home டிரெண்டிங், நேர்காணல் விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை…

விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை…

  • ஜான் டி மோல்

நீங்களும் உங்கள் சமகாலத்தவர்களும் ரியாலிட்டி டிவி என்றொரு வடிவத்தை அறிமுகப்படுத்திய பிறகு, பொழுதுபோக்கு உலகம் எவ்வாறெல்லாம் மாற்றம் அடைந்திருக்கிறது?

1999 அல்லது 2000 ம் வருடத்தில் நாங்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய பொழுது, அதுவரை இல்லாத ஒரு புதிய பொழுதுபோக்கு வடிவத்தை/ வகையை உருவாக்கினோம். ரியாலிட்டி டிவி வகைப்பாட்டில் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் வருவதற்கு பிக்பிரதர் ஒரு முன்னோடியாக அமைந்தது.

உங்கள் துறையைச் சார்ந்தவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிந்தார்கள்?

வழக்கமாக, புதிய விஷயம் ஏதேனும் அறிமுகப்படுத்தும் பொழுது, உடனடி எதிர்வினைகள் ஊக்கம் தருவதாக அமைவதில்லை. குறிப்பாக பெரும் சந்தைகளில். அதிர்ஷ்டவசமாக, நான் வாழ்ந்து, பணி புரியும் நாடு, பெரிய நாடுகளை விட சற்று சுலபமாக மாற்றங்களை வரவேற்று அணைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இருப்பினும் ஹாலந்தில் கூட, சற்று ஆச்சர்யத்துடன், “ஓ, இது என்ன புதியதாக? இது ஏற்றுக் கொள்ளக்கூடியதா, வெற்றி பெறுமா?” என்றே நினைத்தார்கள்.

அவர்கள், எதைப் பற்றி தயக்கம் கொண்டவர்களாக, அச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்?

மக்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றி, விமர்சனங்கள் பற்றி, விளம்பரதாரர்கள், தங்களுடைய விளம்பரங்களைக் கொடுக்கத் தயக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆரம்பத்தில், அவர்கள் விளம்பரங்களே தரவில்லை. பின்னர் 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு, அந்த நிகழ்ச்சி பற்றிய பிம்பம் முழுவதுமாக மாறிவிட்டது – எதிர்மறையிலிருந்து மிகவும் நேர்மறையானதாக.

ஏன் அப்படி ஆனதென்று நினைக்கிறீர்கள்?

நிகழ்ச்சியை ஒரு வினாடி கூடப் பார்க்காமல், முன்கூட்டியே கொண்டிருந்த மிக அழுத்தமான மன அபிப்பிராயங்களால் இருக்கலாம். பின்னர், சில வாரங்களுக்குப் பிறகு, தங்கள் அபிப்பிராயங்களை பெரும்பான்மையானோர் மாற்றி அமைத்துக் கொண்டு, பிக்பிரதர் ஒரு மாபெரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

தோல்வி அடைந்து விடுவோம் என்று எப்போதேனும் நினைத்தீர்களா? ஏனெனில், ஏற்கனவே இருந்த ஒரு விஷயத்தை மெருகேற்றி புதிது போல் படைக்காமல் மிகவும் புதிய ஒரு விஷயத்தை தோற்றுவித்து செயல்படுத்தியதால்..?

இல்லை. என்னுடைய தயக்கங்கள் எல்லாம் தொழில்நுட்ப சம்பந்தமான விஷயங்களைப் பற்றியே இருந்தன. தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, 120 கேமராக்கள் ஒரே நேரத்தில் செயல்பட்டு படப்பிடிப்பு செய்து, ஒரு நிகழ்ச்சியை நாங்கள் உருவாக்கியதால், அத்தனை பதிவுகளையும் சேமிப்பது, எடிட் செய்வது போன்றவற்றைப் பற்றி சிறிது அச்சம் இருந்தது ஆரம்பத்தில்.

அந்தப் புதிய வகை படைப்பு உருவம் பற்றிய கருத்து எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? யாரேனும் திடீரென உங்களுக்குச் சொன்னார்களா அல்லது அது உங்கள் சொந்த எண்ணம் தானா – நிஜ வாழ்க்கை பரிசோதனைகளைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக ஆக்குவது?

அது ஒரு தற்செயல் தான்; என்னுடைய நிறுவனத்தில் ஒரு ஊழியர் இருந்தார். அவர் சொன்னார், தான் விமானத்தில் சென்றபொழுது ஒரு கட்டுரையை வாசித்ததாக – அமெரிக்க அறிவியல் திட்டம் ஒன்று (Biosphere -2 என்ற பெயர் கொண்டது) பற்றி. அந்தத் திட்டம் பற்றி அவர் மிகவும் வியப்புக் கொண்டதாகச் சொன்னார் – ஏனெனில், அந்தத் திட்டம் என்னவென்றால், ஒரு பெரிய கண்ணாடிக் கோப்பையினுள், ஒரு சிறு மனிதக் குழுவினர் ஒன்றாக வாழ வேண்டும், தங்களுக்கான காய்கறிகள் போன்றவற்றை உள்ளேயே வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியா?

இல்லை. அது ஒரு அறிவியல் பரிசோதனை முயற்சி. அந்த முயற்சியினால் நான் ஈர்க்கப்பட்டு, மேலும் மேலும் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பிக்பிரதர் கருத்தாக்கம் அதிலிருந்துதான் தொடங்கியது.

நிலவும் சூழ்நிலையை உடைக்கும் படைப்புவாதி நீங்கள். இந்த குணாம்சம், உங்கள் சிறுவயதிலிருந்தே உங்களிடம் இருந்ததா? சிறு வயதிலிருந்தே, திணிக்கப்படும் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்படும் மனோநிலை உங்களுக்கு இருந்ததா, அல்லாத வயதான பின்னர் தான் நீங்கள் அந்த குணத்தைப் பெற்றீர்களா?

நான் முதலில் தொலைக்காட்சியில், பொதுத்துறை (அரசாங்க) தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும்பொழுதுதான், இந்த நோயினால் தாக்குண்டேன்! ஏனெனில், ஒரு முறை நீங்கள் நேசிக்கத் துவங்கி விட்டால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உங்களை வசியப்படுத்திவிடும். தயாரிப்பு உதவியாளனாக நான் பணி புரிந்த என்னுடைய முதல் நிகழ்ச்சிகளில் ஒன்றை இன்றும் நான் நினைவு கூர்வேன். அது ‘மிஸ் ஹாலந்து’ அழகிப் போட்டி தேர்வு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு உணவகத்தில் நான் அமர்ந்திருந்த பொழிந்து, எனக்கு அடுத்திருந்த மேஜையில் இருந்தோர் அந்த நிகழ்ச்சிப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். நான் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பில் ஈடுப்பட்டவன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், விஷயம் என்னவென்றால், தொலைக்காட்சி என்னும் சாதனம் அவர்களை பாதித்திருந்தது. நாம் ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களுக்கு மக்கள் பொழுதுபோக்குவதற்கு ஒரு கருவியாக இருக்கிறோம் என்பதே நமக்கு ஒரு பெரும் எழுச்சியையும், உத்வேகத்தையும் கொடுக்க வல்லது.

ரியாலிட்டி டிவியை ஏன் நிறைய மக்கள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

ஏனெனில், புதுப் புது யோசனைகளை, கருத்தாக்கங்களைப் பரீட்சித்துப் பார்க்க அது வாய்ப்பளிக்கிறது. ரியாலிட்டி டிவி ஒரு புது வகையான தொலைக்காட்சி அனுபவம் என்பதாலும். இன்னும் நிறையப் பரிசோதனை முயற்சிகளை செய்வதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது. எண்ணற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன இன்னும் செய்வதற்கு. விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ரசிகர்களைப் பற்றியே நான் கவலை கொள்கிறேன். ஆகவே, ரியாலிட்டி டிவியை குறை கூறும் விமர்சகர்களுக்கு ஒரு கெட்ட செய்தியைக் கூற விரும்புகிறேன் – இந்த வகையான தொலைக்காட்சி இனி நிலைத்து இருக்கப் போகிறது.

Talpa Creative என்னும் பெயரில், மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் திட்டத்தை (crowd sourcing) நீங்கள் துவங்கியது ஒரு சுவாரசியமான விஷயம்.

ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு புதுக்கருத்தை, யோசனையை முன்வைக்க இயலும் என்ற எண்ணமே, அதைத் தொடங்கியதின் பின்னணி. யார் வேண்டு மானாலும் தமது யோசனைகளை முன் வைக்கலாம் என்றும், அவைகள் அனைத்தும் நடை முறைப்படுத்துவது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்றும் கூறியபோது, வரக்கூடிய எதிர்வினைகளை நான் குறைத்தே மதிப்பிட்டிருந்தேன். ஆனால், என் எதிர்பார்ப்புகளைப் பொய்க்கும் வகையில், முதல் சிலவாரங்களிலேயே சுமார் 20,000 யோசனைகள் வந்து குவிந்தன.

வந்த யோசனைகளைப் பரிசீலித்துவிட்டு, நீங்கள் வியப்பும் மகிழ்வும் அடைந்தீர்களா அல்லது ஏமாற்றமடைந்தீர்களா?

ஒரே நேரத்தில் வியப்பும், ஏமாற்றமும் அடைந்தேன். ஏனெனில், முடிவில், நாங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கக் கூடிய யோசனையோ, திட்டமோ, கருத்தோ கிடைக்கவில்லை.

ஏன் அப்படி?

தெரியவில்லை. ஒரு வேளை, நான் நினைத்திருந்தை விட ஒரு புது கருத்தாக்கத்தை அளிப்பது கடினமான விஷயமாக இருந்திருக்கலாம்.

ஊடகத் துறையில் அனுபவமில்லாதவர் களிடமிருந்து வந்ததனால், தங்களுடைய மேற்கூறிய திட்டத்தின் கீழ் வந்த யோசனைகள் எளிமை யானவையாக, முதிர்ச்சியற்றைவையாக இருந்தனவா?

ஆம், ஆனால் அது பிரச்சனை அல்ல. யோசனைகள் நல்லவையாக இருக்கும் பட்சத்தில், அவற்றை அடையாளம் காண்பது எங்களுக்குச் சுலபமானதே. இருப்பினும், அத்தகைய ஒரு நல்ல யோசனையை ஒரு ‘வடிவத்திற்கு’ (format) கொண்டுவருவது அதிக உழைப்பைக் கோரும் விஷயம். ஏனெனில், ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு கருத்தாக்கத்திற்கும், செயல் படுத்தக்கூடிய நிலையில் உள்ள ஒரு ‘வடிவத்திற்கும்’ நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு யோசனை, நான்கு வரிகளில் இருக்கலாம். ‘செயல் வடிவம்’ ஒரு பெரிய புத்தகம் போல், நுண்ணிய விவரங்களைக் கொண்டது. ஒரு தொலைக்காட்சி தொடராக மாற்றத் தேவையான பல விவரணைகளைக் கொண்டதாக இருக்கும். ஒரு ஸ்டுடியோவிலோ, படப்பிடிப்பிலோ திடீரெனத் தோன்றும் ஒன்றாக ‘செயல் வடிவம்’ இருப்பதில்லை, அது ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.

ஒரு தொழில் எனும் கோணத்தில், நீங்கள் உங்கள் படைப்பாக்க வேலைகளில் ஈடுபடும்பொழுது, ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் பெரும் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி, மனித இயல்புகளைப் புரிந்து கொள்வீர்களா அல்லது உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படுவீர்களா?

படைப்பாக்கம் என்பது ஒரு கணித அடிப்படையில் அமையும் விஷயம் அல்ல – இதைச் செய்தால் அது விளைவாகக் கிடைக்கும் என்று செய்வதற்கு. அது ஒரு அறிவியல் அல்ல.

நீங்கள் சொன்னது படைப்பாக்கம் பற்றிய ஒரு அற்புதமான புரிதல். ஏதேனும் ஒரு கட்டத்தில், ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் முன்னேற வேண்டுதல் அவசியமாகிறது, படைப்புகளை உருவாக்குவதற்கு.

அதனுடன் கூடவே, நம்முடைய அனுபவமும், உள்ளுணர்வும் கூடவே கை கொடுக்கும், ஆனால் இவை ஒரு ஐம்பது சதவிகிதம் தான்.

உங்கள் பார்வையில், மற்றும் உங்கள் அனுபவத்தில், மக்கள் மிகவும் கற்பனைத் திறத்துடன் செயல்படுவதற்கு எது காரணமாக அமைகிறது? உங்களுடைய அற்புதமான அனுபவப் பயணத்தில், மக்கள் தங்கள் கற்பனைத் திறத்தை வெளிப்படுத்த எது மிக அவசியம்?

தோல்வி அடைவதற்கு அஞ்சாதீர்கள். என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நான் கற்று தருவது – நீங்கள் நினைப்பதை அச்சமின்றி உரத்துச் சொல்லுங்கள். அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக் கொள்ள முயற்சியுங்கள். அசலாக செயல்படப் பாருங்கள். கற்பனைத் திறம் வெற்றி அடைவதற்கு, 80 சதவிகிதம் வேர்வையும், 20 சதவிகிதம் உள்மன உதவேகமும் போதும். உண்மையில், ஒரு புதியக் கருத்தாக்கத்தை வெற்றி பெறச் செய்ய, கடின உழைப்பினால் மட்டுமே இயலும். ஒரு புதிய கருத்தை திட்டவட்டமாக, முறையாக ஆராய்ந்து செயல்படுத்தி, ஒரு வேளை சில மாதங்களுக்குப் பிறகு, உங்களுக்கு திருப்தி இல்லையெனில், அதைத் தூக்கி எறிந்து விடும் மனோ தைரியமும் அவசியம்.

***

தமிழ் பிக்பாஸின் தந்தையான ஜான் டி மோல், ரியாலிட்டி டிவி எனும் கருத்தாக்கத்தைத் தோற்றுவித்தவர். புதிய வகையான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கி, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். Deal or No Deal, Big Brother, Fear Factor, The Voice போன்ற பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள் இவரால் உருவாக்கப்பட்டவை. இந்த நிகழ்ச்சிகள் உலகின் பல நாடுகளிலும் இன்றும் சக்கைப் போடு போடுகின்றன. Endemol மற்றும் Talpa என்பவை இவர் தோற்றுவித்த ரியாலிட்டி டி.வி நிறுவனங்கள்.

நேர்காணல் கண்டவர்: ஃபெர்கஸ் ஹய்

தமிழாக்கம்: ராஜேஷ் சுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!