home உன்னதம், நேர்காணல் வெடித்துப் பரவும் உணர்வுக்கலை

வெடித்துப் பரவும் உணர்வுக்கலை

கெவின் கோவல் உடன் ஒரு நேர்காணல்

– ஆரோன் சர்வர்

ஹிப்-ஹொப் என்பது மேலைய நாடுகளில் இசை மற்றும் பாடல்களில் புகழ்பெற்ற ஒரு கலைவடிவம். பெரும்பாலும் கருப்பு இனக்கலைஞர்கள் தங்களது ஆவேசமான உணர்வுகளை கலாரூபமாக வெளிப்படுத்தும் இந்த வகைக் கலைவடிவத்தை உலகளவில் அதிகாரத்திற்கு எதிரான குறியீடாக ஒடுக்கப்பட்ட கலைஞர்கள் கையாள ஆரம்பித்தனர். இந்த வடிவத்தில் உலகப்புகழ் பெற்றவர்களாக KRS-One என்ற ஆப்பிரிக்க ஹிப்-ஹொப் இசைஞர், Chuck D என்னும் அமெரிக்க ஹிப்-ஹொப் இசைஞர்  X-Clan என்னும் ஆப்ரோ – அமெரிக்க ஹிப்-ஹொப் இசைஞர், Public Enemy மற்றும் A Tribe Called Quest போன்ற ஹிப்-ஹொப் பாடல் குழுக்கள் இந்த வடிவத்தை மிகப்பெரும் கலக வடிவமாக உலகம் முழுக்கக் கொண்டாட வைத்தார்கள். கடந்த ஆண்டுகளில் இந்த வகை பெரியளவில் உலகம் முழுக்க பரபரப்பாகப் பெருகி வளர்ந்தது. கலகக் கலைஞர்கள் தங்களது கலை வெளிப்பாடாக இசையிலும், பாடல்களில் மட்டுமல்லாது கவிதை வடிவத்திலும் இந்த வகையை முன்வைத்தனர்.

அமெரிக்க யூதரான, கெவின் கோவல் இந்த ஹிப்-ஹொப் கவிதையில் முக்கியமான கவிஞர். இந்த வடிவத்தை முன்வைத்து Louder Than a Bomb என்கிற ஒரு அமைப்பை உருவாக்கி நடத்திவருகிறார். ஹிப்-ஹொப் வடிவத்தை கவிதைகளில் கொண்டுவர  நிறம் முக்கியமல்ல என்று சொல்லும் இவர், இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். தனது முதல்தொகுப்பாக ஹிப்-ஹொப் கவிதைவடிவங்களை உள்ளடக்கிய Sling Shots (2005) என்னும் இவரது நூல் வெடித்துப்பரவும் உணர்வினையளிக்கும் பல்லாயிரக்கணக்கான சிகாகோ இளைஞர்களை, கவர்ந்திருக்கின்றது. வெகு ஆழமாகக் கீறிச் செல்லும், ஹிப்-ஹொப் கவிதைச் சொற்கள் கவிதைத் துறையில் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைத் தருகின்றன என்கின்றனர் விமர்சகர்கள்.

In These Times என்ற இதழுக்காக இந்த நேர்காணல் கண்டவர்: ஆரோன் சர்வர்.

 

எப்போது முதல் உங்கள் கவி வடிவம் பிரபலம் ஆக ஆரம்பித்தது? இதுதான் நீங்கள் தேடியது என எப்போது தெரிந்தது?

என்னுடைய முதல் ஹிப்-ஹொப் நினைவுகள் 1982 ஆம் ஆண்டில் தொடங்கியது. ஆனால் ஹிப்-ஹொபின் பொற்காலம் என்று சொல்லப்படும் 88 முதல் 92 வரையிலான காலகட்டத்தில், நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அடித்த ஹிப்-ஹொபின் இரண்டாம் அலையின் போது எனக்கான ஹிப்-ஹொப் கவிதைகளை முகிழ்த்தெடுத்தேன். உயர்நிலைப் பள்ளியில் இருந்த போதே எழுத ஆரம்பித்தேன். அதற்கு நான் அதிகம் படித்தது காரணமாக இருக்கலாம். ஹிப்-ஹொப் என்னை நூல் நிலையங்களில் அடைத்து வைத்தது. Boogie Down Productions,  KRS-One,  Public Enemy and Chuck D,  X-Clan, the Native Tongue Posse,  A Tribe Called Quest இது போன்ற இன்னும் சில பெயர்களையும் வரலாற்றுப் புகழோடு கூடிய பெயர்களை இளைஞர்கள் அவர்களுக்கே உரிய இசையுடன் கூட்டிச் சொல்லுவார்கள். ஆனால் இவையெல்லாம் என்னவென்றே எனக்குத் தெரியாது. அதனால் நான் நூலகங்களுக்கு விரைந்து கருஞ்சிறுத்தையான Assata Shakur (கருப்பு விடுதலைப்படை உறுப்பினர்) – ஐப் படித்தேன்.

இவையெல்லாம் என்னுடைய உயர்நிலைப் பள்ளி கட்டுரைகள், மேலும் தயாரிக்கப்பட்ட கோப்புகளுக்குள்ளேயே அடங்கி விட்டது. அதன்பின் நான் போர்க்குணம் கொண்ட பள்ளிப் பாடல்களை என் ஆங்கில ஆசிரியருக்காக எழுதினேன்.  நாங்கள் படித்த யாவையும் மேல்மட்டத்துக்கான, குறுகிய ஐரோப்பிய குணம் கொண்டதாகவே இருந்தது. ஆனால் நான் என்னுள் உணர்ந்தது எல்லாம் ஆப்பிரிக்க குணம். பின்னர் கருப்பர்களுக்கான கானங்கள் என்னுடைய தலைக்குள் மோதத் தொடங்கின. ஆனால் எனக்கு, என் ஆசிரியர் கூறுவதற்கு வெளியில் இருந்தது கேட்கத் தொடங்கி இருந்தது தெரிந்தது. KRS மற்றும்  Chuck D எல்லாம் கருத்தாழமும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் முக்கியமானதாகவும் தொன்மம் நிறைந்தாகவும் மேலும் என்னுடைய பள்ளியில் நான் கேட்கும் வெள்ளையினப் பொய்களை விட மேலானதாகவும்தான் இருந்தது. இந்த முரண்பாட்டின் காரணமாகவே நான் எனக்கான ஏதோ ஒன்றைத் தொடங்க நேரிட்டது.

 

அப்படியாக, ஹிப்-ஹொப் நீங்கள் புதுமையைத் தேடும் ஒரு தளமாக இருந்ததா? அப்படிப்பட்ட தேடல் இல்லாவிடில் நீங்கள் அதைக் கண்டெடுத்திருக்க மாட்டீர்களா?

ஆமாம், அது எனக்கான பல கதவுகளைத் திறந்திருந்தது. நான் அவற்றில் சில கதவுகளின் ஊடே நடக்கத் தீர்மானித்தேன் ஏனெனில் அவை மற்ற வழிக்கு அப்பாற்பட்டதாகவும் எதிர் மறையாக கருத்துகளை தெளிவிப்பதாகவும் அமைந்தது. மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஹிப்-ஹொப் தங்கள் தேடலின் ஒரு பகுதியாக வந்தடைந்தனர். அவர்கள் நடந்து வந்தது விஷமிகள் மற்றும் ரௌடிகளின் கருத்தையோ அல்லது முன்னரே கட்டி வைத்துக் கொண்ட ஒரு கருத்தையோ ஒட்டியது போன்ற ஒரு பாதையே ஆகும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை ஹிப்-ஹொப் ஒரு அடிப்படையாக செறிவான அறிவு பூர்வமும், புத்திமையும் நிறைந்ததாகும். அவை தான் தன்னைக் கற்க என்னை ஈர்த்தன. அது 88 ஆம் ஆண்டில் இருந்த ஆர்ப்பாட்டமற்ற அறிவு. அறிவு, Kool Moe Dee சொல்லியது போல ஒரு அரசன் ஆகும். அதனால் தான் நான் கூர்மையான அறிவுடையவனாக இருக்க விரும்பினேன்.

 

நீங்கள் ‘Elegy for Lit X’ பற்றிய ஒளித்தட்டைக் கேட்டிருக்கிறீர்களா, அது உங்களுக்கு என்ன உணர்த்தியது என்று சொல்ல இயலுமா?

லிட் எக்ஸ், நான் விரும்பிய, எனக்கான  வெளி அது. அது எத்தகைய வெளியை எனக்காக ஏற்படுத்திக் கொடுத்தது என்பதைக் கூட உணர இயலாத அளவிற்கு அதன் இயக்கமிருந்தது. அது ஒரு ஆப்பிரிக்க உணர்வை நன்கு படித்த மிகவும் விசித்திரமான கருப்பிந்திய வரலாறு தெரிந்த, தங்களால் அடுத்த கட்டக் கதைசொல்லிகளாக உணர்ந்தவர்களால் நடத்தப்பட்ட புத்தகக் கடை. அவர்கள் ஒவ்வொரு சனி இரவும் பாரம்பரிய ஆன்மிகக் கூட்டங்களை நடத்தினர். அங்கு அவர்கள் பேசுவார்கள், பிரார்த்தனைகள் செய்வார்கள், பாடுவார்கள். அவை அனைத்தும் பார்க்கப் பரவசமாக அறிவார்ந்த தன்மையுடன் தெரியும். நான் அப்போதுதான் எனக்காகவும் எனக்குள்ளும் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது இப்படி பேச்சுகளால் ஆன ஒரு பாரம்பரியம் சிகாகோவிலும் அதை சூழ்ந்த நாடுகள் மற்றும் உலகெங்கும் இருப்பது தெரியாது. இதை பார்த்ததும் மற்றவர்களோடு பேசும் போது வார்த்தைகள் என்னவெல்லாம் செய்யும் என்பது புலப்படத் தொடங்கியது.

 

ஹிப்-ஹொப் பொதுவாக ஆதிக்கப் பாரம்பரியத்தை எதிர்க்கும் கதை சொல்லியாகவே இருக்கிறது. இது உங்கள் எண்ணத்தையும் எழுத்தையும் எப்படி பாதித்தது?

பெரும்பான்மையாக நியூயார்க்கிலிருந்து நான் பெறும் ஹிப்-ஹொப்புகள் வேலைக்குச் செல்லும் வகுப்பினர் சொல்பவையாக அமைந்திருக்கின்றன. அந்தக் கதை சொல்லிகளின் கருத்தோடு ஒத்துப் போகும் உணர்வையே பெற்றிருந்தேன் நான். நான் இந்தக் கதை சொல்லிகளின் காவியங்களைச் சொல்லப்பட்டதை விட அதிகமாகப் பல்வேறு காரணங்களுக்காக என் தாயும் தந்தையும் இந்த முதலாளித்துவ அமைப்பினால் பட்ட அவதிகளை நேரில் கண்டிருக்கிறேன். Chuck D லாங் தீவிலிருந்து வந்திருந்தார். மேலும் De La Soul அவர்களும் அப்படியே வந்தவர்தான். அவர்கள் இருவரும் கருப்பின சிறுநகரங்களைச் சார்ந்தவர்களின் குழந்தைகளே. அவர்கள் இதே மாதிரியான பொருளாதர அமைப்பில் அவர்களின் பெற்றோர்களில் வேலை, அவர்களுக்கான கடினமான தருணங்கள் மேலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இவற்றைப் பற்றியே பேசியிருக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே எனக்கு இவர்களோடான உணர்வலைகள் ஒத்திருந்தது. அதிலிருந்து கடைசியாக நான் சொல்ல வேண்டிய கதையைக் கற்றுணர்ந்தேன்.

நகரங்களிலும் நகர்சார்ந்த கிராமங்களிலும் இருக்கும் பள்ளிக்கூடங்களில் நடக்கும் பயிலரங்குகளில் ஆசிரியராகத் தொண்டாற்றுவது சுவாரசியமாக இருக்கிறது.

 

ஹிப்-ஹொப்பில் காலத்துக்குப் பொருந்தும் கருத்துகளை வடிவமைப்பதில் வரும் சிக்கல்களை எப்படிக் கையாண்டிருக்கிறீர்கள்? இந்தச் சிக்கல் கருப்பினக் கலச்சார கலை வடிவங்களில் பங்கெடுக்கும் வெள்ளையருக்கு இருக்கும் பிரத்தியோகமான கருத்துச் சிக்கல் அல்லவா?

நானோ அல்லது மற்ற வெள்ளையரோ இந்த முறையை, முறையாக உபயோகிக்கத் தேவைப்படும் ஒரே உத்தி, அவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள் என்ற அவர்களின் நேர்மையான பேச்சு மட்டுமே. அந்தக் குழுவில் படைப்பாளிகளாக அதிக வெள்ளையின நண்பர்கள் இல்லை. மேலும், அது ஒரு வெள்ளையருக்கான குழுமமே அல்ல. நான் முதல் கட்டமாக ஹிப்-ஹொப்பில் கற்றது கலையையும், அதைச் செய்யத் தேவையான திறனையுமே. அது நான் பார்க்க எப்படி இருக்கிறேன் என்ற வரைமுறைகளை வகுக்கவில்லை. ஹிப்-ஹொப்பர்கள் அமெரிக்கர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், ஒரு எல்விஸின் எல்லா குணங்களையும் ஹிப்-ஹொப் உள்ளடக்கியிருந்தது. மேலும் அது யார் எதைப் பற்றிய உண்மையை நேர்மையாக தங்கள் கதை சொல்லும் உத்தியில் கையாண்டிருக்கிறார்கள், திறன்பட வடிவமைத்திருக்கிறார்கள், அது நேர்த்தியாகவும், ராகத்துடனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற அனைத்து வித்தியாசங்களையும் கூர்ந்து அறிந்திருக்கிறது. எது உகந்தது அல்லது எது உகந்ததாக அமைக்கப்பட்டிருக்கிறது என்ற படிப்படியாக வளரும் விதத்தை ஹிப்-ஹொப் ஏற்படுத்தும் திறன் கொண்டது.

 

ஹிப்-ஹொப்பும், யூதமும் ஒருமித்த கருத்துடையவையாகவும், உங்களுக்கு உகந்த தளமாகவும் தோற்றமளிக்கிறது. இரண்டிற்கும் பொதுப்படையாக உள்ள தன்மைகள் எவை?

வாய்வழிக் கதை சொல்லும் உத்தியை பற்றி சில விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு Bar Mitzvah (சிறுவர்கள் பதின்ம நிலைக்கு மாறும்போது நடத்தப்படும் யூத சடங்கு)- நடக்கும் போது சில தேர்ந்தெடுக்கப்பட்ட Haphtorah பகுதிகளை மனனம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஹீப்ரு பள்ளிகளைப் பிடித்ததில்லை. அங்கே தான் நான் மனனம் செய்வதற்கென்று வற்புறுத்தப் பெற்றேன். அப்போது நான் புனித அலுவலகத்தில் ஒலிக்கும் மந்திர ஒலிநாடாக்களைக் கேட்டிருக்கிறேன். அவற்றின் ராகம் ஹிப்-ஹொபின் ராகத்திலிருந்து சற்றும் வேறுபடவில்லை. அதன் பின் நான், என் தந்தை, என்னுடைய அத்தை மேலும் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்த கதைகள் எல்லாம் எப்படி ரஷ்யாவிலிருந்து நாங்கள் வந்தோம், ஏன் சிகாகோவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, தங்களை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள எப்படி இங்கேயே இருக்க வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றித்தான். அதில் இருந்த சில விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தது. அதில் இருந்த நகைச்சுவை உணர்வு, மன வலி, அழகியல், கொடூரம் என்று அதிலிருந்த எல்லாமே ஹிப்-ஹொப்பிலும் இருந்தன.

நான் ஜுடாயிஸத்தைக் கையாள வேண்டுமென்றே ஹிப்-ஹொப் என்னிடம் தீவிர எதிர்பார்ப்பாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டாம் பாலஸ்தீன அரேபியர்களில் இஸ்ரேல் எதிர்ப்பின் பின் ஹிப்-ஹொப் என்னை இஸ்ரேலிய பாலஸ்தீனியர்களைக் கையாளக் கட்டளையிட்டது. ஏனெனில் அது எங்கள் சமூகத்திற்குள் இருந்த ஒரு பிரச்சனையாகும். நான் அதைக் கையாண்டிருக்காவிடில் அதைப் பற்றிப் பேசி இருக்காவிடில் நான் ஒரு நேர்மையற்றவனாகவே இருந்திருப்பேன். நான் ஒரு யூதக் குழந்தையாக உலகில் மிகத் தீவிரமாக மக்கள் மனத்தில் இருக்கும் ஒரு எதிர்ப்பின் சூழலை நான் கவனிக்க வாய்ப்பற்றவனாக இருந்திருப்பேன்.

 

ஹிப்-ஹொப், ஒரு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு கிடைக்கும் மொழியின் வெளிப்பாட்டிலும் எளிமையான வடிவமும் உணர்த்து விதமும் கொண்டது. நீங்கள் இளம் சிகாகோ எழுத்தாளர்களுடன் பணி புரியும் போது இந்த இடைவெளியை எப்படி சரி செய்தீர்கள்?

இலக்கியத்தையோ அல்லது இலக்கியத்தின் வளர்ச்சியையோ படிப்படியாகத் தொடங்கும் போது, நான் ஜான் டன்னோ அல்லது ராபர்ட் ஃப்ராஸ்ட் அல்லது எட்கர் ஆலன் போ இவர்களிலிருந்து தொடங்கினால், அது நமக்குப் பெரும்பான்மையான சாதுர்யம் மிக்க அல்லது தங்களுக்குத் தெரிந்ததைப் படிக்கும் குழந்தைகளை இழக்க நேரிடும். ஹிப்-ஹொப் நான் பள்ளிப் படிப்பைத் தொடங்கும் முன்னரே தொடங்கி விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், அது நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களை உடனடியாகக் கையாளுகிறது. மேலும் அது அமெரிக்க இலக்கியத்திற்கோ, அமெரிக்க சமூகப் பொருளாதர வரலாற்றின் உள்ளோ அல்லது மத உணர்வு சார்ந்தவற்றிற்குள்ளோ நுழையும் பின்னோக்கிய பயணத்திற்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்கிறது. பள்ளிக்கூட அறைகளில் குழந்தைகளுக்கு, காலணி, பெரியது, சங்கீதம், சந்தோஷஒளி இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கற்கும்போதே, அது அவர்களில் இலக்கிய விவாதங்களை துவக்குவதற்கோ அல்லது சமூகப்பாடங்களைப் படிப்பதற்கோ சிறந்த தொடக்கமாக இருக்கிறது.

முப்பதொன்பது சதவிகித சிகாகோ குழந்தைகள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். ஐம்பத்து ஏழு சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப் படிப்பையும், மேலும் நாற்பத்தேழு சதவிகித்தினர் மட்டுமே கல்லூரிப் படிப்பையும் முடிக்கின்றனர். சிகாகோ பள்ளிகள் எல்லாம் குழந்தைகளில் அறிவின் அடி நாளத்தைத் தேட முடியாத காரணத்தால் மிகப் பரிதாபமாகத் தோற்றுப் போகின்றன. சிறைச்சாலைகளை, தாராளமயமாக்குதல், தொழிற்சாலைகளில் வளர்ச்சி, கட்டிடங்களை உருவாக்குதல், காவல் துறை அராஜகம், இன்னும் பல பொதுப்படையான பிரச்சனைகளை குழந்தைகளுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். இந்த எல்லா விஷயங்களுமே குழந்தைகள் கேட்கும் இசையிலும் அவர்களின் வாழ்க்கையிலுமே இருக்கின்றன. இதன் மூலமே படிப்படியாக முன்னேறும் படிப்பிக்கும் அமைப்பை நாம் கொணர முடியும். இப்படிச் செய்வதால் மட்டுமே ஆழ்ந்துணரும் அறிவைக் குழந்தைகளுக்குப் புகட்ட முடியும்.

 

கவிதைகள்

 

துர்கனவுகளுக்கு பழகுதல் :1

பாரிஸ் ஹில்டன் தனித்து அமர்ந்திருந்தாள்
பின்னங்கழுத்தின் ஒளிவட்டம் ஆண்டரஸின் செய்த தவறு போல் காட்சியளித்தது
அவள் குவிந்த கீழுதடு சிவந்தொளிர்ந்தது வெளிச்சத்தில்,
ரோமத் தக்காளி நிற உதட்டுச் சாயம் என் கவனத்தைக் கவர்ந்திழுத்தது
விடுதியின் இருக்கையிலிருந்து அருந்திய மதுபானம்
என் தன்னம்பிக்கையை ஊற்றெடுக்கச் செய்தது

நான் அவளை அன்பின் இருக்கைக்கு அருகில் அமரந்திடச் சொன்னேன்
அவள் பார்வை திறந்தவெளியில் தூசிகளைத் துடைத்தபடி இருந்தது.
அவளது பாதங்கள் வெண் நிர்வாணமாக சுருளிவில் போல சுருண்டிருந்தன,
என் அவசர வேளைகளில் என் மேலங்கியின் பொத்தான்கள்
அவளது மேலாடையை உரசும் மார்புக் காம்புகள் ஆரஞ்சுநிற மிட்டாய் போல்
என் பாட்டியின் தேனீர் மேசை மேலிருக்கும் கண்ணாடிக் குவளையை நிறைத்திருக்கும்.

என் கழுத்துபட்டையிலிருந்து ஒரு மலரை உருவி
அவள் மீது தண்ணீராகத் தூறினேன்,
சுருட்டின் நனைந்த பாகத்தை மெல்ல உறிஞ்சினேன்.
நகைச்சுவை, பாட்டனின் கல்லரை,
வெண்மாளிகை நிறம் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அவளது ஒளி புன்னகைத் தணலென நடனமாடிய என் கரங்களில்.
அவள் ஒவ்வொரு முறையும் முத்தமிடக் குனிந்தபோது
என் நாசி தனக்கான இரையைத் தேடியபடி இருந்தது.
அவள் என்னுடைய தடிமனான விழிப் புருவத்தைப் பற்றியோ
பொது உடமைக் கொள்கையாளர்கள் பரப்பி இருந்த
என் பற்றிய அனுதாபங்களையோ கவலை கொள்ளவில்லை.

அடிவானம் எரிந்து கொண்டிருந்தது
நாங்கள் இருபதாவது மாடி வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம்.
தேன் நிற மெருகேற்றிய தேனீர் மேசையில் கால்களை வைத்திருந்தேன்.
பொன் நிற ஆடை அணிந்த ஊழியர்
எனக்கு அருந்தவோ உண்ணவோ எதுவும் தேவையா என்று கேட்கிறான்.
எல்லாம் இருந்தது. ஆனால்,
பாரிஸ் மற்றும் நான் கொஞ்சம் பழுப்பு நிறமாக இருக்கிறோம்.
நிலத்தின் கொடூர சத்தங்களால் சூழப்பட்டுள்ளோம்.

சிவந்து சுழன்று ஜொலித்துக் கொண்டிருந்த அபாயச் சங்கொலிகளில்
குதூகலித்துக் கொண்டிருந்தோம்.

 

துர்கனவுகளுக்கு பழகுதல் : 2

 

ஏஞ்ச‌லினா ஜீலி என் ம‌ன‌தைக் க‌ட்டுப‌டுத்திக் கொண்டிருந்தாள்.
குச்சி மிட்டாய் கைப்பிடியின் நிறம்,
அவ‌ளது வாக‌ன‌த்தை அவ‌ள் ஒவ்வொரு முறை திற‌க்கும் போதும்,
அது என்னைச் சுழ‌ற்றி ஒருவித‌ ம‌ய‌க்கநிலைக்குத் த‌ள்ளுகிற‌து.
காந்த‌ம் போன்ற‌ என் உட‌ல் உத்த‌ர‌வு செய்கிற‌து. ம‌ன‌ம் அச்சுறுத்த‌லை உண‌ர்கிற‌து.
ஆனால் நான் கைய‌று நிலையில் இருக்கிறேன்.

அவ‌ள் விசித்திர‌ப் பொழுதுக‌ளிலேயே த‌ன்னைக் காட்சிப்ப‌டுத்துகிறாள்.
வியாபாரி ஜோவிட‌ம் இருந்த‌ ரொட்டித் துண்டின் துளைக‌ளில்
கோதுமைத் துக‌ள்க‌ள் செங்க‌ற்க‌ளைப் போல‌ உதிர்ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌.
நீண்டு செல்லும் ர‌யிலில் ஏறும் முய‌ற்சியில் த‌டைக‌ம்பிக‌ளை க‌ட‌க்க‌ முடியாம‌ல்,
ர‌யில் நிலைய‌த்தில் மெல்லிய‌ க‌ருப்பாடையை,
இடையில் க‌ட்டி இருந்த‌ அவ‌ளிட‌மே க‌வ‌ர்ந்திழுக்க‌ப்ப‌ட்டேன்.
அவ‌ளும் ம‌ந்திர‌த்திற்குக் க‌ட்டுப‌ட்டாற் போலிருந்தாள்.
ந‌டைபிண‌ங்க‌ளின் இர‌வு,
FW முர்னாவ் ப‌ட‌ங்க‌ளில் துணைந‌டிக‌ன், ஒரு எகிப்திய‌ ம‌ம்மி போல‌ இருக்கிறான்,
அவ‌ளை நோக்கிய‌ என‌து வாத்து ந‌டைக‌ளை எடுத்து வைக்கும் போது.

ஏஞ்ச‌லினா என்னை முன்னே இழுத்த‌ப‌டி இருக்கின்றாள்,
மொர்கான் ஃப்ரிமேன் தான் என்னைக் காக்க‌ இய‌லும்.
இதுவே நான் வெளியுல‌கைப் பார்க்கும் க‌டைசி வாய்ப்பாகும் என்று
ஏதோ ஒன்று என்னை அறிவுறுத்திய‌ப‌டி இருக்கிற‌து.
முடி திருத்த‌க‌ங்க‌ளின் க‌த‌வைப் போன்ற‌ க‌த‌வுக‌ள் சுழ‌ன்று திற‌க்கின்ற‌ன‌.
அவ‌ற்றை நோக்கி நான் ச‌ங்கிலிக‌ளால் திண‌றும்
சிறைச்சாலைப் பிணைகைதி போல‌ மெதுவாக‌ ந‌க‌ர்கிறேன்.

என் விர‌ல்க‌ள் அவ‌ளை ஒரு முடிவிலிக்குள் நெட்டித் த‌ள்ளுகின்ற‌ன‌.
மொர்கான் ஃப்ரிமேன் ஒரு மூலையிலிருந்து த‌ன் ம‌ய‌க்க‌நிலை மீண்டெழுகிறான்,
த‌ன் சாம்ப‌ல்நிறக் க‌டைநிலைப் ப‌ணியாள‌ர் அணியும் காற்ச‌ட்டையை அவிழ்க்கிறான்,
த‌ரை துடைக்கும் துணியையும் வாளியையும் கீழே வீசி ஏறிகிறான்,
முழு வேக‌த்தோடு ஓடுகிறான், குதிக்கிறான்,
த‌ன் உட‌ற்க‌ட்டை குறுக்கே நீட்டி முழ‌க்கி என‌க்கும் ஏஞ்ச‌லினாவிற்கும் இடையில்
எலும்பின் ம‌யிரிழை முறிவு போன்ற‌ ஒரு முறிவை ஏற்ப‌டுத்துகிறான்,
த‌ரையோடு ம‌ல்யுத்த‌ம் புரிவ‌து போல் முய‌ன்று பின் ம‌ய‌ங்கி விழுகிறான்.

இவனின் வாழ்க்கை என் சொந்த‌க் கார‌ணிக‌ளிலான அபாய‌த்திற்குள்ளாகிய‌து.

 

 

துர்கனவுகளுக்கு பழகுதல் : 3

இலக்கில்லாத யூத அடையாளமற்ற பேச்சுகளை
சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தோம்.
மொத்த நகரமும் அவளது விழித்திரையில் பிரதிபலித்தது.
பார்வை தடைகளற்று ஜன்னல் வழியே லாஸ் ஏஞ்சல் எரிவதைப் பார்த்து கொண்டிருந்த‌து.

நீங்கள் ஆஸ்கார் டிலார்ன்டா வடிவமைத்த சிவப்பு நிற அங்கி அணிந்து
ஒரு ஏழைப் புலவனிடம் ஆர்வத்தோடு நீதி புத்தகங்களை வாசிக்கின்றீர்கள்.
கைமுட்டிவரை வெள்ளைக் கையுறையணிந்த உங்கள் கரம்
நீரிலிருந்து வெளியேற்றப்பட்டு
தங்கள் மரணத்துக்குப் போராடிக் கொண்டிருக்கும்
மீன்களின் கழுத்து துடிப்பதைப் போலவும்
கழுத்தறுக்கப்பட்ட கோழிக்குஞ்சைப் போலவும்
நடனமாடிக்கொண்டிருந்தது

சத்தமிட்டு கத்தி அழுது சரவிளக்குகளைத் தூக்கி எறிந்து
ஸ்காட்ச் குவளைகளில் நட்சத்திரப் பட்டிகளில் முணுமுணுத்திருக்கும்
கண்ணாடிப் பரல்களை அழுத்தித் தேய்த்தபடி
இருந்தான் மதிப்பிற்குரிய மனிதன் ஒருவன்

இந்த கருத்த மழையங்கியில்
டே உன்னை காதலித்தைப் போலவே காதலித்து கிளர்ச்சியுறுகிறேன்.

 

தமிழாக்கம் – உயிரோடை லாவண்யா

உன்னதம்  29 வது இதழில் (டிசம்பர்  2009) வெளிவந்தது. 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!