home உன்னதம், கட்டுரை மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கையும் சில அணுகுமுறைகளும்

மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கையும் சில அணுகுமுறைகளும்

  –  லறீனா அப்துல் ஹக்

அறிமுகம்

மொழிபெயர்ப்பு என்பது சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டு  வருகின்றது. அத்தகைய கருத்தியலை முன்வைத்து வாதிடுவோரில் டப்ளியூ. வீ. ஓ. குயீன் ( W.V. O. Quine 1908-2000)  மற்றும் தோமஸ் கூன் ( Thomas Samuel Kuhn -1922–1996 ) ஆகியோர் முக்கியமானவர்களாவர்.
“மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கை” ( untranslatability ) குயீனின் தத்துவக் கோட்பாட்டின் இதயமாகத் திகழ்கிறது. அமைப்புவாத அணுகுமுறைப்படி ஒரு மொழியானது ஒரே அம்சத்தைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தக்கூடியது. எனினும், குயீன் இதனை மறுக்கின்றார். அவர் இதற்குச் சில உதாரணங்களை முன்வைத்து தன்னுடைய கருத்தை வலியுறுத்துகின்றார். அவை குறித்து சற்றே விரிவாக நோக்குவது பொருத்தமானதே.
முற்றிலும் புதிய மொழிக் கலாசாரச் சூழலில் ஒரு மொழியியலாளரின் நடத்தையை குயீன் ஓர் உதாரணமாக முன்வைக்கிறார். ஒரு மொழியியலாளர் சுதேசி ஒருவருடன் ஒரு காட்டை அடைகிறார். அவர்களின் முன்னால் ஒரு முயல் ஓடுகின்றது. உடனே அந்தச் சுதேசி ‘கவகாய்’ என்கின்றார். இவர் உடனே, ‘கவகாய்’ என்று எழுதி, அதற்கு எதிரே ‘முயல்’ என குறித்துக் கொள்கின்றார். எனினும், ‘கவகாய்’ என்பது மிருகம், வெள்ளை, முயல், ஓட்டம் என்பவற்றில் எதனைக் குறிக்க அந்தச் சொல்லை அச் சுதேசி பயன்படுத்தி இருக்கக்கூடும் என்பது பற்றி அவருக்குத் தெரியாது ( Oyelakin Richard Taye, 2009: 275 ). சந்தர்ப்பத்தைப் பொறுத்து, ‘புகவகாய்’ என்பதற்கு, ‘அது கடிக்கும்’, ‘அதன் முகம் அழுக்காய் இருக்கிறது’ என்றெல்லாம்கூட பொருள் அமைய வாய்ப்புண்டு.
எனவே, சொல்லுக்குரிய துல்லியமான பொருளை அச்சொல் தான் உணர்த்த முடியுமே தவிர, வேறு சொல் உணர்த்தமாட்டாது என்பது குயீனின் வாதமாகும். இது, “ Autonomous Expressionism/ behaviourist agnosticism ” “ஒற்றை வெளிப்பட்டுவாதம்” அல்லது “நடத்தைசார் இனமறிய முடியாத்தன்மைக் கோட்பாடு” எனவும் கூறப்படுகின்றது. ( Probal Dasgupta,2006: 2,3 )
குயீன் பின்வரும் கேள்வி – பதில் அமைப்பில் தன்னுடைய வாதத்தை எளிமைப்படுத்தி முன்வைக்கின்றார்: “ஒரு கூற்று எந்த அர்த்தத்தில் வழங்கப்படுகின்றது என்பதை நீங்கள் எவ்வாறு கூறுவீர்கள்?”- “உலகம் அதனை எவ்வாறு எடுத்துக் கொள்கின்றது என்பதை நீங்கள் துல்லியமாகத் தெரிந்து கொள்ளாதவரை, உங்களால் அது என்னவென்று ஒருபோதும் சொல்ல முடியாது” எனும் வினா-விடை வடிவில் குயீன் முன்வைக்கும் இந்தக் கருத்தியல், மொழியின் தர்க்கரீதியான பயன்பாட்டு முறைகளில் இருந்து முரண்படுகின்றது எனலாம் ( Probal Dasgupta, 2006: 3).
சொற்கள் தம்மளவில் தனித்துவமானவை என்று வாதாடும் குயீன், தனது கோட்பாட்டின் ஊடாக, ஒரு மொழிக்கு உள்ளேயான சொற்களுக்கிடையில் காணப்படும் சமத்தன்மை ஆனால், முழுமொத்த சமமின்மை குறித்துக் கேள்வி எழுப்புவதன் மூலம், மொழிபெயர்ப்பின் சாத்தியப்பாட்டை மறுதலிக்கின்றார் ( Thomas Dohmen, 2003:15 ).
மேலும், உயிரியல் விஞ்ஞானத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் வழங்கப்படும் அறிவியல் மொழிப் பயன்பாட்டை அவர் முழுமையான மொழிப் பாவனைக்கும் உரியதுபோலப் பொதுமைப்படுத்துவதன் மூலம், முற்றிலும் நாடகபாங்கான ஒரு தத்துவத்தைக் கேள்வி – பதில் பாணியில் முன்வைத்து,‘ஒரு கூற்று வெளிப்படுத்தும் துல்லியமான பொருளை மீள்கட்டமைத்து வெளியிடுவது குறித்து ஒருபோதும் தீர்மானிக்க முடியாது’ எனக் கூறுகின்றார். அவ்வாறே, குறித்த ஒரு மொழியில் வழங்கும் கூறுகள் அப்படியே மற்றொரு மொழியில் இருப்பது சாத்தியமில்லை என்கின்றார் ( Probal Dasgupta, 2006: 4 ).
எனினும், ஒரு மொழியில் உள்ள ஓர் அம்சம் மற்றொரு மொழியில் வழங்கப்பட்டு வராதுபோனாலும், சிலபோது மூலமொழிப் பயன்பாடுகளை ஒத்த அம்சங்கள் இலக்குமொழியில் புதிதாய் உருவாக்கப்படுவதற்கும் மொழிபெயர்ப்பு ஓர் அடிப்படையாய் அமைவதை நாம் மறுத்துவிட முடியாது. உதாரணமாக, நாம் சில மொழி வழக்குகளை நோக்குவோம்.
“காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம், நல்வரவு, தயைகூர்ந்து, வருந்துகின்றேன், மிக்க நன்றி, மீண்டும் வருக!” முதலான வழக்குச் சொற்கள் தொன்று தொட்டுத் தமிழில் வழங்கிவரவில்லை. மாறாக, இவை முறையே                 Good morning, good evening, good night, welcome, please, excuse me, thank you very much, come again முதலான ஆங்கிலச் சொற்பாவனைக்கு இணையாகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டவையே! எனவே, ஒரு மொழியில் உள்ள கூறு மற்றொரு மொழியில் இல்லை என்பதால் மொழிபெயர்ப்பே சாத்தியம் இல்லை என்பதைவிட, அப்படி இல்லாதவைகூட மொழிபெயர்ப்புச் செயற்பாட்டின்போது புதிதாய் உருவாக்கப்படும் சாத்தியப்பாடு எழுகின்றது என்பதை, ‘மொழியியல் முழுமைத்தன்மை’ (linguistic holism) குறித்துப் பேசிய குயீன் காணத் தவறிவிட்டார் எனலாம்.
குயீனைப் போலவே, மொழிபெயர்ப்பின் சாத்தியப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பிய மற்றொருவர் தோமஸ் கூன். அவரது கோட்பாடு, “அளவில் ஒவ்வாமைக்கொள்கை” (Incommensurability) எனப்படுகின்றது. குயீனின்,“அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு” (The Structure of Scientific Revolutions) எனும் ஆய்வுக்குப் பின்னர் எழுந்த தோமஸ் கூனின் அளவில் ஒவ்வாமைக் கோட்பாடு, சிலவகையான மொழிபெயர்ப்புக்கள் சாத்தியமே இல்லை என்பதை மையப்படுத்திப் பேசுகின்றது ( Bird, Alexander: 2011 ).
ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் போது, இலக்குமொழி வாசகரின் இயல்புக்கமைய தவிர்க்க முடியாமல் ஒரு மொழிபெயர்ப்பைப் பல்வேறு வழிமுறைகளில் வழங்கக்கூடியதாக இருக்கும். அவற்றில் எந்த ஒன்றும் முற்றுமுழுதாய்ச் சரியானதாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை என்கிறார் தோமஸ் கூன். ஆனால், அப்படி மொழிபெயர்க்க முடியும் என்பதையே குயீன் மறுக்கின்றார். ஒவ்வொரு சொல்லுமே தனித்துவமானது; அச்சொல் உணர்த்தும் பொருளை அந்தக் குறிப்பிட்ட சொல்லாலேயே தவிர, வேறு ஒரு சொல்லால் உணர்த்துவது சாத்தியமே இல்லை என்பது குயீனின் வாதம். ( Bird, Alexander: 2011 ).
தோமஸ் கூனின் கோட்பாடு குயீனின் கோட்பாட்டோடு ஒப்பிட்டு நோக்கப்பட்டாலும்கூட, அது சற்றே மாறுபட்டது என்று கூறவேண்டும். கூனைப் பொறுத்தளவில், பொருள் என்பது தன்னளவில் முழுமையானது; எங்கு முழுமையான சமனி இல்லாமல் இருக்கிறதோ அங்குதான் அளவில் ஒவ்வாமைக் கோட்பாடு பொருந்துகின்றது என்றும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை இணையாகக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது, ஒரு பொருளுக்கு முழு இணையான மற்றொரு பொருள் புகுத்தப்படும்போது, அது துருத்திக்கொண்டு இருக்காமல் முழுமையாகப் பொருந்திப் போகும் என நம்புகின்றார் ( Bird, Alexander: 2011 ). எத்தகைய கூட்டலும் குறைத்தலும் இன்றி மிகச் சரியான அளவில் ஓர் அச்சின்மீது உருக்கி வார்க்கப்படும் மிகக் கச்சிதமான மெழுகுக் குழம்பை கூனின் கூற்றுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். எத்தகைய புடைப்போ குறைவோ இன்றி மிகவும் கச்சிதமாகவும் அளவாகவும் அந்த அச்சில் அது ஊற்றப்படுமிடத்து, அது அந்நியப்பட்டு அல்லது துருத்திக் கொண்டு நிற்காமல் இயல்பாய்த் தோற்றமளிக்கும்.
குயீன் மொழிபெயர்ப்பில் அப்படி முழுமொத்த சமனி இருப்பது சாத்தியமே இல்லை என்கிறார். அதுமட்டுமன்றி, மொழிபெயர்க்கப்படும் கூற்றுக்கள் தம்மளவில் பொருள் தருவன எனக் கூன் ஏற்றுக்கொண்ட போதிலும், குயீன் அதனை மறுதலிக்கின்றார். இவ்வாறு, விலார்ட் வீ. ஓ. குயீனின் கோட்பாட்டில் இருந்து தோமஸ் கூனின் கோட்பாடு சற்றே வேறுபட்டதாகத் தோற்றமளித்தாலும், அடிப்படையில் இவ்விரு கோட்பாடுகளும் மொழிபெயர்ப்பின் சாத்தியப்பாட்டை மறுதலிக்கும் கோட்பாடுகளாகவே பெரிதும் நோக்கப்படுகின்றன ( Bird, Alexander: 2011 ).
கற்போர்ட் முதலான வேறுபல மொழியியலாளர்கள் மொழிபெயர்ப்புச் செயன்முறையின் சாத்தியப்பாட்டை முற்றாக மறுக்காத போதிலும், அதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசியுள்ளனர் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். அந்த வரிசையில், கற்ஃபோர்ட்டின் ( Catford 1965:93 ), “மூலமொழியில் உள்ள பிரதிகள் முற்றிலும் மொழிபெயர்க்கப்பட முடியாதவை என்று கூறுவதைவிட, கூடுதலாகவோ குறைவாகவோ மொழிபெயர்க்கப்படக்கூடியவை” என்னும் கருத்து மிக முக்கியமானது. ஓர் ஆக்க இலக்கியத்தைப் பொறுத்த வரையில், மூலப்பிரதி கொண்டிருக்கும் சமூகப் பின்புலத்தை, அதன் பண்பாட்டு வேர்களை, வட்டார மொழி வழக்கினை அடியொட்டியதாக உருப்பெறலாம். இதனை மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது இலக்குமொழியின் சமூகப் பின்புலமோ பண்பாட்டம்சங்களோ வட்டாரமொழி வழக்குகளோ மூலமொழியினை முற்றிலும் ஒத்ததாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆதலால், அப்பிரதியின் உயிரோட்டம், கலையம்சம், அழகியல் அனுபவம் என்பவற்றை மூலமொழியில் இருந்த அதேயளவில் பேணுவது பெரும் பிரச்சினையாகிறது.
2.1 மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கையின் பிரதான வகைப்பாடுகள்:
மொழியியல் வரலாற்றில் பெரும்பாலும் கட்டுடைப்புவாதிகளே மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கையை வலியுறுத்தி வருகின்றனர் எனலாம். மொழிபெயர்ப்பின் சாத்தியமின்மைக் கோட்பாட்டை எதிர்கொள்ளும் ஜே.சீ. கற்ஃபோர்ட் இதனை மொழியியல் சார்ந்தவை, கலாசாரம் சார்ந்தவை என இருவேறு பிரதான வகைமைக்குள் உள்ளடக்குகின்றார். ( Susan Bassnett, 2002: 39-40 ).
2.1.1. மொழியியல் சார்ந்தவை:
கற்ஃபோர்ட் குறிப்பிடும்போது, “மூலமொழிப் பிரதியில் கையாளப்பட்டுள்ள மொழி அமைப்பு சார்ந்த அம்சங்கள் மொழியியல் ரீதியான மொழிபெயர்க்க இயலாமைக்குள் அடங்கும். ஒப்பீட்டளவில் அதே மொழியமைப்பு இலக்குமொழியில் இல்லாத பட்சத்தில், குறித்த பிரதி மொழிபெயர்க்கப்பட இயலாதது ஆகின்றது” (Catford, 1987: 94)  என்கிறார். அன்ட்டன் பொபோவிக் என்பாரும் கற்ஃபோர்டின் இக்கருத்துடன் உடன்படுகின்றார் (Susan Bassnett, 2002:42 ).
மூலமொழியில் உள்ள சொற்கள், எண்-கால-இட-பால் வகைமை, ஒலியியல் மற்றும் இலக்கணக் கூறுகளுக்கான சமனிகள் இலக்குமொழியில் காணப்படாதபோது இப்பிரச்சினை எழுகிறது. உதாரணமாக, தமிழில் உள்ள, “எத்தனையாவது பராக்கிரமபாகு?”, அல்லது சிங்களத்தில் உள்ள, “කීවෙනි පැරකුම්භා?” (கீவெனி பரகும்பா?) என்ற கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது. மாறாக, அக்கேள்வியின் பொருளை உணர்த்தும் வகையில், “ Which Parakramabhahu ?” என்று கேட்கலாம். “எத்தனையாவது?” என்பதற்கு ஆங்கிலத்தில் சமனி இல்லை. அதுபோல், මට ඇඬුනා  (மட்ட என்டுனா) என்பதை, “எனக்கு அழுகை வந்தது” என்று தமிழில் தரமுடிந்தாலும் ஆங்கிலத்தில் அப்பிரயோகத்தை அப்படியே தருவது சாத்தியமில்லை. மேலும், “ It’s raining / I am hungry ” என்பதை, “அது பெய்கிறது / நான் பசி” என்றில்லாமல், “மழை பெய்கிறது / எனக்குப் பசிக்கிறது” என்று தருவதே பொருத்தமானதாய் இருக்கும்.
தமிழ் எழுத்தின் ஒலிப்பு முறைக்கும் கருத்துக்கும் இடையிலான நுண்ணிய ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில், அர்த்தத்துக்கு வலுசேர்க்கும் ஒலிப்பு முறையைப் பயன்படுத்திப் பழங்காலச் செய்யுள்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,
பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்”
(கம்ப. ஆரணிய காண்டம், சூர்ப்பனகைப் படலம், 31.)
எனும் அடிகளில் உள்ள கருத்தை ஆங்கிலத்திலோ வேறு ஒரு மொழியிலோ மொழிபெயர்க்க முடிந்தாலும், அதில் உள்ள ஒய்யாரமான ஓசைநயத்தையும் சேர்த்தே மொழிபெயர்ப்பது மிக அரிது.
அவ்வாறே,
“உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம்
இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்”
(கம்ப. யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம், 45.)
என்ற பாடலில் பொருளோடு ஒத்து இழையோடிச் செல்லும் சந்தநயத்தை மற்றொரு மொழியில் தருதல் அரிது. இது அவ்வம் மொழியமைப்பில் உள்ளார்ந்து காணப்படும் சிறப்புக்கூறுகளோடு தொடர்புடைய அம்சங்களாகும்.
2.1.2. கலாச்சாரம் சார்ந்தவை: 
மூலநூலில்இடம்பெறும் ஒரு கலாச்சார அம்சம் இலக்குமொழிக் கலாச்சாரத்தில் இல்லாமல் இருப்பதே கலாச்சாரம் சார்ந்த மொழிபெயர்க்க இயலாமை என்று வரைவிலக்கணப்படுத்தும் கற்ஃபோர்ட், bathroom என்ற ஆங்கிலச் சொல் ஃபின்னிஷ், ஜப்பானிய மொழிகளில் உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை என்ற உதாரணத்தை முன்வைத்து இக்கருத்தை அவர் நிறுவுகின்றார் ( Catford, 1987:99 ). ஒரு மொழி சார்ந்த கலாச்சாரம் உணர்த்தும் மறைபொருள், குறியீட்டு – சிலேடைப் பிரயோகங்கள் அல்லது பழமொழிகள், மரபுத்தொடர்கள், சிறப்பு வழக்குகள், நம்பிக்கைகள் என்பனவற்றை வெளிப்படுத்தும் சூழமைவு இலக்குமொழிக் கலாச்சாரத்தில் இல்லாதபோது, கலாச்சாரம் சார்ந்த மொழிபெயர்க்க இயலாமைப் பிரச்சினை தோன்றுகின்றது. உதாரணமாக, “ஆழம் அறியாமல் காலைவிடாதே!” என்பதை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்காமல், குறித்த கருத்துக்கு இணையான ஆங்கிலப் பழமொழியான Look before you leap என்பதையே பயன்படுத்தவேண்டிவரும். சிங்களத்தில், “පලයං යකෝ යන්ඩ” (பலயங் யக்கோ யன்ட) எனும் பிரயோகத்தைத் தமிழில், “போடா போ!” அல்லது “சரிதான் போடா!” என்று தர முடிந்தாலும், ஆங்கிலத்தில் அதனைத் தருவது கடினமே. அவ்வாறே, “ Go to hell ” என்பதை அப்படியே தமிழில், “நரகத்துக்குப் போ!” என மொழிபெயர்க்க முடியாது. மாறாக, “தொலைந்து போஃஒழிந்துபோ!” அல்லது “நாசமாகப் போ!” என்றே தரவேண்டியிருக்கும்
அதேவேளை, පරංගි කෝට්ටේ ගියා වගේ (பறங்கி கோட்டே கியா வகே), பறங்கி கோட்டைக்குப் போனமாதிரி, வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறியாச்சு, தாலியறுத்தாச்சு, அறுதலி, வாழாவெட்டி, சரியான கும்பகர்ணன், கர்ணபரம்பரை, அந்தரே ஆற்றைக் கடந்த மாதிரி, පිංගුත්තරයාගේ කතන්දරය වගේ,(பிங்குத்தரயாகே கத்தன்தரய வகே- பிங்குத்தரயனின் கதையைப் போல) පුහුල් හොරා කරෙන් දැනේ… (புஹுல் ஹொரா கரென் தெனே- பூசணித்திருடனை தோள் காட்டிக் கொடுக்கும்) முதலான தமிழ், சிங்களப் பிரயோகங்கள், குறித்த மொழி மற்றும் சமூகம் சார்ந்த வழக்குகள், வரலாறு, புராண- இதிகாசங்கள், நாட்டார் கதைகள் என்பவற்றோடு தொடர்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் அப்படியே மொழிபெயர்ப்பது சாத்தியமில்லை.
மேலும், பிக்குமாருக்கே உரிய தனித்துவமான வினைச்சொற் கோவை சிங்கள மொழியில் உள்ள சிறப்புக் கூறாகும். உதாரணமாக, உறங்குதல், முற்றத்தைக் கூட்டிப் பெருக்குதல், உணவுண்ணல், கூறுதல், வருதல், குளித்தல், உலாவுதல் முதலான செய்கைகளுக்கு, சிங்களத்தில் නිදනවා, මිදුල අතුගානවා, කනවා, කියනවා, එනවා, නානවා, ඇවිදිනවා (நிந்தனவா – உறங்குதல், மிதுல அத்துகானவா – முற்றத்தைக் கூட்டிப்பெருக்குதல், கனவா – சாப்பிடுதல், கியனவா – கூறுதல், எனவா – வருதல், நானவா – குளித்தல், எவிதினவா – நடமாடுதல் அல்லது உலாவுதல்) முதலான வழக்கமான பிரயோகங்களைப் பிக்குமாருக்குப் பயன்படுத்துவதில்லை. மாறாக, இவை முறையே: සැතපෙනවා, අමදිනවා, වළදනවා, වධාලසේක, වධාලනවා, වඩිනවා, පැන්පහසු වෙනවා, සත්මන් කරනවා (செத்தபெனவா, அமதினவா, வலதனவா, வதாலசேக அல்லது வதாலனவா, வடினவா, பென்பஹசு வெனவா, சத்மன்கரனவா) எனும் சிறப்புமொழிக் கையாட்சியே வழங்கப்பெறும். இப்பிரயோகங்களை ஆங்கிலம் முதலான பிறமொழிகளில் தருவது சாத்தியமற்றதே எனத் துணிந்து கூறலாம். சிலவேளை, இராணியின் கால ஆங்கிலத்தைப் பயன்படுத்த நேரலாம். எனினும், அத்தகைய பழைய பிரயோகங்கள் பிரதியின் இயல்புத்தன்மையையும் உயிரோட்டத்தையும் பாதிக்கக்கூடும். எப்படி இருப்பினும், கலாசாரக் கூறுகளின் மொழிபெயர்க்க இயலாமை என்பது, அக்கூறுகளின் தனித்தன்மையும், தனிச் சிறப்பும் ஆகும் என்பது இங்கு நோக்கத்தக்கது.
2.3 மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கையை எதிர்கொள்வதற்கான உத்திமுறைகள்:
மொழிபெயர்ப்பு சாத்தியமில்லை என்று ஒருசாரார் வாதிட்டாலும், ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலைபெற்றுவரும் ஒரு கலை என்ற வகையில், இந்த இயலாமைகளை வெற்றிகொண்டும், மொழிபெயர்ப்பு சாத்தியமின்மை குறித்த தர்க்கங்களைப் புறந்தள்ளியும் மொழிபெயர்ப்பு இன்றும் தன் இருப்பை ஸ்திரப்படுத்தியும் வளர்ந்தும் வருவதை நாம் காண்கின்றோம்.
அந்தவகையில், மொழிபெயர்க்க இயலாமை என்ற நிலையை எதிர்கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்கள் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுகின்றனர்:
2.3.1 மொழியாக்கம் (Transposition): 
ஆக்க இலக்கியப் படைப்புக்களைப் பொறுத்தவரையில் மொழியாக்க முறைமையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. ஏனெனில், ஆக்க இலக்கியப் படைப்புக்களின்வழியே மனித உள்ளத்தின் நுண்ணுணர்வுகள், தான் சார்ந்துள்ள சமூகத்தின் கலாசாரக் கூறுகள், பல்வேறு மரபார்ந்த செயற்பாடுகள், விழுமியங்கள் என்பன இலக்குமொழியிலும் அவ்வாறே இருக்கும் என்று சொல்வதற்கில்லை. எனவே, மூலமொழி – இலக்குமொழி இரண்டுக்கும் இடையிலான சமநிலையைப் பேணி, குறித்த படைப்பைச் சுவைபட இலக்குமொழியில் தருவதற்கு மொழியாக்க முறைமையே பெரிதும் பயன்பட முடியும் எனலாம்.
குறிப்பாக, கவிதை மொழிபெயர்ப்பு குறித்து ரோமன் யாக்கப்ஸன் குறிப்பிடும்போது,
“கவிதை மொழிபெயர்க்கப்பட முடியாதது. மாறாக ஆக்கபூர்வமான ஒரு புத்தாக்கமே சாத்தியமானதாகும். இது ஒரு கவிதை வடிவத்தில் இருந்து மற்றொரு கவிதை வடிவமாக ஒருமொழிக்குள் நிகழும் மொழியாக்கமாகவோ, ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழியில் அமைந்த மொழியாக்கமாகவோ, மொழிவடிவில் இருந்து இசை, நாடகம், சினிமா முதலானவற்றுக்கு மாற்றப்படும் குறிமுறைகளுக்கு இடையிலான மொழியாக்கமாகவோ இது அமையலாம்” ( Roman Jakobson, 1987:434 ) என்கின்றார்.
பிரெஞ்சு, ரஷ்யன், ஜேர்மன், அறபு, ஆங்கிலம் என உலகில் உள்ள எத்தனையோ மொழிகளில் எழுந்த எண்ணற்ற கவிதைகள், நாடகங்கள், புனைகதைகள் என்பன மற்றமொழிகளில் பெயர்க்கப்பட்டே வந்துள்ளன. அவை மொழியாக்கத்தின் மூலமே நம்மை வந்தடைந்துள்ளன. இங்கு ஹேர்வேயும் ஹிக்கின்ஸும் கூறுவது கவனத்திற் கொள்ளத்தக்கது. அவர்கள்,
“மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளும் மொழிபெயர்ப்பு இழப்பினை முற்றுமுழுதாக இல்லாமல் ஆக்குவதல்ல. மாறாக, மூல மொழியில் இருந்து இலக்குமொழிக்குப் பரிமாற்றத்தக்க மிக இன்றியமையாத கூறுகள் எவை, அவற்றைப் பரிமாற்றுகையில் எத்தகைய அம்சங்களை இழப்பது ஏற்புடையதாக அமையும் என்பதைத் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம், மொழிபெயர்ப்பு இழப்பினை அதிகபட்சம் குறைப்பதே ஆகும். இதன்போது, வித்தியாசத்தை இயன்றளவு குறைத்தல் என்பதற்குப் பதிலாக, அதிகபட்ச ஒத்த தன்மையை( sameness ) அதிகரிப்பதற்கு முயற்சித்தல் வேண்டும்”( Hervey & Higgins, 1992:24 ) என்று வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, மொழிபெயர்க்க இயலா நிலைமையை எதிர்கொள்ளத்தக்க சிறப்பான வழிமுறைகளுள், மொழியாக்கமும் ஒன்றாகும் எனலாம்.
2.3.2 கடன்வாங்குதல் ( Borrowing ): 
ஒருமொழி சார்ந்த சமூகக் கலாசாரக் கூறுகளைப் பிரதிபலிக்கும் மூலமொழிச் சொல்லையோ சொற்றொடரையோ ஒலிபெயர்ப்பு முறை மூலம் சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தி அப்படியே இலக்குமொழிப் பிரதியில் பயன்படுத்துதல்.
உதாரணமாக,தாலி, பொட்டு, பிரித், சில் எனும் சொற்களை ஆங்கிலத்தில் பெயர்க்கும்போதும், Thaali, Pottu, Pirith, Sil என்றே இலக்குமொழிப் பிரதியில் பயன்படுத்திக் கொள்ளுதலைக் குறிப்பிடலாம்.
2.3.3 சுருக்கம் (Summarizing):
மூலப்பிரதியின் மையக் கருத்தைச் சிதைத்துவிடாமல், பிரதியின் அளவை இயன்றவரை சுருக்கி இலக்குமொழியில் தரும் செயற்பாட்டை, சுருக்க மொழிபெயர்ப்பு எனலாம். மூலப் பிரதி பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்குவதற்கு இந்த வகை மொழிபெயர்ப்பு பெரிதும் உதவும். மாணவர்கள், சிறுவர்களுக்கு மூலப் பிரதி பற்றிய சுருக்கமானதோர் அறிமுகத்தை வழங்குவதற்கு இம்முறை பயன்பட்டு வருகின்றது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்,சாள்ஸ் டிக்கன்ஸ் முதலானோரின் படைப்புக்களின் மையக் கதை, சுருக்க மொழிபெயர்ப்பு மூலம் இலக்குமொழியில் வழங்கப்பட்டு வருகின்றமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ‘மூலத்திலுள்ள சொல்லும் எழுத்தும் மொழி பெயர்ப்பாளருடைய சுதந்திரத்தைப் பாதிக்கும் விலங்காக அமைந்துவிடக் கூடாது. சில சொற்களை மொழிபெயர்க்காமல் விட்டு விட்டால் அதனால் மொழிபெயர்ப்பு ஒன்றும் கெட்டுப் போய் விடாது. உண்மையில் மூலத்தின் பொது பாவத்தைச் செம்மையாக மொழிபெயர்ப்பதற்காகவே சில சொற்களைத் தமிழாக்கம் செய்யாமல் தவிர்க்க வேண்டி இருக்கும்’ என்ற எஸ். மகராஜனின் கருத்து (மேற்கோள்: http://www.tamilvu.org ) இங்கு நோக்கத்தக்கது.
2.3.4 விரித்துரைத்தல் (Paraphrase):
மூலப்பிரதியின் உள்ளடக்கம் விரிவான அமைப்பில் இலக்குமொழியில் தரப்படுதலை இது குறிக்கும். மூலமொழியில் உள்ள சிறப்பான கூறுகளை இலக்குமொழியில் கொண்டுவருதல் சாத்தியமில்லை எனக் கருதப்படுமிடத்து இம்முறை கையாளப்படும். எடுத்துக்காட்டாக, கவிதை அமைப்பில் இருக்கும் மூலமொழிப் பிரதியை, அதன் கலையம்சம், கட்டிறுக்கமான வடிவ அழகு என்பன கெடாத வகையில் கவிதை வடிவிலேயே இலக்குமொழியில் தர முடியாமல் போகும்போது விரித்துரைத்தல் மூலம் இலக்குமொழியில் தரப்படலாம். கீதாஞ்சலியை வங்காளமொழியிலே கவிதை வடிவில் எழுதிய தாகூர், அதனை ஆங்கிலத்தில் பெயர்க்கும்போது உரைநடையைக் கைக்கொண்டுள்ளமையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
2.3.5மொழிபெயர்ப்பாளர் குறிப்பு (Translator’s notes):
அடிக்குறிப்பு முதலானவற்றைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் விளக்கமளிக்கும் முறையே இதுவாகும். அனேகமான மொழிபெயர்ப்பாளர்கள் இம்முறைமையைக் கைக்கொண்டு வருகின்றனர். இது, குறித்த சொல்லை, வாக்கியத்தை அடுத்து அடைப்புக் குறிகளுக்குள்ளோ, அடிக்குறிப்பு வடிவிலோ, பின்னிணைப்பு வடிவிலோகூட இடம்பெறுவதுண்டு.
இத்தகைய முறைகளின் மூலம் மொழிபெயர்ப்பை முற்றுமுழுதாகச் சாத்தியமில்லை என்று ஒரேயடியாகப் புறந்தள்ளிவிடாமல், மொழிபெயர்ப்புச் செயன்முறையைச் சாத்தியப்படுத்தும் முயற்சியில் மொழிபெயர்ப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
முடிவுரை
இவ்வாறாக, ஒருபுறம் பல்வேறு அறிஞர்கள், கோட்பாட்டாளர்கள் மத்தியில் மொழிபெயர்ப்பின் சாத்தியப்பாடு, அசாத்தியப்பாடு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் சர்ச்சைகள் நிலவி வருகின்ற போதிலும், மறுபுறம் உலகளாவிய ரீதியில் மொழிகளுக்கிடையே பரிவர்த்தனைகள் இடையறாது நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. எந்த ஒரு மனித முயற்சியிலும் ஒருசில குறைபாடுகள் ஏற்படுவது இயல்புதான். அதன் பொருட்டு அம்முயற்சியைக் கைவிட்டு விடாமல், இயன்றளவு குறைபாடுகள் அற்றதாக அம்முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொள்வதே அறிவுடைமையாகும். அந்த வகையிலேயே மொழிபெயர்ப்புச் செயற்பாட்டில் நிகழத்தக்க குறைபாடுகள் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால், உலகச் சமூகங்களுக்கும் கலாசாரங்களுக்கும் இடையிலான ஊடாட்டத்தின் சாத்தியப்பாட்டை நிகழ்த்திக் காட்டுவதில் மொழிபெயர்ப்புச் செயற்பாட்டுக்கு ஒரு மகத்தான இடமுண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
****

இலங்கை கம்போலாவில் வசிக்கும் லறீனா அப்துல் ஹக், தமிழில் கவனம் பெற்று வரும் தற்காலக் கவிஞர். மற்றும் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், சமூகச் செயல்பாட்டாளர்.  இதுவரை இவரது படைப்புகள் எட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

One thought on “மொழிபெயர்க்க இயலாமைக் கொள்கையும் சில அணுகுமுறைகளும்

  1. சிறப்பான ஆய்வுக் கட்டுரை!. மொழிபெயர்ப்பின் போதாமை காரணமாகவே நல்ல இலக்கியப் பிரதி மீள் மொழிபெயர்ப்புகளுக்கு உள்ளாகிறது. திருக்குறள் ஏராளமான மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதை உதாரணமாகக் கொள்ளலாம்.

    அதுவுமன்றி, இலக்கு மொழியின் புழங்குகால நியதிகளுக்கேற்பவும் மொழிபெயர்ப்பு தன்னை லகுவாக்கிக் கொள்ள நேர்கிறது. படைப்பு மொழியின் வட்டார வழக்கு எழிலைத் திறம்பட வெளிக்கொணர்தல் எப்படி சாத்தியப்படாமல் போகின்றதோ, அதே போன்று, இலக்கு மொழிக்குச். சென்றடையும் பிரதியும் அந்த மொழி சார்ந்த வாசகப் பரப்பு எதிர்நோக்கும் எளிமையையும், வட்டாரத் தன்மையையும் கணக்கில் கொள்வது அவசியமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!