home டிரெண்டிங், நேர்காணல் எப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட..

எப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட..

எட்வர்ட் மார்க்வெஸ் நேர்காணல்

 

கேத்தலோனிய எழுத்தாளரான எட்வர்ட் மார்க்வெஸ் Zugzwang (1995) எழுதுவதற்கு முன் ஸ்பானிய மொழியில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். Zugzwang ஸ்பானிய கேத்தலோனிய மொழியில் அவருடைய முதல் படைப்பு, இந்த நுண்புனைவின் ஆதாரமும் கூட. Zugzwang -ன் சுருக்கமான பகுதிகள் Bomb, The Brooklyn Rail மற்றும் Chicago Review போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவர் கேத்தலோனிய மொழியில் எழுதுவதைத் தொடர்ந்தபடி, மற்றொரு சிறுகதைத் தொகுப்பையும், பனிரெண்டு சிறுவர் புத்தகங்களையும் நான்கு நாவல்களையும் வெளியிட்டார். அவருடைய La decisió de Brandes (Brandes’s decision) என்னும் 2006-ஆம் ஆண்டு நாவல் Premi de la Critica உட்பட பல கேத்தலோனிய விருதுகளைப் பெற்றுள்ளது.  சமீபத்தில் வெளி வந்திருந்த  அவரது சிறுகதை தொகுப்பு  Brandes’ Decision வெளிவந்திருக்கிறது. டொரண்டோவில் 2017 ல் நடந்த சர்வதேச எழுத்தாளர்கள் விழாவில் கலந்துகொண்டார் அப்பொழுது அவரிடம் விழாக்குழுவினர் சார்பாக 5  கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

 

கேள்வி: எந்த வகை எழுத்து உங்களுக்கு எழுதப் பிடிக்கும்?

எட்வர்ட் மார்க்வெஸ்: நாவல்கள், சிறுகதைகள் என நான் பல வருடங்களாக புனைவுகளை எழுதி வருகிறேன். ஆரம்பத்தில், கவிதை மட்டும் எழுதினேன். கவிதைக்கான எனது அர்ப்பணித்தல் ஒரு கவித்துவ மொழி மீதான, சொல்லடைவின் துல்லியம் மீதான, பிரதியின் ஓசை நயம் மீதான, சொற்றொடரியலின் இசைத்தன்மை மீதான எனது விருப்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அடிப்படையானது என்று நம்புகிறேன். சார்லஸ் பாதலேரின் வார்த்தைகளை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்: “எப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட”. இசைப் பயிற்சியும் எனக்கு முக்கியமானது. சில வழிகளில் எழுதுதல் என்பது இசையமைப்பதுதான். கவிதையும் இசையும் எனது அனைத்துப் படைப்புகளின் அடித்தள அடுக்கைக் கட்டமைக்கின்றன.

 

கேள்வி: சிறுவர்களுக்கு எழுதுவது பெரியவர்களுக்கு எழுதுவதிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

மார்க்வெஸ்: எனது பார்வைக் கோணத்தில், அதில் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு வித எழுத்துகளிலும் ஒரு நல்ல கதையும் விவரணையும், இயல்பானதும் நவீனமானதுமான தேவையும் அவசியம். வாசகர்கள், சிறுவர்கள் அல்லது பெரியவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியான சாராம்சத்துடன் அணுக வேண்டும். சிறுவர்கள் எதிர்கால வாசகர்கள். அவர்களின் விருப்பத்தையும் வாசிப்பின் வரையறைகளையும் மேம்படுத்த அவர்களுக்கு உதவுவது அவசியம்.

 

கேள்வி: Brandes’ Decision எழுத எது உங்களைத் தூண்டியது?

மார்க்வெஸ்: Brandes’ Decision ஜார்ஜ் ப்ரேக்கின் ஒரு உண்மை நிகழ்விலிருந்து உருவானது. பாரிஸில் ஜெர்மானிய ஆக்ரமிப்பின் போது, ஒரு ஓவியர் ஒரு மிரட்டலுக்கு உட்பட வேண்டியிருந்தது. நாஸிகளால் உரிமை கோரப்பட்ட அவருடைய ஓவியங்களை ஹெர்மன் கோரிங் தொகுப்புக்காக லூகாஸ் க்ரேனாச் சித்திரங்களைப் பரிமாற்றம் செய்து மீட்க முடிந்தது. இந்த உண்மை நிகழ்விலிருந்து, ப்ரேண்டஸ் தனது அந்திமக் காலங்களில் தனது வாழ்வை ஆய்வு செய்து, அவர் செய்திருக்க வேண்டிய அனைவற்றிற்காகவும், அனைத்து தவறான வழிகளுக்காகவும், அனைத்து கூறப்படாத வார்த்தைகளுக்காகவும் சற்று குறைவான குற்ற உணர்ச்சியை உணர உதவக்கூடிய தருணங்களைத் தேடிச் செல்கிறார்… எனவே அவர் “சிறு எதிர்ப்பு வடிவங்கள்” பற்றிப் பேசுகிறார். நமது முதலாளியச் சமூகத்தில், மாபெரும் வார்த்தைகளையும் மாபெரும் சமிக்ஞைகளையும் சார்ந்திருக்கிறோம். சிறு புரட்சியாளர்களின் மாபெரும் தன்மையை நாம் சரியென்று நிரூபிக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் “சிறு எதிர்ப்பு வடிவங்கள்”. பொருட்படுத்தக்கூடியதாக இல்லையென்றாலும், அவர்களால் ஒரு தனிப்பட்ட வாழ்வுக்குப் பெருமை சேர்க்க முடியும்.

 

கேள்வி: ஒரு மாபெரும் வில்லனை உருவாக்குவது எது? ஒரு மாபெரும் நாயகனை உருவாக்குவது எது?

மார்க்வெஸ்: ஒரு மாபெரும் வில்லனுக்கும் ஒரு மாபெரும் நாயகனுக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் தேவைப்படுகின்றன என நினைக்கிறேன்: சரிபார்த்தலும் இணக்கமும். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

 

கேள்வி: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர், பாடகர், நடிகர் யார்? ஏன்?

மார்க்வெஸ்: எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது, காலத்திற்கேற்ப, மனநிலைக்கேற்ப அவ்வப்போது அந்தப் பட்டியல் மாறும். இப்போது எனக்கு வழிகாட்டும் எழுத்தாளர்கள் ராபர்ட் ஃப்ரோஸ்ட் மற்றும் ஃப்ரான்ஸெஸ்க் காரிஹா. ஏனென்றால், நான் ஒரு நாவலில் ஈடுபட்டிருக்கும் பொழுது, நான் கவிதைகளை மட்டும் வாசிப்பேன். எனக்கு நினைவில் உள்ள மூன்று முக்கிய இசைஞர்கள்: ஜோன் ஸெபாஸ்டியன் பாஸ், ஜான் கோல்ட்ரேன் மற்றும் பட்டீ ஸ்மித். அவர்கள் வலிமையை, ஆன்மாவை, அழகை மற்றும் ஆழ்ந்த சிந்தனையை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

 

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!