home உன்னதம், கவிதை ஸாப்போ கவிதைகள்

ஸாப்போ கவிதைகள்

முதல் பெண் கவியாகவும் முதல் லெஸ்பியன் கவியாகவும் முதல் நவீன கவியாகவும் 9 கவிதைத் தேவதை(Muses)களுக்குப் பின் பத்தாவதானவளாகவும் பாராட்டப்படுபவள் ஸாப்போ.

பண்டைய கிரேக்கத்தில், கி.மு. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் ஹோமர் என்ற இதிகாசக் கவி. பின்பு, 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாள் ஸாப்போ என்ற தன்னுணர்ச்சிக் (Lyric) கவி.

லிரிக் கவிதையை Tyrtaeus (7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி), Solon (640-560), Alcman (7ம் நூற்றாண்டு) சிறப்பாக்கியவர்கள். ஆனால் 600ல் ஆசியாமைனரை அடுத்திருக்கும் லெஸ்போஸ் தீவில் வாழ்ந்த இரு கிரேக்க கவிஞர்கள் – ஆணும் பெண்ணும் – அதை உச்சத்துக்குக் கொண்டு சென்றனர்.

Alcaeus அரசியலையும் போரையும் குடியின் ஆனந்தத்தையும் பாடியவன். அவனது சிநேகிதியான Sappho உள்ளார்ந்ததாய், சுயம் சார்ந்ததாய் விளங்கிய உன்னதமான லிரிக் பாடல்களைப் பாடியவள். அவளது கவிதைகளின் காந்தமுள் பல உணர்வுகளில் மாறிமாறி நின்றாலும், உண்மையானதையும் மனிதார்த்தமானதையும் காதலையும் நேரடியாக இதயத்திலிருந்தே எப்போதும் அவை சொல்கின்றன.

Aeolic என்ற வட்டார மொழியிலேயே ஸாப்போ பாடினாள். கவிதையில் ஈடுபாடு கொண்ட ஒரு பெண்களின் கூட்டத்தை தம்மைச் சுற்றிலும் திரள வைத்தாள். இந்தப் பெண்களுடனேயே அவள் தம் பெரும்பாலான வாழ்நாளைச் செலவிட்டாள் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக அக்கடமி ஒன்றை நடத்தினாள். போதக குரு – பூசாரிணி போல ஒருசேர அதில் விளங்கினாள். அவர்களிடம் அவளுக்கு ஆழ்ந்த பற்றுதல் இருந்திருக்கவேண்டும் அவர்களுக்காகவே பல பாடல்களை இயற்றினாள். திருமணம் செய்து ஒரு குழந்தையையும் (Cleis) பெற்றாள். அப்ரோடைட்டை வழிபாட்டுப் பிரதிமையாக்கிய ஒரு கலாச்சாரத்தை அவள் கட்டியமைத்தாள்.

இவைதவிர, அவளது வாழ்வின் பிற விஷயங்கள் கொஞ்சமே அறிய வருகிறன்றன. ஆனால், அவளைப் பற்றிய பல புனைவுகள் எழுந்துள்ளன. அவற்றில் நம்பமுடியாத கதைகள் பல. குறிப்பாக Phaon என்ற இளைஞன் மீதான அவளது காதல் பற்றியது. அவளை அவன் மறுத்ததால், ஒரு மலை உச்சியிலிருந்து கடலில் விழுந்து தன்னை அவள் மாய்த்துக்கொண்டாளாம்.

ஸாப்போவின் கவிதைகள் Monodies எனப்படும் தனி ஒரு குரலில் பாடப்படும் பாடல்வகையைச் சார்ந்தது. அதன் பிரதானக் கரு காதல்தான். கவியின் முக்கியமான தருணங்களை இக்கவிதைகள் சொல்கின்றன – அவளது குழுவிலிருந்த ஒரு பெண்ணின் திருமணம் பற்றி ஒரு கவிதை கூறுவதுபோல.

அவளது கவிதைகள் சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளன – சுமார் 650 வரிகள் மட்டும். பழம் கிரீஸில் அவை உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தன. பழமை அவளைக் கட்டுப்பாடற்றுப் புகழ்ந்துள்ளது; ஒதுக்கியுமுள்ளது. இன்னொரு மொழியில் அவளது கவிதைகளின் உணர்வுகளையும் சந்த நயத்தையும் கொண்டு வருவது இயலவே இயலாதது. ஆங்கிலத்துக்கு மிக அந்நியமான யாப்பு வடிவம். ரோஸட்டியின் மொழிபெயர்ப்பில் சில வரிகள் பிடிபடலாம். அவளது சிதிலமடைந்த சில சிறு கவிதைகள் பரவாயில்லை; ஆனால், Ode to Anactoria, Ode to Aphrodite ஆகிய நீள் கவிதைகள் மொழிபெயர்க்கச் சிரமம் தருபவை.

இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸாப்போவின் இந்தக் கவிதைகள், காதலின் ஓலங்களாக, எதிர்ப்பின் கலகத்தின் முழக்கங்களாக, வேதனையின் வெளிப்பாடுகளாக, அழகின் ஆராதனைகளாக, பெண்களின் குரல்களாக இன்றும் முன்நிற்கின்றன. அவளது வைர மணிகளைப் பிரதி செய்யவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை. காலத்தின் வழிநடையில், தடுக்கப்பட்ட மறுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட காதலின் மர்மத்தை, வசீகரத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவையாய் இன்று தோன்றுகின்றன. ஆண்களின் ஓரினச்சேர்க்கையை விட பெண்களின் ஓரினச்சேர்க்கை கிறிஸ்துவத் திருச்சபைக்கும் சநாதனிகளுக்கும் ஒப்புக்கொள்ள முடியாதாய் பயமூட்டுவதாய் குழந்தைப் பேற்றையே முடிவுக்குக் கொண்டு வருவதாய் இருந்திருக்கிறது. பாதலேர்தான், அவளது ஒருசில கவிதைகளையே அறிந்திருந்தாலும், அவரது  Fleurs du mal தோட்டத்துக்குள் அவளை வரவேற்ற முதல் நவீன கவிஞர். நமது காலத்தில்தான் அவள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டாள். ஆண்கள் மூலமே அறியப்பட்ட பழம்பெரும் உலக இலக்கியத்தில், ஸாப்போதான் ஒரேயொரு பெண்ணியக் குரல்; கலகக்குரல். காதலிக்கும் பெண் உரிமையை மறுத்த ஆண்களுக்கும் சிலவேளை கடவுளர்களுக்கும் கொடுங்கோன்மை ஆட்சி அதிகாரத்துக்கும் அவள் “முடியாது” என்று சொன்னாள். மேதமை நிறைந்தோரை கலாச்சார விசாரணைக்கு உட்படுத்தி ஒதுக்கித் தீர்ப்பளிக்கும் துன்பியல் வரலாற்றில் முதலில் தோன்றுபவளும் ஸாப்போதான். அவள் கவிதைகள் சிதறடிக்கப் பட்டாலும் அவளது குரலைக் கொல்ல முடியவில்லை.

ஸாப்போ, சுமார் 615 காலகட்டத்தில் பிறந்தவள். அவள் பிறந்த இடம் கிரேக்கத்தைச் சார்ந்த லெஸ்போஸ் தீவு. இந்தத் தீவில் வாழ்ந்து கொண்டு கவிதைகள் படைத்துக் கொண்டிருந்தாள். அவளது கவிதை பாணி பெண் ஓரின மோகிப்பை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னாளில் வந்த பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தக் கவிதைப் பாணிக்கும், பெண் ஓரின மோகிப்புக்கும் ‘லெஸ்பியன்’ என்ற பதத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

 

 

1
பாபோஸ் பெருமகளுக்குப் பிரார்த்தனை

பல வண்ணத் தவில் அமர்ந்துள்ள
அமரத்துவம்கொண்ட அப்ரோடைட்,
ஜீயஸின் மகளே,
சூழ்ச்சிவலை பின்னுபவளே!
நான் உன்னை வேண்டுகிறேன்,
வசையாலும் தீங்காலும் என்னை
அடித்து வீழ்த்தாதே
ஓ! பெருமகளே, என் ஆன்மாவே
இங்கே வா,

தொலைதூரம் நீ செவிமடுப்பாய்,
எப்போதாவது இன்னொரு சமயம்
எனது குரலைக் கேட்கும்போதும்,

உன் பிதாவின் இருப்பிடத்திலிருந்து –
பொன்னிற – நீ வருவாய்
தங்க ரதத்தில் நுகம்பூட்டி

அடர்ந்த சிறகுகள் விர்’ரிட
அழகான, வேகமான புறாக்கள்
வானுலகிலிருந்து கீழே
நடுக் காற்றைக் கடைந்து வந்து
உன்னைக் கருத்த பூமிமேல்
சடடென்று கொண்டு வந்து சேர்க்கும்

ஓ! புனித முழுமுதலே, நீ
உன் அமரத்துவ முகபாவத்துடன் புன்னகைத்து
என்ன உனது துன்பம், எதற்காக எனக் கேட்பாய்,
இப்போது நான் கதறுகிறேன்.

எனது பித்து இதயத்தில் அதிகமாக
என்ன நிகழ விரும்புகிறேன்.
“இப்போது யார் உன்னை இணங்க வைத்தது….

உன்னிடம் யார் அதைக் கொணர்ந்தது, பேரன்பே?
யார் ஸாப்போ உன்னைக் காயப்படுத்தியது.

அவள் விலகி ஓடினால், விரைவில்
பின்தொடர வருவாள்;

பரிசுகளை அவள் ஏற்கவில்லையென்றாலும்
அவளே தருவாள், அவள் காதலிக்கவில்லை யென்றாலும், தன்னையே
இகழ்ந்துவிட்டுக் காதலிப்பாள்.”

இப்போதே என்னிடம் வா!
இந்த சகிக்கமுடியாத தொந்தரவிலிருந்து விடுவி!
எனது இதயம் எது நடக்க
வேண்டுமென விரும்புகிறதோ,
அதனை செய்துவிடு! மேலும்
நீயே எனது போர்த்துணையாய் இரு!

 

2
அவனது விஷம்

அவனது விஷம்
எதிர்க்கமுடியாத வலிவுடையது
கசப்புச்சுவையுடையது.

கால்கள் மடங்கித்
தொய்ய வைப்பவன், காதல்

ஊர்வனபோல என்னை
அடித்துக் கீழே வீழத்திவிடுகிறது.

 

3
பேரளவில் ஒளிர்ந்து நிறைகிறாள்

அழகிய நிலவைச் சூழ்ந்துள்ள நட்சத்திரங்கள்
ஒளிந்து தமது ஒளிரும் வெளிச்சத்தைப்
பின்னால் ஒளிக்கின்றன

அவள் முழுநிலவாய் விளங்கும்போது
(மொத்த) பூமியின் மேலும்
பேரளவில் ஒளிர்ந்து நிறைகிறாள்.

 

4
மாலை நட்சத்திரமே

மாலை நட்சத்திரமே,
காலையின் விடியல் சிதறிவிட்ட எல்லாப் பொருளையும் கொண்டு சேர்க்கிறாய்
வெள்ளாட்டைத் திரும்பக் கொணர்கிறாய், செம்மறியைக் கொண்டு சேர்க்கிறாய்,
தாயிடம் அதன் குழந்தையைச் சேர்க்கிறாய்.

(ஆங்கிலத்தில்: வில்லியம் ஹாரிஸ்)

 

5
அப்ரோடைட்டுக்கு

உனக்கு அந்த இடம் தெரியும் : இனி
கிரீட் தீவை விட்டு விலகி எங்களிடம் வா
அங்கே காத்திருக்கும் அந்தச் சோலை இனிமையானது, சுற்றுப்புறம்

உனக்குப் புனிதத்தலம்; பீடத்தில்
நறுமணத் தூபம் புகையும்,
ஆப்பிள் கிளைகளின் இடைவெளியில் நீரோடைகள் முணுமுணுக்கும்,
ஒரு இளம் ரோஜா அடர்த்தி நிலத்தை நிழலிடும்
அதிரும் இலைகள் கீழ் நோக்கி

ஆழ்ந்த உறக்கத்தைப் பொழியும்;
வசந்த மலர்களிடையில் பட்டிழைவாய் வளர்ந்த குதிரைகள் உள்ள பசும்புல்வெளி,
காற்றை வாசனையூட்டும் குடைவடிவ
மஞ்சள் மலர்க்கொத்துகளையுடைய

டில் மூலிகை. ராணி! சைபீரியன்!
காதலுடன் தெளிந்த தேனமுதம் கலந்து
எமது பொற்கிண்ணங்களை நிரப்புவாயாக.

 

6
எனது படுக்கையருகில் நிற்கிறது

நான் விழித்தெழும் அதே கணம்
பொற்காலணி அணிந்து
படுக்கையருகே நிற்கிறது விடியல்.

 

7
இன்றிரவு நான் பார்த்தது

இன்றிரவு நான் நிலவைப் பார்த்தேன் பின்
பிலீயடஸ் கீழே போனது
இப்போது பாதி கழிந்துவிட்டது இரவு;
இளமை போனது; நான்

படுக்கையில் தனியாக.

 

8
இந்த அளவுக்கு நாம் அறிவோம்

இந்த அளவுக்கு நாம் அறிவோம்
மரணம் என்பது தீமை;
அதற்கான கடவுளின் வார்த்தை நம்மிடமுள்ளது;
மரணம் என்பது நல்ல விஷயம் என்றால்
அவையும்கூட மரணிக்கும்.

 

9
கப்பலில் நாம் ஈமக் கலசத்தை வைத்தோம்

கப்பலில் நாம் ஈமக் கலசத்தை வைத்தோம்
இந்த எழுத்துக்களைப் பொறித்து:

பெர்ஸிபோனின் இருண்ட படுக்கையறைக்குள்
திருமணமாகாததால் நுழைந்த
சின்ன டைமாஸின் சாம்பலிது

வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்ததால்,
அவளுக்காகத் துயரம் கொண்டாட,
அவள் வயதுடைய சிறுமிகள்
கூரான வெட்டுவாய் கொண்ட
புதிய கத்திகளை எடுத்தார்கள்
தமது மென்மையான
கூந்தல் சுருள்களை அறுக்க.

 

10
அந்தக் கவி அணங்குகள்தான்

அந்தக் கவி அணங்குகள்தான்
என்னை விடைக்க வைத்தன
தங்கள் கலைநுட்பத்தை
எனக்குப் போதித்தன.

 

11
உனக்கு ஞாபகமூட்டவேண்டுமா, கிளீஸ்,

உனக்கு ஞாபகமூட்டவேண்டுமா, கிளீஸ்,
அந்தத் துயரத்தின் ஓலங்கள்
கவி அணங்குகளுக்கு அர்ப்பணித்த
அந்த கவியின் குடும்பத்தினருக்கு இசைவற்றதோ?
அவை நமக்கும் பொருத்தமற்றவைதானே?

 

12
நீ மறந்திருக்கலாம் ஆனால்

நீ மறந்திருக்கலாம் ஆனால்
இதைச் சொல்ல அனுமதிப்பாயாக: ஏதோ ஒரு
எதிர்காலத்தில் யாரோ ஒருவன்
நம்மை ஞாபகம் கொள்வான்.

 

13
உன்னைக் காதலிக்கிறேன் என்பது சரிதான்

உன்னைக் காதலிக்கிறேன் என்பது சரிதான்
ஆனால் நீ என்னைக் காதலித்தால்
ஒரு இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்
ஒரு இளையவனுடன் வாழ்வதை
என்னால் சகித்துக் கொள்ளமுடியாது,
எனக்கு வயதாகி விட்டது.

 

14
எனது லைரியை எடுத்துப் பின் சொல்கிறேன்

எனது லைரி(யாழை)யை எடுத்துப் பின்
சொல்கிறேன்: இப்போது வா
என் தெய்வீக ஆமை ஓடே
பேசும் ஒரு சாதனமாக உருமாறி.

 

15
வார்த்தைகள்

அவை மூச்சுக்காற்றாக இருந்தாலும்
நான் ஆட்சி கொள்ளும் வார்த்தைகள்
அமரத்துவம் பெற்றவை.

 

16
முன்னறிவிப்பில்லாமல்

முன்னறிவிப்பில்லாமல் திடுமெனக் கீழிறங்கி
ஒரு ஓக் மரத்தைக் தாக்கிய
சூறாவளிக்காற்றுபோல்
எனது இதயத்தை உலுக்குகிறது காதல்.

 

17
நீதான் அத்திஸ் இதைச் சொன்னாய்

நீதான் அத்திஸ் இதைச் சொன்னாய்
“ஸாப்போ, நீ எழுந்திருக்காவிட்டால்
உன்னைப் பார்க்க எங்களை அனுமதிக்காவிட்டால்
நான் மீண்டும் உன்னை எப்போதும் காதலிக்கமாட்டேன்!

“எழுந்திரு, உன் குழைவை வெளிவிட,
உன் சியன் இரவுடையை தூக்கியெறி,
வசந்தத்தில் சாய்ந்திருக்கும் லில்லிமலரைப்போல்,
தண்ணீரில் நீராடு. மிகச் சிறந்த உனது
ஊதா அங்கியையும் மஞ்சள் நிறத் தளராடையையும்
கீழே துணி அலமாரியியிலிருந்து எடுத்துக் கொண்டுவருவாள் கிளீஸ்.
உன்மீது ஒரு மேலங்கியைப் போட்டுக் கொள்ளலாம் நீ, மலர்கள் உன்
தலைமுடியில் மகுடமிடுகின்றன…

பிராக்ஸினா, குழந்தாய்,
நம் காலை உணவுக்கு தயவுசெய்து கொட்டைகளை வறுத்து வைப்பாயா?
கடவுளரில் ஒருத்தர் நமக்கு நன்மை செய்பவர்:

“கடைசியாக இன்று நாம்
நமது விருப்பார்ந்த நகரமான மிட்டிலென்னுக்குள்
அதன் அழகானவர்களிலேயே சிறந்த ஸாப்போவுடன் போகப்போகிறோம்,

தன்னைச் சூழ்ந்து மகள்கள் விளங்க வரும் ஒரு தாய்போல நம்மோடு அவள் நடந்து வருவாள்
நாடு கடத்தப்பட்ட தேசத்திலிருந்து அவள் வீட்டுக்கு வருவதுபோல்…”

ஆனால் நீ எல்லாவற்றையும் மறந்து விட்டாய்.

 

18
ஒரு செய்தியும்இல்லை

அவளிடமிருந்து எனக்கு ஒரு செய்தியும் இல்லை

உள்ளபடியே செத்துப் போய்விட
நான் விரும்பினேன். அவள் பிரிந்து சென்றபோது
அவள் நெடுநேரம் அழுதாள்;
என்னிடம் சொன்னாள்,
“இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும், ஸாப்போ.
விருப்பமில்லாமல்தான் நான் போகிறேன்.”
நான் சொன்னேன், “போ, சந்தோசமாயிரு,
ஆனால் இதை மறக்காதே (என்னவென்று
உனக்கே தெரியும்) காதலால் பிணைக்கப்பட்டவளையே நீ பிரிந்துபோகிறாய்

“நீ என்னை மறந்தால், அப்ரோடைட்டுக்கு நானளித்த பரிசுகளை நினைத்துப்பார், நாம்
பகிர்ந்து கொண்ட எல்லாவிதக் காதலினிமையும்

“செங்கருநீல மணிமுடிகளை, கூந்தலில் பின்னிய
ரோஜா மொக்குகளை, டில் மலரை,
உனது இளம் கழுத்தை வளைத்துச் சுற்றிய குரோகஸ் பூக்களை,

“உனது சிரசில் பொழிந்த வெள்ளைப் போளம்
மெல்லியல் விளிம்புப் பெண்கள் அவரவர் அதிகமாக இசைப்பட்டன எல்லாம்
அவர்கள் பக்கத்திலுள்ளன

“நம்முடையதைத் தவிர எந்தக் குரலும்
கூட்டிசைக் குரல்களின் உச்சாடனத்தைச் சொல்லமுடியாது
வசந்தத்தில் எந்தக் கானகத்திலும்
கானமில்லாமல் பூக்கள் மலர்வதில்லை…”

 

19
இதில் பயனில்லை

இதில் பயனில்லை அன்புள்ள அன்னையே, என்
நெசவை என்னால் முடிக்கமுடியவில்லை
இதற்காக அப்ரோடைட்டைத்தான்
நீ நிந்தனை செய்யலாம்

நளினமானவளாக அவள் இருந்தாலும்
அந்தப் பையன் மீதான காதலால்
என்னை ஏறக்குறைய கொன்றே போட்டாள்

 

20
லெட்டோவும் நியோபியும்

தாய்மார்களாக அவர்கள் ஆவதற்குமுன்
லெட்டோவும் நியோபியும்
சிநேகிதிகளுக்காகத் தம்மை அதிகம்
அர்ப்பணித்தவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

 

21
வசந்தகாலத்தின் மங்கிய வெளிச்சத்தில்

வசந்தகாலத்தின் மங்கிய வெளிச்சத்தில்
முழு நிலவு ஒளிர்கிறது:
இறைபீடத்தைச் சுற்றிலும் குழுமுவதுபோல்
பெண்கள் தத்தம் இடங்களைத்
தேர்ந்து நிற்கின்றனர்.

 

22
அவர்கள் பாதங்கள் அசைகின்றன

அவர்கள் பாதங்கள் அசைகின்றன
தாளத்தோடு, முன்பு ஒரு
காதலின் பீடத்தைச் சுற்றிலும்
கிரிட்டன் மங்கையர்
நடனமாடியதுபோல்
வழுவழுப்பும் மென்மையுமாய் பூத்திருக்கும்
புல்வெளியில் ஒரு வட்டவடிவில்.

 

23
சைபிரியன், என் கனவில்

சைபிரியன், என் கனவில்
ஒரு இளஞ்சிவப்புக் கைக்குட்டையின் மடிப்புகளில்
உனது கன்னங்கள் நிழலோடியுள்ளன.

ரொம்பத் தூரமிருக்கும் பொக்காயாவிலிருந்து
ஒருசமயம் அந்த டைமஸ் நாணத்துடன்
அனுப்பிய பரிசைப்போல்.

 

24
ஒருவிதப் புகாரும் என்னிடமில்லை

ஒருவிதப் புகாரும் என்னிடமில்லை
அந்தப் பொன்னிறக் கவி அணங்குகள்
எனக்களித்த செல்வம் ஒன்றும் மாயமானதல்ல:
செத்தாலும் நான் அதை மறக்கமாட்டேன்.

 

25
உறங்கு, அன்பே

உறங்கு அன்பே,
க்ளீஸ் என்றழைக்கப்படும் ஒரு சின்ன மகள் பொன்னிற மலர்போல் எனக்கிருக்கிறாள்,
அவளுக்காகக் குரோஸஸின் எல்லாச் சாம்ராஜ்யத்தையே தந்தாலும்
அவள் அன்பைத் துறக்க ஒருப்படமாட்டேன்.

எதை அணிவது என்று என்னைக் கேட்காதே
நான் அணிந்தது போன்ற
எந்த அலங்கரிக்கப்பட்ட தலைப்பட்டையையும்
நான் சார்டிஸிலிருந்து உனக்குத் தர கொண்டுவரவில்லை,
கிளீஸ், என் அன்னை எப்போதும் சொல்வாள்
அவளது காலத்தில் தலையில் முடிச்சிட்டணியும் செங்கருநீல ரிப்பனே
மேலான நாகரிகமாகக் கருதப்பட்டதாம்
உள்ளபடியே நாம் கருத்தவர்கள்:
ஒரு பெண் தீப்பந்தத்தைவிட மஞ்சளாக உள்ள கூந்தலையுடையவள்
எந்த சிரசுடையையும் அணியக்கூடாது, புத்தம் புது மலர்களைத் தவிர.

 

26
எல்லோரிடமும் சொல்

எல்லோரிடமும் சொல்
இன்று இப்போது
எனது சிநேகிதிகளின் ஆனந்தத்துக்காக
நான் அழகாய்ப் பாடுவேன் என்று.

 

27
ஒரு படைவீரன் மனைவிக்கு

சார்டிஸில் உள்ள ஒரு படைவீரன் மனைவிக்கு:

இந்தக் கருத்த பூமியில் பார்க்கச் சிறப்பானது
குதிரைவீரரின் படையணி எனச்
சிலர் சொல்வர், சிலருக்குக்
காலாட் படை, மேலும் சிலர்,
நமது கப்பற்படையின் துரிதத்
துடுப்பு வலிப்பு என்பர்;
ஆனால் நான் சொல்வேன், ஒருவர் காதலிக்கும்
ஒன்றென்று.

இதை எளிதாக நிரூபிக்கலாம்:
ஹெலன் செய்யவில்லையா – உலகின்
ஆண்மையின் மலரை
முற்றாக ஆய்ந்தவள் அவள் –

ட்ராயின் கௌரவத்தைக் குலைத்துக்
கிடத்திய ஆண்களுள் முதலாவதாய் ஒருவனைத்
தேர்ந்தெடுத்தவள் அல்லவா? அவனது
சக்தியால் ஈர்க்கப்பட்டு,
அவளது சொந்த இனத்தின் காதலை மறந்து,
தனது சொந்தக் குழந்தையை மறந்து,
அவனுடன் அவள் தொலைதூரம் அலைந்தாள்.
ஆகவே அனக்டோரியா, எங்களை மறந்து
நீ தொலைதூரத்தில் வாழ்ந்திருந்தாலும்
உனது காலடியின் இனிய ஓசையும்
உனது விழிகளின் மின்வெட்டுப் பார்வையும்

லிடியன் குதிரையை விட அல்லது
கவசம் பூண்ட மையக் காலாட்படையின் அணிநடையொலியையும்விட
அதிகம் என்னை உணர்ச்சிவசப்பட வைப்பவை.

 

28

ஆம், அட்திஸ், நீ சொல்வது சரியாயிருக்கலாம்

ஆம், அட்திஸ், நீ சொல்வது சரியாயிருக்கலாம்

சார்டிஸில் கூட அனக்டோரியா
அடிக்கடி நம்மை நினைத்துக்கொள்வாள்

இங்கே நாம் பகிர்ந்த வாழ்வை,
நீ அவளுக்கு தேவதையின்
அவதாரமாய்த் தோன்றிய காலத்தையும்
அவளை அதிகம் சந்தோசப்படவைக்க
நீ பாடியதையும்

இப்போது லிடிய மங்கையருக்கு இடையில் அவள்
கதிரவன் மறைவு நேர்கையில் முந்நிகழ்வாய்
உவர் கடலிலும் அடர்ந்து பூத்த நிலவெளிகளிலும்
அவளது வெளிச்சம் சமமாய்ப் பரவவும்
புலனின்பப் பனித்துளிகள் புதுமலர் ரோஜாக்கள்,
மெலிந்த நறுமணத் தைலம், பூத்த இனிய
மணப்புல் குளோவர் மீது பொழியவும்
தன்னைச் சுற்றிலும் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு முன்னதாகச்
செவ்விரல் நிலவு எழுவதைப்போல்

தம்முறையின்போது முன்வந்து முதலில் நிற்பாள்;
நோக்கற்று அவள் உலவுகிறாள்,
கனிவான அட்திஸை நினைத்தபடி,
அவளது சின்ன மார்பில் உள்ள நெஞ்சில் ஏக்கம் கனத்துத் தொங்க
அவள் பலமாகக் கத்துகிறாள், வா!
அதை நாம் அறிவோம்;
ஆயிரம் செவியுள்ள இரவு
அந்தக் கதறலை எதிரொலிக்கும்
நமக்கிடையில் ஒளிரும் கடல்களைத்தாண்டி.

 

29
மாவீரனைவிட மேலானவன் அவன்

மாவீரனைவிட மேலானவன் அவன்
எனது கண்களுக்கு அவன் கடவுள் –
உனது பக்கலில் வீற்றிருக்க அனுமதிக்கப்பட்ட அந்த மனிதன் – அவன்

உனது குரலின் இனிய முணுமுணுப்புக்கு
நெருங்கிச் செவிசாய்ப்பவன்
என் சொந்த இதயத்தை வேகமாய்த் துடிக்க வைக்கிறது கவர்ச்சியான அந்தக் சிரிப்பு.
உன்னை நான் திடுமெனச் சந்திக்கையில், என்னால் பேச – என் நா உடைந்தது;
எனது தோலின் அடியில் ஒரு மெல்லிய நெருப்புப் பற்றியோடியது;
எதையும் காணவியலாமல், எனது சொந்தச் செவியின் முரசதிர்வைக் கேட்டபடி,
நான் வியர்வையில் சொட்டுகிறேன் எனது உடலை
நடுக்கம் அலைக்கிறது

காய்ந்த புல்லினும் நான் வெளுத்துப்போனேன். அம்மாதிரித் தருணங்களில்
மரணம் எனக்கு வெகுதூரத்தில் இல்லை.

 

30
நாம் அதற்காக சந்தோசப் படுவோம்

குற்றம் கண்டுபிடிக்கும் அவனைப் பார்த்து
நாம் அதற்காக சந்தோசப்படுவோம்,
மடமையும் துயரமும் அவனை
வாரிக்கொண்டு போகட்டும்!

(ஆங்கிலத்தில் : பர்னார்ட்)

 

31
ஆன்ட்ரமீடாவுக்கு

கிராமிய உடைகளை உடல் முழுக்க அணிந்திருந்த
அந்தக் கிராமத்துப் பெண்
உனது ஆசைகளுக்கு மந்திரம் போட்டுவிட்டாள்,
தம் முழங்கால் மூட்டுக்குமேல் தனது
ஆடைகளைத் தூக்கும் புத்தி
அவளுக்கு இருந்ததேயில்லை.

(ஆங்கிலத்தில்: ஜிம் போவெல்)

 

தமிழாக்கம் : கால.சுப்ரமணியம்

உன்னதம் 19 வது இதழில் (பிப்ரவரி – 2009) வெளிவந்தது.

 

One thought on “ஸாப்போ கவிதைகள்

  1. Wonderful poems translated into Tamil, which made me wonder how I missed all these years this magazine called ” UNNATHAM “. I really like to subscribe to it. Please provide me necessary details in this regard. Thank you. #MUTHUMANI, Bangalore. Feb. 07, 2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!