home உன்னதம், நேர்காணல் 2017 நோபல் அமைதி விருது : அகிரா கவாஸாகி நேர்காணல்

2017 நோபல் அமைதி விருது : அகிரா கவாஸாகி நேர்காணல்

இந்த வருட அமைதிக்கான நோபல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிரா காவாஸாகியுடன் நேர்காணல்

அகிரா கவாஸாகி பன்னாட்டு குடிமைச் சமூகக் கூட்டமைப்பின் பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்புப் பிரச்சாரக் குழுவின் (ICAN) முக்கியமான ஜப்பான் உறுப்பினர், 2017 நோபல் அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த அமைப்பு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஏற்பட உதவியது. ஜூலை 2017-ல் 122-1 என்ற வாக்கு அடிப்படையில் ஐக்கிய நாடுகளால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விருது விழாவில் பங்கேற்பதற்கு முன் காவஸாகி NHK WORLD – இதழுக்கு அளித்த நேர்காணல்.

 

முதலில், அமைதி விருது பெற ஓஸ்லோவுக்குச் செல்ல இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது ஒரு மாபெரும் மரியாதை, ஆனால் அதே சமயம், ஒரு மாபெரும் பொறுப்பு, ஏனெனில் நாம் இப்போது அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் பெற்றிருக்கிறோம். நோபல் அமைதிக் குழு முழுமையான அணு ஆயுத ஒழிப்புக்கான இந்த ஒப்பந்தத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல அடையாள அறிவிப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளது. எனவே, அவர்கள் ICAN-ம், அனைத்து பிரச்சாரகர்களும் தடை கோரியவர்களும் மேலும் உத்வேகத்துடன் செயலாற்றுவதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என நினைக்கிறேன். ஆகவே, விருது விழாவில் பங்கு கொள்வது நாம் மேலும் அதிகமாகச் செயலாற்ற வேண்டும் – அதிக ஊக்கத்துடன், அதிக வலிமையுடன் – அணுஆயுதங்கள் தடை செய்யப்பட வேண்டும் எனும் நமது குறிக்கோளுக்காக.

 

ICAN வரலாறு பற்றி, உங்கள் செயல்பாடுகளின் வரலாறு பற்றி, குறிப்பாக அணு ஆயுத வெடி விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஹிபாகுஸா பற்றிக் கூறுங்கள்.

ICAN 2007-ல் ஆஸ்திரேலிய மருத்துவர்களின் முனைப்பாற்றலால் உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியப் போர் தடுப்புக்கான பன்னாட்டு மருத்துவர் குழு ஒரு அணு ஆயுதத் தடை ஒப்பந்த உருவாக்கத்தின் மீது கவனம் செலுத்தும் ஒரு பன்னாட்டுப் பிரச்சாரத்தை முன்னெடுக்க ஒரு செயல் குழு ஒன்றை உருவாக்கியது.

பிறகு 2011 வருடம், இந்த அமைப்பு வளர வளர, ஸ்விட்சர்லாந்து ஜெனிவாவில் பன்னாட்டு அலுவலகத்தை நிறுவினோம். சில அரசுகளின், தனியார் அமைப்புகளின் ஒரு வெளிப்படையான, மனம் திறந்த நிதி ஆதரவு காரணமாக, பன்னாட்டு அலுவலகத்தில் சில அலுவலர்களை நியமிக்க முடிந்தது. இப்போது 100 நாடுகளுக்கும் அதிகமாக 460 அமைப்புகளுக்கும் அதிகமாக நாங்கள் பெற்றுள்ளோம்.

எனது அமைப்பு அமைதிக் கப்பல் (Peace Boat) டோக்கியோவை அடிப்படையாகக் கொண்டது. ஒரு பெரிய பயணியர் கப்பலைப் பயன்படுத்தி பல்வேறு அமைதி நிகழ்வுகளுக்காகச் செயலாற்றக் கூடிய ஒரு அமைப்பு அது. இந்தக் கப்பல் மூலம் நாங்கள் அமைதிக்கான கல்வியை நடத்தி வருகிறோம். அணு ஆயுதத் தடை என்பது மிக முக்கியமான கருத்தியல்களில் ஒன்று. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் மீண்டவர்களை வரவழைத்து, ஹிபாகுஸா கப்பலில் நாங்கள் சந்திக்கும் நாட்டு மக்களுடன் அவர்களுடைய சான்றாதார அறிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்து வருகிறோம்.

2008-ஆம் ஆண்டு அமைதிக் கப்பல் உறுப்பினர்களான நாங்கள் ஆஸ்திரேலிய ICAN-ன் நிறுவனத் தலைவர் திரு.தில்மான் ரூஃப் அவர்களைச் சந்தித்தோம். பிறகு, ICAN-ல் இணைந்து கொள்ள அமைதிக் கப்பலுக்கு அழைப்பு வந்தது. நான் ICAN-ன் தலைமைக் குழுவில் இருந்தேன். அப்போதிருந்து அமைதிக் கப்பல் பல மற்ற ஜப்பானிய குழுக்களுடன் இணைந்து ஒரு முக்கியமான பங்களிப்பை, குறிப்பாக அணு ஆயுதங்களின் மானுடப் பாதிப்புகள் பற்றிய செய்திகளைப் பரப்பும் தளத்தில் பங்காற்றி வருகிறது.

 

ஹிபாகுஸா பங்களிப்பையும் உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் அவர்களின் சான்றாதார அறிக்கைகளையும் நீங்கள் எந்த முறையில் விவரிக்கின்றீர்கள். அவர்களின் பங்களிப்பு என்ன?

நல்லது, அணு ஆயுதங்களின் எந்த வடிவிலான பயன்பாடுகளும் நிகழ்த்தும் மானுட பாதிப்புகள் பற்றிய செய்தியைப் பரப்பும் மிக அடிப்படையான பங்களிப்பை ஹிபாகுஸா செய்து வருகிறது. மானுடத் தாக்கம் என்பது வெறும் இரண்டு சொற்களால் ஆனது, ஆனால் முதல் தர அனுபவங்கள், ஒரு உண்மையான மனிதனின் நேரடி உரையாடல், அவர்களுடைய கதைகூறலைக் கவனித்தல், பார்வையாளர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. உலகில் உள்ள அனைவரும் ஹிரோஷிமா அல்லது நாகசாகி எனும் பெயரை அறிந்துள்ளனர். அங்கு பலவிதமான அணு ஆயுதங்கள் கையாளப்பட்டதை அவர்கள் அடிப்படையிலிருந்து புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் அவ்வப்போது இது ஒரு அரசியல் விளையாட்டாக, ஒரு பன்னாட்டு ஆதிக்க விளையாட்டாக எதிர்கொள்ளப்படுகிறது. ஏனெனில், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தத் தளத்தில் உண்மையான விளைவு எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிந்திருக்கவில்லை. எனவே, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் மீண்டவர்களின் முதல்தரச் சான்றறிக்கைகள் அணு ஆயுதங்கள் பற்றிய மக்களின் அபிப்ராயங்களை வெகுவாக மாற்றுகின்றன.

நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். பல இளைய மாணவர்கள், சிறுவர்கள் அல்லது இளைய வல்லுனர்கள் வெகு ஆர்வமாக முன் வந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மேலும் கேள்விகளைக் கேட்டு அறிந்து கொண்டதை நான் திரும்ப நினைத்துப் பார்க்கிறேன். வெளிப்படுத்தப்பட்ட முதல்தர கதைகூறலைக் கேட்டு, அவர்கள் அனைவரும் உண்மையில் வியப்புற்று, கிளர்ச்சி அடைந்தனர். ஹிபாகுஸா கதைகள் அவர்களுடைய ஆன்மாக்களை உலுக்கி ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.

இது இங்கு ஜப்பானில் ஒரு வகை வஞ்சப் புகழ்ச்சி. இளைஞர்கள் ஆர்வத்தை இழந்து விட்டதாகச் சொல்லப்படுவதுண்டு. ஹிபாகுஸா கதைகள் பாட நூல்களில் இருந்தாலும், இது ஒரு அதிகாரப் பாடப்பிரிவின் ஒரு பகுதி. அவர்களால் அதை எளிதாக அணுக முடியும். ஆனால் இப்போது மிக அதிக அளவிலான இளம் ஜப்பானியர்கள் அந்தப் பழைய கதைகளை ஆர்வத்துடன் உணரமுடியவில்லை எனக் கூறுகின்றனர். ஆனால் அதற்கு மாறாக, உலகின் பல மற்ற பாகங்களில் பல நாடுகளில் நான் சந்தித்த இளைஞர்கள் மேலும் அதிகமாக அறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஹிபாகுஸா கதை கடந்த காலத்தில் உலக மக்களிடையே அதிகமாகப் பகிர்ந்து கொள்ளப்படவில்லை அல்லது அறிவிக்கப்படவில்லை என நினைக்கிறேன். எனவே ஜப்பான் தவிர மற்ற பெரும்பாலானவர்களுக்கு அது மிகப் புதிது. ஜப்பானியர்களுக்கு அந்த விவரம் திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு ஒருவிதச் சலிப்பை உருவாக்கி விட்டது, “ஓ, எங்களுக்கு ஏற்கனவே தெரியும், அது போதும்.” உலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு அது இன்னமும் புத்தம் புதிதாகத் தோன்றுகிறது.

மேலும் எட்டு வருடங்களுக்கு முன், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் தார்மீகப் பொறுப்புணர்வைக் கவனத்தில் கொண்டு, அணு ஆயுதமற்ற உலகிற்காக, முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நினைத்துப் பார்க்கிறேன். அது மக்களின் எண்ணத்தை வெகுவாக மாற்றுயுள்ளது என நினைக்கிறேன். பாரக் ஒபாமாவும் ஹிரோசிமாவுக்கு வருகை புரிந்தார். எனவே அந்தச் செயல் மக்களின் அபிப்ராயங்கள் மீது அல்லது அணுகுமுறைகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் அணு ஆயுதச் சிக்கல்களை எதிர்கொள்வதில் ஒரு மனிதார்த்தப் பண்பை அல்லது நல்லெண்ணத்தை அடைய முடிந்தது.

 

இந்த வருடம் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது நீங்கள் அங்கு இருந்தீர்கள், அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

அது மிகவும் உற்சாகமான தருணம்! உண்மையில் ஒவ்வொருவரும் அதைக் கொண்டாடினர். ஒரு ஆரவாரம்மிக்க கைதட்டல், ஒரு ஆழ்ந்த அரவணைப்பு, ஒரு முத்தம், கண்ணீர், புன்னகைகள். அது எனக்கும், பல ஹிபாகுஸாவினர்களுக்கும், பல அதிகார ஆளுமைகளுக்கும், ஆர்வமுள்ள அரசுகளுக்கும், கடுமையாக உழைத்த அரசியல் நிபுணர்களுக்கும் மனதை ஈர்த்த தருணம். நாங்கள் சாதித்து விட்டோம்! நாங்கள் சாதித்து விட்டோம்!

மக்கள் தீவிரமாக இருந்த பொழுது, அரசுசாரா நிறுவனங்கள், ஹிபாகுஸா, அரசுகள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்ற பல்வேறு இயக்கத்தினர் ஒன்றிணைந்த பொழுது, எங்களால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடிந்தது, நாங்கள் சாதித்து விட்டோம். எனவே இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல எனக்கு இது மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

“அணு ஆயுதங்களை ஒழிப்போம்” என்பது நோபல் அமைதி விருது விழாவில் ICAN-ன் முதன்மைச் செய்தியாக இருக்கும்.

எவ்வாறு? முதலில், இந்த ஒப்பந்தத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஒப்பந்தத்திற்குப் போதுமான கையொப்பங்களையும் உறுதிமொழிகளையும் பெறுவதன் மூலம், இந்த ஒப்பந்தம் வெகு விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அணு ஆயுதங்கள் மீதான மதிப்பீட்டில் மாற்றம் ஏற்படும். அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்கு முன், அணு ஆயுதங்கள் ஒரு அதிகாரக் குறியீடாகக் கருதப்பட்டது. அந்த ஆயுதங்களால் ஒரு வல்லரசு நாடுகளின் அணியில் நுழைய முடியும். ஆனால் இப்போது இந்தத் தடை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபின், அணு ஆயுதங்கள் மிகத் தவறானவை, மோசமான ஆயுதங்கள். நீங்கள் அவற்றிடமிருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையா?

அணு ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் மீதும், ஜப்பான் போல பாதுகாப்புக் கொள்கைகளில் அணு ஆயுதங்களைச் சார்ந்திருப்பவர்கள் மீதும் மிகப் பெரிய அளவில் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் சுமத்தப்பட்டன. இப்போது அணு ஆயுதங்களை உருவாக்குவது சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஒரு தனிநபருக்கும், அரசுகளுக்கும் ஒரு குற்றமாகக் கருத்தப்படுகிறது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது இப்போது ஒரு போர்க் குற்றம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது மிகக் கடினமாக மாறிவிடும்.

“பயனற்ற இந்த ஆயுதங்களை எவ்வாறு பராமரிப்பது?” என அறிவார்த்த தலைவர்கள் சிந்திக்கத் தொடங்குவர். பொருளாதார அர்த்தத்தில், அணு ஆயுத உற்பத்திக்கு உதவும் நிறுவனங்களிலிருந்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பங்களிப்பைக் குறைத்து, வெளியேறுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்கும். ஏனெனில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வது தீங்கானது, மனிதார்த்தமற்றது எனப் பன்னாட்டுச் சட்டங்கள் கூறுகின்றன. எனவே பொறுப்புமிக்க வங்கிகள் இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்துமா? மேலும் அணு ஆயுதங்களை நீங்கள் எவ்வாறு பராமரிப்பீர்கள்?

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் இந்த உடன்படிக்கையில் உடனே அல்லது குறுகிய காலத்தில் இணையப் போவதில்லை என்பது உண்மை. ஆனால் உறுதியான, இயல்பான நெருக்கடிகளால் அவர்கள் நீண்ட காலம் அணு ஆயுதங்களுடன் வாழ முடியாது.

 

இந்தச் செயல்பாட்டில் ஜப்பான் பங்கு கொள்ளவில்லை என்பது பற்றி ஒரு ஜப்பான் குடிமகனாக என்ன நினைக்கிறீர்கள்?

அது பெருத்த ஏமாற்றமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் உள்ளது. இது ஒரு அவமானம், இது ஒரு அவமானம். அணு ஆயுதமற்ற உலகிற்காக அழைப்பு விடுக்கும் நாடு ஜப்பான் என வெளிப்படையாக, ஹிரோஷிமா, நாகசாகி நினைவுக் கூட்டங்களில் திரும்பத் திரும்ப ஜப்பான் அரசு பேசிக் கொண்டிருந்தது. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர்கள் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் ஜப்பான் இந்த விவாதத்தில் கூட பங்கு கொள்ளவில்லை. இந்தத் தடை ஒப்பந்தத்தை உருவாக்கும் செயலில், உலகளாவிய அணு ஆயுதமற்ற முயற்சிகளில் ஜப்பான் அதன் நம்பகத் தன்மையை இழந்து விட்டது.

 

ஜப்பான் அரசு அதன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும் விவாதங்களில் பங்கு கொள்ளவும் இன்னமும் இடம் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ஆம். பொதுக் கருத்து அரசின் எண்ணத்தை மாற்றிவிடும். ஏனெனில் இந்த அணு ஆயுதப் பிரச்சினை அல்லது இந்த ஒப்பந்தம் அல்லது ஐக்கிய நாடுகள் விவாதம், மிகச் சிறிய ஒரு வட்டத்தின், வல்லுநர்களின், அல்லது ஒரு சிறு எண்ணிக்கையிலான அரசுசாரா நிறுவனங்களின் வசம் உள்ளது. ஆனால் இப்போது இந்த நோபல் அமைதி விருதால், மிகத் தீவிரமாக பொது விசயமாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, அணு ஆயுதங்கள் மீதான எங்கள் நாட்டின் நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்ய ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த அமைதி விருது விழாவை உருவாக்க விரும்புகிறேன். நாங்கள் அதைச் செய்ய வேண்டும், “நாங்கள் விருதைப் பெற்றுள்ளோம், ஹிரோஷிமாவும் நாகசாகியும் இப்போது அங்கீகாரம் பெற்றுவிட்டன” என வெறும் கொண்டாட்டம் மட்டும் கூடாது. இது அத்தகைய மகிழ்வான ஒரு கதை அல்ல. இது எங்களுக்கு, ஜப்பானியர்களுக்கு ஒரு கடுமையான கதை.

நாங்கள் மிகத் தீவிரமான இரட்டைத் தரநிலைகளைப் பெற்றிருக்கிறோம். ஒரு புறம், நாங்கள் ஹிரோஷிமா, நாகசாகி பற்றியும் அணு ஆயுதங்களின் மனிதாபிமான விளைவுகள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். மற்றொரு புறம், அரசு மறுப்பு கூறியபடி அணு ஆயுத ஒப்பந்தத்தைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது. இது எங்களுக்குச் சரியா?

பெரும்பாலான மக்கள் இதைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் தொடங்கி விட்டால், ஜப்பானின் கொள்கை உருவாக்கத்தில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். ஜப்பான் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நினைக்கிறேன்.

 

“அணு ஆயுதம் எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது” என்று கூறுபவர்களிடம் எவ்வாறு அதைத் தவறானது என்று நிரூபிப்பீர்கள்?

இந்த அணு ஆயுதப் பாதுகாப்பு செயல்படும் என்பதற்கோ அல்லது அவர்களுடைய தர்க்கரீதியான அணு ஆயுத எச்சரிக்கை செயல்படும் என்பதற்கோ காரண காரிய அடிப்படை ஒன்றுமில்லை. ஃபுகுஷிமாவில் அணு விபத்து நிகழ்ந்த போது, நாம் ஒரு பாதுகாப்பு மாயவலைக்குள் சிக்கிக் கொண்டோம் என்பதை மக்கள் உணர்ந்தனர். அணு ஆயுத எச்சரிக்கை உலகைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பது மூடத்தனம்.

ஆகவே அந்த எச்சரிக்கைக் கோட்பாடு உடையும் பொழுது, அணு ஆயுத வெடிப்பொலி நிகழும், யார் – எவ்வாறு – பொறுப்பேற்பது? அதன் விளைவு என்ன? எந்தவிதமான மீட்பு வழிகள் உள்ளன? அதற்கு யார் பொறுப்பெடுத்துக் கொள்வது? இந்த அனைத்துக் கேள்விகளும் பதில் இல்லாமல் இருக்கின்றன.

“வட கொரியாவில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. நாங்கள் அமெரிக்க அணு ஆயுதங்களுக்கு எதிராக எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என ஜப்பான் கோரினால் என்ன செய்வது. அணு ஆயுதங்களுக்கு எதிராக அணு ஆயுதங்கள், இந்தத் தர்க்கத்தை ஏற்றுக் கொண்டால், மற்ற நாடுகளும் இவ்வாறு பேசத் தொடங்கி விடும். பிறகு அணு ஆயுதங்கள் நிரம்பிய உலகினுள் நாம் பிரவேசிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்களை வாங்கத் தொடங்கும். அது ஒரு பாதுகாப்பான உலகமா? பதில் மிகத் தெளிவானது.

ஆம், வட கொரியாவிலிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே ஒட்டு மொத்த அணு ஆயுத ஒழிப்புக்காக நாம் செயல்படுகிறோம்.

 

இப்போது அனைத்து ஹிபாகுஸாவினரும் வயதானவர்கள். அவர்களுடைய மரபுரிமையைத் தொடரச் சிறந்த வழி எதுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

நல்லது, அணு ஆயுதத் தடை ஒன்றே அந்த மரபுரிமையைத் தொடர்வதற்கான வழி என நினைக்கிறேன். ஏனெனில் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அல்லது பின்னர் சென்று விடுவர். அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் அணு ஆயுதப் பாதிப்பின் முதல்தர அனுபவம் பற்றி நாம் கேள்விப்பட முடியாத நிலையில் இருப்போம்.

அணு ஆயுதப் பயன்பாடு சட்டத்திற்குப் புறம்பானது என இந்த ஒப்பந்தம் அறிவிக்கிறது. இது பன்னாட்டு விதி, சட்டப்பூர்வ விதி, இதுதான் மரபுரிமையின் கடைசி விசயம். மனிதர்களுக்குத் தங்கள் உண்மையான நினைவுகளைக் கடந்து செல்வது மிகக் கடினம். துரதிர்ஷ்டவசமாக நினைவுகள் அகன்றுவிடும். பதிவு செய்வதற்கு நவீன முறைகள் இருக்கின்றன என்பது உண்மை. அவை அனைத்தும் செயல்படுத்தப்பட வேண்டும். பல முனைப்புச் செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அது முக்கியம்.

இந்தப் பாதிப்பு மீண்டும் நிகழக்கூடாது எனும் உண்மையான செய்தி இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் வரையப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பது ஹிபாகுஸா செய்தியைப் பரப்பும் ஒரு வழி.

 

இறுதியாக, உலக மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உங்கள் செய்தி என்ன?

முதலில், ஜப்பானில் ஹிபாகுஸாவினர் இன்னமும் பலர் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் கதைகளைப் பேச ஆர்வமுடன் இருக்கின்றனர். என்ஜிஓ-க்களான நாங்கள், அமைதிக் கப்பல் உட்பட, பல நாடுகளில் அவர்கள் பேசுவதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.

எனவே, மீண்டவர்களின் செய்திகளைச் சற்று காது கொடுத்துக் கேளுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அது ஜப்பான் சமூகம் உலகிற்கு அளிக்கும் முக்கியமான கொடையாக இருக்கும் என நினைக்கிறேன்.

இரண்டாவதாக, இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியது போல, அரசு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் குடியுரிமைச் சமூகங்களான நம்மால் இந்த உலகை மாற்ற முடியும். மோசமான ஆயுதங்கள் இருக்கும் பொழுது, துணிந்து நின்று எதிர்த்துச் செயல்பட்டால், உங்களால் அதை மாற்ற முடியும். ICAN-ன் முயற்சிகளால் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது நோபல் அமைதி விருதுக் குழுவினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே இளைஞர்களே, நீங்கள் அதைப் பின்பற்றுங்கள். உங்களால் இன்னும் அதிகமாக மிகச் சிறந்த மாற்றத்தைச் சாதிக்க முடியும்.

 

தமிழாக்கம் : மோகன ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!