home உன்னதம், கவிதை இம்மானுவேல் மிஃப்சுத் கவிதைகள்

இம்மானுவேல் மிஃப்சுத் கவிதைகள்

  • இம்மானுவேல் மிஃப்சுத்

 

நீ உறங்குவதற்கு முன் ஒரு கவிதை

 

நான் உன்னைப் பார்த்ததிலிருந்து, நீ நான் பார்த்த நீ அல்ல.

பட்டாம்பூச்சிகளின் பெருந்திரள் ஒரு இலக்கு இல்லாமல்

ஒன்றுகூடிப் பறந்து செல்வதை நான் பார்க்கிறேன்;

கடலைத் தழுவும் மணலின் நீண்ட பரப்பைப் பார்க்கிறேன்;

முடிவாக என்னைக் காதலிக்கத் துவங்கிய அந்தக் காற்றைப் பார்க்கிறேன்:

நான் பார்வையிட்ட நகரங்கள் மற்றும் நான் சுற்றித் திரிந்த சாலைகள்:

ஒன்றன் பின் ஒன்றாகப் பூக்கும் மலர்கள்.

மேலும் இப்போது எனது வாழ்வில் திரும்பவும் வருகை தந்த

மலரிதழ்களின் நிறத்தில் ஒரு நீண்ட நதி.

நான் உன்னைப் பார்த்ததிலிருந்து, நீ நான் பார்த்த நீ அல்ல.

ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் பிறந்த ஒவ்வொன்றையும் நான் பார்க்கிறேன்.

 

என்னிடம் சொல்: பட்டாம்பூச்சிகள் எங்கே ஓடிப் போயின?

எந்த மணல் கடற்கரை, எந்தக் கடல் அவற்றை வரவேற்கும்?

பரந்த மற்றும் குறுகிய சாலைகளில் திரண்ட நகரங்களை நோக்கிப்

பறக்கக்கூடிய அவற்றை எந்தக் காற்று தழுவும்?

எந்த மலர்களில் அவை தேனைப் பருகும்?

 

ஏனென்றால் நான் எனது பார்வையை

உன்மீது வீசும் பொழுது, நீ நான் பார்த்த நீ அல்ல.

அடிவானம் போல் விரிந்த ஒரு கவிதையை நான் பார்க்கிறேன்;

முன்னெப்போதும் கனவிலும் காணாத ஒரு கவிதையை நான் பார்க்கிறேன்;

உன்னை வெறித்துப் பார்க்கும்,

நம்பிக்கைப் பூக்களும் காத்திருக்கும் வசிப்பிடமும் உள்ள

முடிவற்ற அல்லது மூலைகளற்ற கடற்சாலைகளை நோக்கிப் பறக்கும்

உனது வேகத்தில் வியப்பெய்தும் எனது முகத்தின் முன்,

ஒரு நெக்லஸ் போலத் தொங்கும் ஒரு கவிதை.

 

இப்போது விளக்கை அணைத்து, உறங்கச் செல்லலாம்

இங்கே பார், இவை கிடத்தப்பட்டுள்ள புதிய தாள்கள்.

 

ஆங்கில மொழியாக்கம்: மரியா க்ரெச் கனாடோ

 

 

என் அப்பா என்னிடம் கூறினார்

 

என் அப்பா என்னிடம் கூறினார்: அந்தப் பெண் எவ்வளவு அழகு

நேற்று அவளுடன் நீ நடந்து சென்றதைப் பார்த்தேன்,

அவளுடைய சுருட்டைமுடி முரட்டுத்தனமான புற்கள் மற்றும்

டெய்ஸி மலர்களுடன் படிய வாரப்பட்டிருந்தது.

 

உண்மை. அவள் கிதாரை வாசித்தவாறு எனக்காகப் பாடுகிறாள்,

ஒவ்வொரு இரவிலும் நான் உறங்குவதற்கு முன்; இனிய

கனவுகளை அழைத்தபடி இப்போது அது அரிது.

எனது புத்தகத்தை அவள் காதலுடன் வருடினாள்.

 

ஆனால் ஒரு நாள் அவள் முரட்டுத்தனமாகச் செல்வாள்,

நான் அப்பால் பார்த்தபடி, எனது பக்கம் திரும்புவேன்.

அனைத்து டெய்ஸி மலர்களும் பூத்ததை ஒரு அரை குறைப் பார்வையால்

சன்னல் வழியாக கைப்பற்றுகிறேன்;

முரட்டுத்தனமான புற்கள் ஒளிந்திருப்பதை என்னால் காண முடிகிறது.

 

என் அப்பா என்னிடம் கேட்டார்: அந்தப் பெண்ணுக்கு என்னாயிற்று…?

தெரியலேப்பா. ஒருமுறை விடியலில் நான் துணிந்து அறிந்து கொண்டேன்

முரட்டுப் புற்கள் மற்றும் டெய்ஸி மலர்களின் கருப்பையை.

நான் எனக்குள்ளே கூறினேன்: நான் இங்கு சற்று நேரம் காத்திருப்பேன்;

சற்று பொறுத்திருப்பேன், வாழ்க்கை என்ன தரப்போகிறது என்பதைக் காண.

நேரம் கடந்தது. எவ்வளவு நேரம் காத்திருந்தேன்?

ஒன்று மட்டும் தெரிகிறது நான் திரும்பும் பொழுது

என்னால் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, கிதார் வாசித்து

பாடல் பாடிய அந்தப் பெண்ணைத் தொலைத்து விட்டேன்.

தெருவில் நான் சந்தித்த முதியவர்கள் கூறினர்:

அந்தப் பெண் இறந்து போனாள்! ஒரு நாள் காலையில் அவளைக் கண்டோம்,

அவள் தலையை அலங்கரித்த வெண்மைநிற முடி, இன்மை நிற உதடுகள் –

பொருத்தமாக மை தீட்டப்பட்ட கண்கள்.

அவளைச் சுற்றிலும் மலரிதழ்களின் குவியல், ஒரு உலர்ந்த மலர்க் கடல்,

காலடியில் ஒரு கிதார், ஒரு மெளனத்தை வாசித்தபடி.

 

ஆகவே, அப்பா, எனக்காக ஒரு குடிலை அமைத்தேன்;

நான் கேட்ட பாடல்கள்: மதியவேளைப் பறவைகள்.

உறங்கச் செல்லும் பொழுது, மெளனம் மட்டும் சுழல்கிறது.

அப்பா, அந்தப் பெண்ணைப் பற்றிய எதுவும் என்னைவிட்டு அகலவில்லை.

நான் அகத்தினுள் காண வேண்டும், சன்னல் வழியாக வெளிப்புறத்தில் அல்ல;

அவள் மார்பில் என்னைப் புதைத்துக் கொள்ள வேண்டும்…

அவளுடன் இறந்து போக வேண்டும்.

 

ஆங்கில மொழியாக்கம்: மைத்தி ஸெர்ரி ரோசஸ்

 

 

வதைமுகாம் : இரண்டாவது முறை

 

வதைமுகாமில் இருக்கும் புல் மிருதுவானது, பச்சையானது

முழந்தாளிட்டு அதை முத்தமிட உம்மை அழைக்கிறது.

அதனிடம் வாயுவின் வாசனையில்லை, புகைபோக்கியில் வெளியேறும்

சாம்பல்நிறக் கறைபடிவதுமில்லை.

 

மண் மூலம் வெளிப்படும் சுவாசம் போல் பச்சையானது அது.

 

 ஆங்கில மொழியாக்கம்: மரியா க்ரெச் கனாடோ

 

 

மால்டா மொழி எழுத்தாளரான  இம்மானுவேல் மிஃப்சுத் (1967)  சிறுகதை  எழுத்தாளர் மற்றும் கவிஞர்ஆவார். மால்டா பல்கலைக்கழகத்தில், மால்டா இலக்கியம் மற்றும் இலக்கியக் கோட்பாடுகள் துறையின் பேராசிரியராக இருக்கிறார். உரைநடை எழுத்துக்கான மல்டா தேசிய விருது(2002, 2014) கவிதைக்கான மால்டா தேசிய விருது (2013), மற்றும் ஐரோப்பிய யூனியன் இலக்கியத்திற்கான விருது (முதல் மால்டா மொழி எழுத்தாளர்) (2011) உட்பட  பல விருதுகளைப்  பெற்றுள்ளார்: சர்வதேச கவனம் பெற்றுள்ள இவரது எழுத்துக்கள் இதுவரை 9 சிறுகதை தொகுப்புகளும், 9 கவிதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது முதல்முறையாக தமிழில் வெளிவருகின்றன.

 

தமிழாக்கம் : மோகன ரவிச்சந்திரன்

One thought on “இம்மானுவேல் மிஃப்சுத் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!