதுகெலும்பற்ற கோழைகள், பிறரைக் கொடுமைப்படுத்தி இன்பம் காண்பவர்கள், தப்பிப் பிறந்தவர்கள் என்றெல்லாம் ஏசுவதைக் கற்பனை பண்ணினேன். அவன் அவ்வாறு பேசும்போது போலிஸ்காரர்கள் அதிர்ச்சியடைவதையும் பெரிய அதிகாரி வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பதையும் சிறைக் கூட்டுக்குள் இருக்கும் ஏனையவர்கள் இந்தப் பல்கலைக் கழக மாணவனின் துணிச்சலை எண்ணித் திகைத்துக் களிப்பதையும் நினைத்துப் பார்த்தேன்.

அந்த வயதான முதியவர் பெருமையுடனும் அதிசயப் பார்வையுடனும் இருப்பதையும் ஆடைகளைக் கழற்ற மறுப்பதையும் கூடக் கற்பனை செய்தேன்.

முதலாம் இலக்கச் சிறைக் கூட்டுக்குள் தனக்கு என்ன நடந்தது என்பதை அவன் சொல்லவில்லை.

அவனுடைய கதையை ஓர் அருமையான நாடகமாக நடித்துக் காட்டுவதற்குக் கவர்ச்சி மிக்க இளைஞனான எனது அன்புத் தம்பியால் முடியும். ஆனால் அப்படி அவன் செய்யவில்லை!

 

 

தமிழில் – அஷ்ரஃப் சிஹாப்தீன் (இலங்கை)

 

One thought on “முதலாம் இலக்கச் சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!