home கட்டுரை, தமிழி சங்ககாலப் பாணர்களும் கோண்டுப் பர்தான்களும்

சங்ககாலப் பாணர்களும் கோண்டுப் பர்தான்களும்

  • முனைவர் பக்தவத்சல பாரதி

 

தமிழிலக்கியத்தின் தொன்மையானது பாணர் மரபிலிருந்தே தொடங்குகிறது. இதிலிருந்து தொழிற்பட்டு, நீண்ட படிமலர்ச்சிக்குப் பின்னரே புலவர் மரபு ஏற்பட்டது. பாணர்கள் என்றாலே சங்க காலத்தில் வாழ்ந்த பாணர்களே நம் நினைவுக்கு வருவார்கள். சங்க இலக்கியத்தில் பேசப்படும் பாணர்களுடைய முன் தொடர்ச்சி யார்? பின் தொடர்ச்சி யார்? என்பவை பற்றி விரிவான புரிதல் தேவை. எந்த ஒரு மரபுக்கும் முன்னும் பின்னும் தொடர்ச்சியுண்டு. மனிதகுலப் படிமலர்ச்சியில் (evolution) எந்த ஒரு சமூக முறையும் தீடீரென தோன்றிவிடுவதில்லை. சீரான வளர்ச்சியும் மாற்றமும் அடைந்த பின்னரே ஒவ்வொரு புதிய சமூக முறையும் படிமலர்ச்சியடைகிறது. இந்நிலையில் பாணர் மரபிற்கான முன், பின் தொடர்ச்சிகள் பற்றி அறிவதற்கு இலக்கியம், வரலாறு, கல்வெட்டியல், இனவரைவியல் (ethnography) சான்றுகளே பெரிதும் உதவ முடியும். இக்கட்டுரையில் இனவரைவியல் தரவுகளை முன்வைத்து இதனை ஆராயலாம்.

சங்க இலக்கியத்திற்கு உயிர்நாடியாக விளங்கிய பாணர் மரபு எங்கிருந்து தொடங்கியது? அது எவ்வாறு வளர்ந்தது? அது சங்க காலத்தோடு நின்றுவிட்டதா? சங்க மரபின் படிமலர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களில் எவ்வாறு தொடர்ந்தது? அதில் பாணர் மரபின் நிலை என்ன? பாணர் மரபு இன்றுள்ளதா? இருக்கிறதென்றால் அது எவ்வாறு உள்ளது? இவை பற்றியெல்லாம் அறிவதற்குப் பழங்குடிகள் (tribes) பற்றிய நுட்பமான, காலப்பார்வை சார்ந்த ஆய்வு தேவைப்படுகிறது. கூடவே, சமகாலப் பழங்குடிகள், நாடோடிகள் (nomads) பற்றிய இனவரைவியல் பார்வையும் தேவைப்படுகிறது.

பாணர் மரபின் தோற்றம்

தமிழ்ச் சமூகத்தின் நீண்ட படிமலர்ச்சியை மிகவும் நுட்பமாக நோக்கினால் பாணர் மரபின் முன் தொடர்ச்சியானது பழங்குடிகளின் மூதறிவாளனிடமிருந்தே (shaman) தொடங்குகிறது. மந்திர ஆற்றல், முன்னறியும் திறன், குறிசொல்லுதல், நிமித்திகம், தீர்க்க தரிசனம், தெய்வமேறி நிற்கும் தன்மை (பூமரமாதல்), சடங்குகள் நிகழ்த்துதல், மருத்துவம் செய்தல் என்பன போன்ற பண்புகளைக் கொண்ட இத்தகைய முதுவாய் மனிதர்கள் பழங்குடி மாந்திரிகத்தின் தொடர்ச்சியைக் காட்டுபவர்கள் ஆவர். சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற முதுவாய் வேலன், முதுவாய்ப் பெண்டிர், முதுவாய்ப் பல்லி போன்ற சொல்லாட்சிகள் இதனை மெய்ப்பிக்க உதவும் கருத்தினங்களாகும். இதன் தொடர்ச்சியாகவே சங்க காலத்தில் பாடகர் மரபினரை “முதுவாய்ப் பாணன்” (புறம்.319), “முதுவாய் இரவல” (புறம்.48) என்று கூறும் வழக்குகள் புறநானூற்றில் பயின்று வருகின்றன. ஆதலின் தொல் பழங்குடிச் சமூகத்தில் மூதறிவாளன் எனக்கூடிய மரபிலிருந்து “முதுவாய்ப் பாணன்” எனும் படிமலர்ச்சியை இங்கு மீட்டுருவாக்க முடிகிறது.

பிற்காலப் பாணர்கள்

இனி, பாணர் மரபின் தொடர்சியை அறிய முற்படுவோம். தமிழ்ச் சமூகத்தின் படிமலர்ச்சியைப் பார்க்கும்போது சங்ககாலத்தில் ஏற்பட்ட சமூகப் படிமலர்ச்சியின் அனைத்துப் படிநிலைகளையும் இன்றும் காணமுடிகிறது. அன்றிருந்த அத்தனை வகையான குடியினரும் 2500 வருடங்களுக்குப் பின்னர் இன்றும் காணப்படுகின்றனர். குறிஞ்சித் திணைக்குரிய வேட்டுவர்கள், முல்லை நிலத்து ஆயர்கள், நெய்தலுக்குரிய கடலோரச் சமூகங்கள், மருத நிலத்து வேளாண் குடிகள் ஆகிய அனைத்து வகையான குடியினரை இன்றும் காணமுடிகிறது. எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும், அமைப்பு முறையான சூழியல் தொடர்ச்சியை (ecological continuity) இனங்காண முடிகிறது. இதற்கு இணையான சமூகவியல் தொடர்ச்சியும் இருக்க முடியுமல்லவா? அவ்வாறாயின் சங்க இலக்கியத்தின் வழி அறியப்படும் பாணர்களுக்கு இணையான குடியினர் இன்றும் உள்ளனரா? எவ்வாறு உள்ளனர்? இதற்கான புரிதலை பூர்வ திராவிடர்கள் பற்றிய இனவரைவியல் வழி ஆராய வேண்டும்.

கோண்டுகளின் பர்தான்கள் 

சங்ககாலப் பாணர்களுக்கு இணையானவர்களாக, மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பவர்கள் கோண்டுகளின் இசைவாணர்களாகிய பர்தான்களே. கோண்டுகள் பூர்வ திராவிடர்கள். இந்தியாவின் மிக முக்கியமான பழங்குடியினர் இவர்களே. இன்று இந்தியாவிலுள்ள 461 பழங்குடிகளில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்டவர்கள் இவர்களே. இன்று இவர்கள் நடு இந்தியாவில் ஆறு மாநிலங்களில் பரவி வாழ்கிறார்கள். நடு இந்தியாவில் வாழும் 5 மில்லியன்களுக்கும் மேற்பட்ட கோண்டுகளுக்குச் சில ஆயிரம் பர்தான்கள் இசைக் கலைஞர்களாக ஊழியம் செய்கின்றனர் (நைட் 2000 – 2001).

பர்தான்கள் வாசிக்கும் பாரம்பரியமான இசைக்கருவி ‘பாண’ (bana) எனப்படுகிறது. இது சங்ககாலப் பாணர்கள் இசைத்த சீறியாழுக்கு நெருக்கமானது எனக் கருதலாம். பாண ஓரளவு வீணையைப் போன்றே காணப்படுகிறது; மூன்று நரம்புகளைக் கொண்டிருக்கிறது (நைட் 2000 – 2001: 101). இதன் நீளம் 71 செ.மீ. உடல் பகுதி கோல் எனப்படும். 15 x 21 செ.மீ. அளவுள்ள அடிக்கட்டை செவ்வகப் பலகையால் ஆனது. பாணவின் முகத்தை மண்ணைப் பார்த்து கவிழ்த்து வைத்தால் ஓரளவு ஆமை போன்று தோன்றும். இந்தப் பலகையிலிருந்து முன்பக்கமாக நீளும் மூங்கில் குழலின் நீளம் 34 செ.மீ. (இக்கருவி பற்றிய முழுமையான விவரங்களுக்குக் காண்க: ஹிவாலே 1946, நைட் 2000 – 2001). அடிப்பகுதியை இடது தோள்பட்டையின் மேல் வைத்துக்கொண்டு கீழ்ப்பகுதியை இடது கையால் சாய்வாகப் பிடித்துக்கொண்டு வலது கையால் இழுத்து வாசிப்பார்கள். மத்தியப் பிரதேசத்தில் எங்கும் காணக்கூடிய இசைக்கருவிகள் சரிந்தா (sarinda), சாரங்கி (sarangi) இரண்டுமாகும். ஆனால் பாண மட்டும் பர்தான்கள் வாழும் சிற்றூர்களில் மட்டுமே காண முடியும். முகலாயர்கள் இப்பகுதியைக் ‘கோண்டுவானா’ என்றே அழைத்தார்கள். இதன் பொருள் ‘கோண்டுகளின் தேசம்’ என்பதாகும். கோண்டுவானாவுக்குரிய இசைக் கருவியாகவே இன்றும் பாண இருந்து வருகிறது. மற்ற இசைவாணர்களிடம் இக்கருவியைக் காண முடியாது.

கோண்டுவானாவில் வரலாறு நெடுக கோண்டுகளின் பாணர்களாகப் பர்தான்கள் உள்ளனர் (நைட் 2000 – 2001: 101, ரெங்கையா முருகன் 2007). பர்தான்கள் இன்றும் பாணர்கள் போல் சுற்றித் திரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோண்டுகளின் பொற்காலத்தை இன்றும் நினைவு கூறுகிறார்கள். கோண்டவானி வீரயுகக் கதைகளையும், பாண்டவானிக் கதைகளையும், மகாபாரதக் கதைகளையும் ஊர் ஊராகச் சென்று தங்கள் ஆண்டைகளிடம் வாசித்துக் காட்டுகின்றனர் (ஹிவாலே 1946). இன்று ஏறக்குறைய 80 கோண்டு கிராமங்களுக்கு ஒரு பர்தான் செயல்படுகிறார் (ரெங்கையா முருகன் 2007).

பர்தான்கள் தங்கள் எஜமானர்களான கோண்டுகளின் வீட்டில் நடக்கும் எல்லா வகையான சுபச் சடங்குகளிலும் கலந்து கொண்டு ஊழியம் பண்ணுவார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் பாணா இசைக்கருவியை மீட்டிக் கொண்டு கோண்டு மன்னர்களின் கதையைப் பாடுவார்கள்; அந்த ராச்சியங்களின் வீரதீர வரலாற்றை எடுத்துரைப்பார்கள்.

கோண்டு அரசர்கள் நர்மதை ஆறு நெடுக 52-க்கும் மேற்பட்ட கோட்டைகளை மலையுச்சியில் அமைத்து ஆண்டு வந்தார்கள். குப்தப் பேரரசுக்குப் பின்னர் ஏறக்குறைய 10- ஆம் நூற்றாண்டிலிருந்து 17- ஆம் நூற்றாண்டு வரை சிறப்பாக ஆண்டவர்கள் கோண்டு அரசர்கள். முகலாயர்களின் வருகைக்குப் பின்னர், குறிப்பாக அக்பர் ஆட்சிக் காலத்தில் கோண்டுகளின் ஆட்சி சின்னாபின்னமாகிச் சிதறிவிடுகிறது (ஹிவாலே 1946).

கோண்டுகளின் இனவழிச் சகோதரர்கள் பர்தான்கள். இவர்களைக் கோண்டுகள் பிரதான் என்றும் அழைப்பார்கள் (ஹெய்மண்டார்ஃப் 1951). இதன் பொருள் ‘முதல் மந்திரி’ என்பதாகும். இன்று பர்தான்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கோண்டு ஆண்டைகளிடம் சென்று அவர்களின் குல வரலாற்றுப் பெருமைகளைப் பாடி தானம் பெற்றுத் திரும்புவார்கள். இதற்கிடையில் கோண்டுக் குடும்பங்களில் சுபநிகழ்ச்சிகள் நடந்தால் அவற்றில் கலந்து கொண்டு சடங்கு ஊழியமும் செய்வார்கள். அதற்குரிய தானமும் பெற்றுத் திரும்புவார்கள்.

சங்ககாலப் பாணர் மரபின் பின் தொடர்ச்சியை வடஇந்தியாவில் வாழும் கோண்டுப் பழங்குடிகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து பேணி வருகின்றனர். இந்நிலையில் பாணர் மரபினை வடஇந்தியத் தொல்திராவிடர் மரபோடு இணைத்தறிய வேண்டிய ஓரு புதிய வாயில் திறக்கப்பட்டிருக்கிறது. கூடவே, வடஇந்தியாவில் உள்ள கோந்த் (Kondh) போன்ற இன்னும் சில முக்கியமான தொல்திராவிடப் பழங்குடிகளிடமும் பாண்மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. (ஹிவாலே 1946, ஹெய்மண்டார்ஃப் 1951, முர்குத் 1991, மிஸ்ரா 2007).

பர்தான்கள் சத்தீஷ்கரில் ‘பர்காணியா’ என்றும், மகாராட்டிரத்தில் ‘பட்டாரி’ என்றும், ஆந்திராவில் ‘பிரதான்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இன்னொரு திராவிடப் பழங்குடியான கோந்த் பழங்குடிகளின் பாணர்கள் ‘பொகுவா’ , ‘மாரல்’ எனப்படுகின்றனர் (மிஸ்ரா 2007: 38, 55), வட இந்திய திராவிடப் பழங்குடிகளிடம் குறுநில மன்னராட்சி முறை இருந்த வரை பாணர் மரபு மிகச் சிறப்பாகப் பேணப்பட்டு வந்தது. சுருங்கிய வடிவில் அதன் தொடர்ச்சியை இன்றும் காணமுடிகிறது. தென்னிந்தியாவிலும் தமிழ்ச்சூழலிலும் பின்னாளில் இம்மரபு சாதியச் சமூகமுறையில், கிராமிய வாழ்வு முறையில் வேறுவகையில் உருமாற்றம் பெற்றது. இதற்கான சுருக்கமான இனவரைவியல் குறிப்புகளை இனிக் காண்போம்.

கிராமிய நாகரிகத்தில் பாணர்களின் உருமாற்றங்கள்

தமிழகத்தில் குறிப்பிட்ட சில சாதியினர் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் ‘தங்களின் பிள்ளைகள்’, ‘தங்கள் உடன்பிறந்தவா்கள்’, ‘தங்கள் ஆதரவில் வாழ்பவர்கள்’ என்னும் உரிமை கொடுத்து ஆதரவு தருகின்றனர். இவ்விரு சமூகத்தாருக்குமான பரஸ்பர உறவின்முறை அவர்களின் சாதித் தொன்மத்தில் காணமுடிகிறது (பக்தவத்சல பாரதி 2003). தத்தம் ஆண்டைச் சாதியாரை அண்டி வாழும் இவர்கள் சங்ககாலப் பாணர்கள் போன்றே தமக்கான நிலைகுடிகளின் ஆதரவை நம்பி வாழ்கின்றனர். காப்பாளர்களாக, ஆண்டைகளாக ஏற்றுக் கொண்ட இவர்களிடம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் சென்று பணம், பொருள், தானியங்கள், புளி, மிளகாய் உள்ளிட்ட விலைபொருட்கள், துணிமணிகள், ஆட்டுக்குட்டி, மாட்டுக்கன்று, பாத்திரம் ஆகியவற்றைப் பெறும் உரிமையைக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஆண்டை சாதிகளிடம் சென்று ஆதரவு பெறும் சமகாலப் பாணர்கள் தனித்தனியான பெயர்களைக் கொண்டிருப்பினும் பொதுவாக இவர்கள் “குடிப்பிள்ளைகள்”, “சாதிப்பிள்ளைகள்” என்று அழைக்கப்படுகின்றனர் (மேலது: 23). தமிழகத்தில் முக்கியமான சில சாதிகளுக்குரிய குடிப்பிள்ளைகள் வருமாறு :

சாதி குடிப்பிள்ளைகள்

1. வன்னியர் – சாதிப்பிள்ளை/நோக்கர்
2. கொங்கு வேளாளர் – முடவாண்டி
3. கோமட்டி – மைலாரி
4. பேரிச்செட்டி – வீரமுஷ்டி
5. கைக்கோளர் – நட்டுக்கட்டாத நாயன்மார் (பொன்னம்பலத்தார்)
6. பத்மசாலே – இனகமுக்கு பட்ராசு/கோணப்பிள்ளவாண்டலு
7. பிராமணர்கள் – பீதாம்பர ஐயர்
8. ரெட்டி – பட்ராசு
9. முதலியார் – கக்கிலவன்
10. யாதவர் – எடக்கூத்தாடி
11. சக்கிலி – பொம்ம நாயுடு/ஜென்டடுவாரு
12. பறையர் – பறைத் தொம்பன்
13. மாதிகர் – மாதிகமாஸ்தி, ஜங்கம், மாவட்டியார்
14. மாலா – மாலமாஸ்தி
15. கொண்ட ரெட்டி – பிச்சுகுண்ட்லு
16. இஸ்லாமியர் – பக்கீர்

சங்ககாலத்தில் பாண் மரபுக்குரியவர்கள் பலரையும் நாடிச் செல்ல, சில பொருநர்கள் மட்டும் தத்தம் மன்னர்களை மட்டுமே பாடுவோம் என்று உறுதி பூண்டிருந்ததைப் புறநானூறு 382ம் பாடல் கூறுகிறது. குறிப்பிட்ட மன்னர்களின் அரண்மனைகளை மட்டும் சார்ந்து வாழும் ‘மன் மகளிர்’, ‘சாயினத்தார்’ போன்றோரும் இருந்துள்ளனர் (பதிற். 52, 60), இத்தகைய முறையை ஒத்ததாகக் குடிப்பிள்ளைகளின் முறையும் காணப்படுகிறது.

திராவிடப் பகுதியில் பாணர்களின் பின்தொடர்ச்சி

தமிழ் மண்ணில் காணப்படுவது போன்றே, பாணர்களின் பின் தொடர்ச்சி திராவிடப் பகுதிகளிலும் காணமுடிகிறது. ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கூட பெரும்பாலான குடிப்பிள்ளைகள் தாங்கள் சார்ந்து வாழக்கூடிய சாதிகளின் பெருமைகளைப் பாடுவதை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வாறான மரபு திராவிடப் பகுதி முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. கர்நாடகத்தில் ஹெலவ (முடவன் என்பது பொருள்) எனப்படுவோர் பெல்லாரி, மைசூர் மாவட்டங்களில் தங்கள் எஜமானர்களின் குல வரலாற்றினைப் பேணிக்காத்து வருகின்றனர். தங்கள் கால்களைக் கம்பளியால் போற்றி மறைத்தபடி எருதுகளின் மீது அமர்ந்து ஊர் ஊராகப் பயணம் செய்வார்கள். வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தாரின் வரலாற்றையும் அக்குடும்பத்தில் போரில் உயிர் துறந்த வீரர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பான செய்திகளையும் புகழ்ந்து கூறுகிறார்கள் (தர்ஸ்டன் 1909).

ஆந்திராவில் பிராமணர் தொடங்கி ஏறக்குறைய ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனியான குடிப்பிள்ளைகள் உள்ளனர். ஆந்திர நாட்டில் இவர்கள் ‘சாதி கீர்த்தலு’ (சாதிப் புகழ்பாடுவோர்) என்று அழைக்கப்படுகிறார்கள். பொது வழக்கில் ‘பட்ராசுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். பூணூல் அணியும் இவர்கள் குலப் புகழ்பாடும் தொழிலைச் செய்கின்றனர். ஆந்திர நாட்டின் சத்திரியர்கள், பெருந்தலைவர்கள் ஆகியோரின் புகழ் பாடுவோராகவும் உள்ளனர். கால ஓட்டத்தில் இச்சமூகத்தாரிடம் ஏற்பட்டு வரும் சமூக மாற்றத்தால் இன்று நிலைமை மாறி வருகிறது. இக்காலத்தில் உள்ள தலைவர்களின் தொண்டர்களோடு சேர்ந்து கொண்டு திரையிசைப் பாடல்களையும் நாட்டுப்புற நாடோடிப் பாடல்களையும் பாடிப் பொதுமக்களை மகிழ்வித்துப் பணம் பொருள் பெறுகின்றனர். இவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழாமல் சுற்றித்திரியும் வகுப்பாராகவே உள்ளார்கள்.

சைவ குருமார்களின் கொடிவழி மரபின் பட்டியலைத் தொகுத்துக் காத்து வருபவர்கள் ஹலவர்கள் (தர்ஸ்டன் 1993: 280). அதுபோல லம்பாடிகளின் வம்சாவளி மரபைப் பாதுகாத்து வருபவர்கள் கோஸ்சுவாமிகள் (மேலது: 280).

பக்கீர்கள் இஸ்லாமியர்களின் குடிப்பிள்ளைகள். இஸ்லாத்தின் புனித நூல்களின் கருத்துகளைப் பரப்பும் இவர்கள் இஸ்லாமியர்களிடம் மட்டும் பணம், தானியம், உணவு, யாசகம் பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ளவாறே ஆந்திரத்திலும் பின்வரும் சாதிகளுக்குத் தனித்தனியான குடிப்பிள்ளைகள் உள்ளனர் (சுதாகர் ரெட்டி 2008).

ஆந்திரத்தில் ஆண்டைச் சாதிகளும் அவர்களின் குடிப்பிள்ளைகளும்

1. பிராமணர் – விப்ரவினோதி
2. வைசியர் – வீரமுஷ்டி
3. விஸ்வபிராமணர் – ருஞ்சலவாலு
4. கம்சாலா/பேரி கோமட்டி – பனசோலு
5. முத்ராசி – காக்கி படகல பண்டவுல்லவாரு
6. கௌடா – கௌட ஜெட்டி, எக்கோட்டி
7. பத்மசாலி – சாதனசூருலு, குணபுலி
8. மங்கலி – அட்டங்கி சிக்கடு
9. சாக்கலி – கஞ்சிகுடி, மஸ்சய்யா
10. கும்மரி – பெக்கரி
11. கொல்ல – மண்டெச்சு, ஒக்கு பூஜார்லு
12. ரெட்டி – பிச்சுககுண்ட்லு
13. மாதிகா – சிண்டு, தாக்கலி, பைண்ட்ல, மாஸ்தி, நூலக செண்டய்ய
14. மாலா – குர்ரபோலு
15. லம்பாட – பட்
16. நாயகபோடு – கொர்ரஜீலு, பூஜார்லு, தோட்டி
17. கோண்டு – புருதான்
18. கோயா – தோலி

தமிழகத்தில் காணப்படுவது போன்றே ஆந்திர தேசத்திலுள்ள குடிப்பிள்ளைகளும் குடும்ப முன்னோர்களின் வீரதீரச் செயல்களைப் போற்றிப் பாடுகிறார்கள். அக்குடும்பத்தாரின் சிறப்புகளைப் பேசுகிறார்கள். அவர்களுடைய முன்னோர்கள் வழங்கிய கொடை, தானம் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறாக வல்லாண் முல்லை சார்ந்த பண்புகளைப் பலரும் அறியுமாறு கூறும் முறை, பழங்காலப் பாணர் மரபின் தொடர்ச்சியாகவே சமகாலக் குடிப்பிள்ளைகளிடம் இருப்பதைக் காணமுடிகிறது (பக்தவத்சல பாரதி 2009).

பின்னுரை 

தமிழ்ச் சமூகத்தின் படிமலர்ச்சியில் குறுநில மன்னராட்சி சிதையத் தொடங்கிய போது பாணர்களின் வாழ்வும் சிதையத் தொடங்கியது. பல்வேறு தொழில் செய்வோராக மாறினர். இதன் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் அவர்கள் செய்யும் தொழிலால் மேலும் பல பிரிவினர்களாகப் படிமலர்ச்சி பெற்றனர். அண்டை மாநிலமான கேரளத்தில் பாணர்கள் பிற்காலத்தில் திருவரங்கப் பாணன், மீன்பிடிக்கும் பாணன், குடைகட்டிப் பாணன், புள்ளுவப் பாணன் எனப் பல்வேறு தொழில்களை ஏற்றுப் பிரிந்து விட்டதைக் காண முடிகிறது (தர்ஸ்டன் 1909, vi: 31). எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும் பற்றிய தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் (1890 – 1909) பாணர்கள் பாணர், மலையன் எனும் இரண்டு பெயர்களில் அறியப்பட்டதைக் கூறுகிறார். இவர்கள் மந்திரித்தல், ஆவிகளை விரட்டுதல் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர். திருவிதாங்கூரில் தையல்காரர்களாகவும், மலபாரில் குடைசெய்பவர்களாகவும் காணப்பட்டதையும் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார் (மேலது: 33). பாணர் பெண்கள் மருத்துவச்சிகளாகவும் இருந்துள்ளனர் (மேலது: 29).

இன்று பாணர்கள் இசைத் தொடர்பு ஏதுமின்றித் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழ்வதை தொ. பரமசிவன் கூறுகிறார். 17ம் நூற்றாண்டில் தோல் தைப்பவர்களாகவும், பின்னர் ராணுவ உடைகள் தைப்பவர்களாகவும், அதற்குப் பின் தானியங்கிப் பட்டறைகளில் செயற்கைத் தோல் (ரெசின்) தைப்பவர்களாகவும், இந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் துணி தைப்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர் (பரமசிவன் 2008: 26).

மாமன்னன் இராசராசன் காலத்தில் இப்பாணர் மரபினர் அவன் அமைத்த தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சூற்றி, சாக்கை, அறிஞ்சி என்பவராகப் பணியாற்றியுள்ளதை அவனது கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது (அரு. பரமசிவம் 2005: 35). இவ்வாறாகப் பாணர்கள் பிற்காலத்தில் பலவாறாக மாறிவிட்ட நிலையினை அறிய முடிகிறது.

சங்ககாலப் பாணர்களின் நேர் குடிவழித் தொடர்ச்சி அல்லது நேர் வாரிசுகள் இன்றும் தொடர்கிறார்களோ இல்லையோ, அவர்களுடைய ஆயர்வாழ்வு சாராத நாடோடியம் (non-pastoral nomadism) நீண்ட படிமலர்ச்சிக்குப் பின்னரும் நிலைத்திருக்கிறது. இத்தகைய நாடோடியத்தில் பரஸ்பரம் சார்ந்து வாழும் “பரிசில் வாழ்வு முறை” தமிழ்ச் சமூகத்தின் படிமலர்ச்சியில் அறுபடாமல் இன்றும் வாழ்வாதாரத்திற்குரிய ஒரு சமூக முறையாக இருப்பதைக் காணமுடிகிறது. எனினும் பண்டைய பாணர் மரபு இந்தியாவின் வடபகுதியில் வாழும் திராவிடப் பழங்குடிகளிடம் (கோண்டுகள், கோந்த்கள்) அறுபடாமலும், தென்னிந்தியாவில் கிராமச் சமூகத்தில் உருமாறியும் நிற்கிற ஒரு சமூக முறையாகப் படிமலர்ச்சி பெற்றுள்ளது.

பண்டைய பாண்மரபுக்குரிய பலவகையான கலைத்தொழில்களை இன்று பல்வேறு நாடோடிக் குடியினர் தத்தம் வாழ்வாதாரமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் பூம்பூம்மாட்டுக்காரர், மண்டிகர், பதானியர், நாழிமணிக்காரர், ஜங்கம பண்டாரம், குடுகுடுப்பை நாயக்கர், குறவர், வாக்ரி (நரிக்குறவர்), வேட்டைக்காரன், சாட்டையடிக்காரர், சாதிப்பிள்ளை, பண்டாரம், ஜோகி, குளுவர், பக்கீர், கும்பார், பாம்பாட்டிக்காரன் போன்ற நாடோடி / அரை நாடோடிச் சமூகத்தினர் சங்ககாலப் பாண்மரபின் மாறுபட்ட தொடர்ச்சி எனக் கருதத்தக்க அளவில் உருமாறிய சமூக முறைகளோடும், தகவமைப்புகளோடும் வாழ்ந்து வருகின்றனர் (விரிவுக்குக் காண்க: பக்தவத்சல பாரதி 2003, 2009).

இன்றைய நாடோடிகளின் வாழ்வியல் தகவமைப்புகளில் பழைய பாணர் நாடோடிகளின் படிமலர்ச்சிக் கூறுகளை இனங்காண முடிகிறது. அன்று குறுநில மன்னர்களை அண்டி வாழ்ந்த பாணர்களின் நிலை ஒருபுறமிருக்க, பின்னாளில் குடிப்பிள்ளைகள் கிராமிய அமைப்பில் சாதிகளை அண்டி வாழத்தலைப்பட்டனர். இத்தகைய படிமலர்ச்சி நிலைகள் கருத்தூன்றி ஆராய்வதற்குரியதாகும். பாணர் மரபின் பின் தொடர்ச்சி பற்றி மிகச் சில இனவரைவியல் குறிப்புகளை மட்டும் முன்வைக்கும் முகமாகவே இச்சிறிய கட்டுரை அமைகிறது.

நெறித்துணை நூல்கள் :

கைலாசபதி, க. 2006. தமிழ் வீரநிலைக் கவிதை (தமிழில் கு.வெ. பாலசுப்பிரமணியன்).
கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம்.
சிவத்தம்பி, கார்த்திகேசு. 2003. பண்டைத் தமிழ்ச்சமூகம் : வரலாற்றுப் புரிதலை நோக்கி.
சென்னை: மக்கள் வெளியீடு.
தர்ஸ்டன், எட்கர் & ரங்காச்சாரி (தமிழில் க.ரத்னம்). 1986 – 2005 (1909). தென்னிந்தியக்
குலங்களும் குடிகளும் (7 தொகுதிகள்). தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
பக்தவத்சல பாரதி (பதி.). 2003. தமிழகத்தில் நாடோடிகள். புதுச்சேரி: வல்லினம்.
————— . 2009. “பாணர் மரபு: பழங்குடிப் பாணர்கள், வீரயுகப் பாணர்கள்.
பிற்காலப் பாணர்கள் – திராவிட இனவரைவியல் நோக்கு. அறிஞர் கலாநிதி
க. கைலாசபதி நினைவுப் பேருரை (18. 11. 2009). யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்,இலங்கை .
பரமசிவம், அரு. 2005. பரதவர்: இன மீட்டுருவாக்க வரைவியல். சென்னை: காவ்யா.
பரமசிவன், தொ. 2008. வழித்தடங்கள், பாளையங்கோட்டை: யாதுமாகி பதிப்பகம்.
ரெங்கையா முருகன். 2007. “பர்தான் பழங்குடி”. தீராநதி டிசம்பர் 28 – 31.
வரதராசன், வெ. 1973. தமிழ்ப் பாணர்: வாழ்வும் வரலாறும் . சென்னை: பண்ணன் பதிப்பகம்.
Furer – Haimendorf, C.von. 1951. “The Pardhans: The Bards of the Raj Gonds”. Eastern Anthropologist 4, 3-4: 171-84.
Hivale, Shamrao. 1946. The Pardhans of the Upper Narbada Valley. Bombay: Oxford University Press.
Knight, Roderic. 2000/ 2001. “ The Bana, Epic Fiddle of Central India”. Asian Music XXXII, I: 101-40.
Misra, M.K. 2007. Oral Epics of Kalahandi. Chennai: National Folklore Support Centre.
Murkute, S.R. 1991. Socio-cultural Study of Scheduled Tribe: The Pardhans of Maharashtra. New Delhi:Concept Publishing Company.
Sudhakar Reddy, Y.A. 2008. “Narrative Tradition as a Cultural Allegory: Reflections from Telugu Folklore”. Indian Folklife 29: 4- 7.

 

இக்கட்டுரை  2010 சூன் 23 – 27 அன்று  கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

முனைவர் பக்தவத்சல பாரதியின் மானுடவியல் ஆய்வுகள் தமிழுக்கு முக்கியமானவை. இவரது ஆய்வு நூல்கள் பல வந்துள்ளன. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

2 thoughts on “சங்ககாலப் பாணர்களும் கோண்டுப் பர்தான்களும்

  1. எனது மாணவி ஒருவர் 1990 இல் முதுகலை ஆய்வேட்டுக்காக சமகால பாணர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

  2. This is an important article on the tradition of ancient Tamil bards.
    Thanks to Professor Chellaperumal and Professor Bakthavatchala Barathi.
    Thanks to Unnadham.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!