home நேர்காணல், புதிய அலை தற்கால அரசியல் சூழலில் மேஜிகல் ரியலிஸ பாணி தவிர்க்க முடியாதது

தற்கால அரசியல் சூழலில் மேஜிகல் ரியலிஸ பாணி தவிர்க்க முடியாதது

 

மதத்தாலும், அரசியல் சூழல்களாலும், சமூகத்தாலும் ஒடுக்கப்பட்டிருந்த பெண்கள் எப்படி மாற்றம் பெற்றார்கள் என்பது குறித்தே நான் படமெடுக்க விரும்பினேன்…

– ஷிரின் நெஸாத் உடன் ஒரு நேர்காணல்

 

 

இந்தத் திரைப்பட வடிவம் எப்படி சாத்தியமானது?

நான் மிகத் தீவிரமாக வீடியோ வடிவமான டாகுமெண்டரி தயாரிப்பில் இருந்த கால கட்டத்தில் எனது கலைவடிவத்திற்கு மிகுந்த நேரம் செலவழிக்கப்படுவதை உணர்ந்தேன். அந்த நேரம் ஸன்டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் இருந்து அவர்களுடைய எழுத்துப் பட்டறைக்காக திரைப்படம் ஒன்று எடுத்துத் தர முடியுமா என்று கேட்டார்கள். சரி என்று உடனடியாகவும் சொல்ல முடியவில்லை, மறுக்கவும் மனம் இல்லை. ஏன் மறுக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு குரல். அது தான் இதற்கெல்லாம் ஒரு ஆரம்பம்.

 

உங்கள் கலை வடிவமான புகைப்படக் கலைக்கும் திரைப்படத்திற்கும் என்ன வேறுபாட்டை உணர்ந்தீர்கள்?

கலைப்படைப்பைச் சுதந்திரமாகச் செய்ய முடியும். அதை நீங்கள் முடித்து மற்றவர்களின் பார்வைக்குக் கொண்டு செல்கிறீர்கள். அதைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால் திரைப்படம் ஒரு சிறிய தொகை இல்லாமல் பார்க்க முடியாது, அதனால் தானோ என்னவோ அதற்குத் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று பலரும் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் விருப்பமின்றி நீங்கள் அங்கு எதையும் செய்யவியலாது.

திரைஅரங்குகளில் வெளியிடும் வண்ணம் திரைப்படமாகவும், அதே சமயம் மியூசியங்களில் காண்பிக்க ஏதுவாக வீடியோவாகவும் அதை எடுக்கத் திட்டமிட்டேன். முழுமையாக எனது எழுத்துப் பிரதியை தயார் செய்தாலொழிய எனக்குத் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது புரிந்தது. திரைப்பட எழுத்துப் பிரதியை எழுதுவது எனக்கு உண்மையிலேயே சிறப்பான அனுபவமாக இருந்தது. என் வீடியோ படங்களுக்கு வெறும் கதைப்பலகை (Story Board) போதும். ஆனால் இப்படத்தின் திரைக்கதைக்காக ஜெர்மானிய திரைக்கதை ஆலோசகர் ஃபிரான்ஸ் ரோடென்கிர்சனை சந்திக்க வேண்டியிருந்தது. அதற்காக நிறையப் பயணங்கள். 2003 – ல் அவருக்காகவே நான் பெர்லின்வாசியாகி நூறு நூற்றைம்பது விதமாக திரைக்கதை வடிவத்தை யோசித்து இறுதி வடிவத்தை நானும் ஸோஜா அசாரியும் எழுதி முடித்தோம்.

 

வீடியோ படத்திற்கும் திரைப்படத்திற்கும் உள்ள வேறுபாடுகளாக என்ன உணர்ந்தீர்கள்?

நிறைய அனுபவங்கள். இரண்டுமே வேறு வேறு வடிவங்கள். வீடியோவில் ஐந்து கதாபாத்திரங்களின் கதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் தொகுப்பு வேலை செய்ய முடிந்தது. ஒரு வீடியோ அறையில் தனித் தனியாக இந்தக் கதைகளைப் பார்க்கும் ஒருவர்   இறுதியாகக் கடைசி அறையில் அமர்ந்து எல்லாக் கதாபாத்திரங்களும் சேரும் கடைசி வீடியோவைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சினிமாவில் அப்படி முடியாது. ஒரே விதமாக கதை சொல்ல வேண்டும். வீடியோவில் வருவது போன்ற காட்சிப் படிமத்தை சினிமாவில் காட்டுவது எனக்கு சவாலாக இருந்தது. நான் சொல்ல வந்த விஷயம் என் வீடியோ ஆளுமையால் சிதறுண்டு போவது கண்டேன். இந்த அச்சம் காரணமாக என் ஆளுமையை மாற்றிக்கொண்டேன். சினிமாவின் கதைச் சரடை எக்காரணமும் கொண்டு விட்டுவிட முடியாது. அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் போல சினிமாவைப் படைத்து விடமுடியாது.

சினிமாவின் பெரிய சவால் என்னவென்றால் ஒரு கதாபாத்திரத்தைப் படைத்து அதைக் கதைக்குள் நுழைய வைத்து அதன் மனஉலகில் நுழைவது என்பதுதான். எனது வீடியோ படங்களில் கதாபாத்திரங்களைச் சிற்பம் போல சித்தரித்திருந்தேன்

அவர்களுக்கு உருவகம் இல்லை;  ஆனால் சினிமா அப்படியில்லை. இந்த இடத்தில் நான் பெர்க்மென் ஐ மிகவும் மதிக்கிறேன். சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை வசியம் செய்து, கண் இமைக்காமல் தன் கதாபாத்திரங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கச் செய்ய அவரால் எப்படி முடிகிறது? இரண்டு கதாபாத்திரங்கள் ஒரே அறையில் அமர்ந்து இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தால் கூட.

 

உங்கள் திரைப்படத்திற்கு இக்கதையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

இது அனைவருக்கும் தெரிந்த, அதே சமயத்தில் ஈரானில் தடை செய்யப்பட்ட ஒரு நாவல். இதன் ஆசிரியர் ஷ(ஹ்)ர்னுஸ் பர்ஸிபுர் (Shahrnush Parsipur)  ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்தவர். எனக்கு ஈரானியப் பெண் எழுத்தாளர்கள் மீது அபரிமிதமான மரியாதை உண்டு. அவர்கள் பெண் என்பதாலோ அல்லது அவர்கள் நன்றாக எழுதுகிறார்கள் என்பதற்காகவோ அல்ல அந்த மரியாதை. அவர்கள் வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிபோல அவர்கள் கலை இருக்கிறது. நான் சிக்கலான இதன் கதை வடிவத்திற்காகவே இதனைத் தேர்ந்தெடுத்தேன். இது ஒரு மேஜிகல் ரியலிச நாவல். உன்னதமான நாவல்கள் திரைவடிவம் பெறும்போது அவை உள்ளடக்கம் காரணமாக முழுமை அடைவதில்லை. நாவல்களாகவே அது இருக்கட்டும் என்று பலரும் எச்சரித்தார்கள். நான் ஏற்கனவே எடுத்த வீடியோ படங்களில் சொல்ல ஆசைப்பட்ட விஷயங்கள் இதில் காணக் கண்டேன். தன்னிச்சையாகப் பெரும் அளவில், உணர்வு ரீதியாக,  அரசியல் ரீதியாக, பெரும் அளவில் இப்படம் என்னைப் பாதித்தது. பர்ஸிபுர் நாவல் போலவே உலகளாவிய அதேசமயம் உள்ளூர் உணர்வோடும், தெய்வீகமான அதேசமயம் அராஜக உணர்வோடும், தனிப்பட்ட மற்றும் பொதுவான உணர்வோடும் இந்த நாவல் இருந்தது. இந்தக்கதை 1953-ல் டெஹ்ரானில் நிகழ்கிறது. வெளி நாட்டு சக்திகளுக்கு எதிராக உள்ளூரில் கலகங்கள் நடந்து கொண்டிருக்க இந்த ஐந்து பெண்களும் தங்கள் சுதந்திரம் தேடி அலைகிறார்கள்.

இந்த நாவல் தத்துவார்த்த உட்பொருள் கொண்டது. கடந்த கால வாழ்வை மறக்க விரும்பி வேறு வேறு திசைகளில் இருந்து வரும் ஐந்து பெண்கள் நகருக்கு வெளியே  ஒரு பழத் தோட்டத்தில் கூடுகிறர்கள். அந்தத் தோட்டமோ அற்புதமானது. வீடு நகரற்றவர்களுக்கானது. வெளியுலக தொடர்பைத் துண்டித்துக் கொண்டு அங்கு வாழ முடியும். இந்த ஐந்து பெண்களும் தங்கள் விதியைக் கையில் எடுத்துக் கொண்டு அதை மாற்றப் புறப்பட்டவர்கள். நிஜ வாழ்வில் நாம் சந்திப்பது போன்றவர்கள். ஃபருக் லெக்ஹா என்ற பெண் ஐம்பது வயது கடந்த பின்னும் தன் விருப்பம் போல் தன் வாழ்க்கையைத் தான் வாழாத துக்கத்திலிருக்கிறாள், புதிதாக வாழ விரும்புகிறாள். ஃபயிஷா சராசரி வாழ்க்கை வாழ விரும்பியவள், ஆனால் அவள் கற்பழிக்கப் படுகிறாள். சில பெண்கள் வேறு விதமாக வாழ விரும்புகிறார்கள். முனிஸ் என்ற பெண் தற்கொலை செய்து கொண்டு சுதந்திரம் காண விரும்புகிறாள். ஸரின் என்ற பாலியல் தொழிற்பெண்ணோ தன் வாடிக்கையாளர்களை முகமற்றவர்களாகப் பார்க்கிறாள்.

இப்படம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையும் அவர்கள் தோட்டத்திற்கு வருவதுவரை பின்தொடர்ந்து வருகிறது. அங்கு அவர்கள் சுதந்திரமானவர்களாக சந்தோஷம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அங்கு அவர்கள் ஒரே இனம், அந்தத் தோட்டம் ஈடன் தோட்டம்போல வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

படத்தில் முனிஸ் என்ற கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறது. ஆனால் புத்துயிர் பெற்று விடுகிறது. அதன் குரல் படம் நெடுக ஒலிக்கிறது.

நாவலில் முனிஸ் மற்ற பாத்திரங்களைப் போலவே தோட்டத்திற்கு வருகிறாள். நாவலில் அவள் சாதாரணப் பாத்திரம் போல சித்தரிக்கப்பட்டிருப்பாள். வெளியுலகு பற்றிய அதீத ஆர்வமும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆர்வமில்லாமலும் இருப்பாள். நான் அவளது பாத்திரத்தை சற்று மாற்றினேன். அவளை ஒரு தீவிர அரசியல் தொண்டராக மாற்றினேன். அவள் இறந்து ஆவியாக வருவதுபோல மாற்றினேன். அரசியல் நிகழ்வுகளில் அவளுக்கு ஆர்வமிருப்பதால் நாட்டில் நிகழும் அரசியல் மாற்றங்கள் அவள் மூலம் தோட்டத்திற்கு வந்து கொண்டேயிருக்கும். அவள் இக் கதையின் ஆன்மிக வழிகாட்டி.

 

நாவலிலும் வீடியோவிலும் மடோக்ட் என்ற கதாபாத்திரம் பழத்தோட்டத்தில் தன்னை ஒரு மரம்போல நட்டுக் கொள்கிறாள். படத்தில் அப்படி இல்லை ஏன்?

நாவலில் வரும் அதீத மாயாஜாலப் பாத்திரங்களை படத்தில் சித்தரிப்பது கடினம். எழுத்துப் பிரதியில் ஆரம்ப வடிவத்தில் அவள் இடம் பெற்றாள். ஆனால் எழுத்துப் பிரதி முழு வடிவம் பெற்ற போது அவள் வெளியேற்றப் பட்டாள். கதையில் தோட்டத்திற்கு வரும் அவள் தன்னை ஒரு மரமாக நட்டுக் கொள்கிறாள். அவளுக்கு உடலுறவு பற்றிய பயம். ஆனால் அவள் தாய்மையை விரும்புகிறாள். மரமாகி கனிகளை, விதைகளைக் கொடுக்கிறாள். உலகெங்கும் அவை பரவிச் செழிக்கின்றன. உலகோடும் அதன் மனிதர்களோடும் அவளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதனாலேயே அவள் என் கதையில் அவ்வளவாக இடம்பெறவில்லை.

 

படத்தில் தோட்டக்காரனுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? அவன் ஸரினுடன் விபச்சாரத்திற்கும் வருகிறான். தோட்டத்தையும் மிகப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறான்.

தோட்டக்காரன் ஒரு புதிர் போல கதை நெடுகிலும் வருகிறான். படம் முழுக்க அவன் தேவதை உருவமாகக் கொண்டிருக்கிறான். அவன் யாரென்று யாருக்கும் தெரியாது. தோட்டத்திற்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே அவன் வேலை. அவன் ஒரு முகமற்ற பூதம், ஸரினுடன் அவன் விபச்சாரத்திற்கு வரும்போது முகமற்ற அவனைப் பார்த்து அவள் நடுங்கித் தோட்டத்தை விட்டே ஓடிப்போகிறாள். அதன் பின் தோட்டக்காரன் பொறுப்புள்ள பாதுகாவலனாக நடந்து கொள்கிறான்.

 

படத்தின் முடிவு நாவலைப்போல அல்லாமல் வேறு விதமாக இருந்தது ஏன்?

இந்த நாவல் எனக்குப் பிடித்ததற்குப் பல காரணங்கள் சொல்லலாம். தத்துவார்த்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் சிறப்பாக இருந்தது மட்டுமல்ல விரிவான பெண் கதாபாத்திரங்களையும் இதனுள் கொண்டுள்ளது. இதன் பாத்திரங்கள் மேற்கத்தியத் தன்மையாகவும் அதே சமயம் தீவிர மதச்சார்புள்ளவர்களாகவும், பணமற்றவர்களாகவும்  இதன் பாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு பெண் உலகைத் துறந்து தோட்டத்திற்கு வந்த பின் என்ன ஆகிறாள் என்பது மிக முக்கியம். நாவலில் இந்தக் கதாபாத்திரங்கள் தங்கள் துக்கத்திற்கு வெறும் சாட்சியாக மட்டும் தான் இருந்தார்கள். என் படத்தின் கதாபாத்திரங்களை நான் அப்படிப் படைக்க முடியாது. மதத்தாலும் அரசியல் சூழல்களாலும் சமூகத்தாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு சுவரோடு அழுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்கள் எப்படி தங்கள் நிலையிலிருந்து மாற்றம் பெற்றார்கள் என்பது குறித்தே நான் படமெடுக்க விரும்பினேன்.

 

இந்தப் படத்தின் கதா பாத்திரங்களில் எது உங்களைப்போலவே இருந்ததாக உணர்ந்தீர்கள்?

நாவலில் வருகிறபடியேதான் நானும் பாத்திரங்களை சித்தரித்திருந்தேன். முனிஸின் அரசியல் நடவடிக்கை எனக்குப் பிடித்திருந்தது. அவளோடு அரசியல் பற்றிய என் எண்ணங்ளைப் பகிர்ந்து கொண்டேன். அவளைப் போலவே சமூக விடுதலை பற்றிய பிரக்ஞை எனக்கும் உண்டு. ஃபயிஸாவின் இயல்பான ஆசைகள் மீது எனக்கு விருப்பம் உண்டு, ஃபருக் லேக்ஹாவின் வயது முதிர்ந்த பிறகும் தான் வாழாத வாழ்வைப் புதிதாகத் துவங்கி வாழ வேண்டும் என்ற தாகம் எனக்குப் பிடித்திருந்தது. ஸரினின் பாத்திரம் எனக்கு நெருக்கமாகப் பிடித்த ஒன்று. பெண்ணின் உடலமைப்பையும் வெட்கத்தையும் அவள் வெறுக்கிறாள். என்  பெண்ணுடல் வளர்ந்த காலத்தில் நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன்.

 

நாவலை விட படத்தில் அரசியல் சூழல் தூக்கலாக இருக்கிறது, ஏன்? குறிப்பாக 1953 சம்பவங்கள்…

ஆம். நாவலில் அரசியல் வெறும் பின்னணி மட்டுமே. நான் சுயநலத்தோடு அதனை விரிவு படுத்தினேன், ஈரானில் அரசியல் மற்றும் சமூகச் சீரழிவுகளை அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எப்படித் துவக்கி வைத்தது என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு சொல்ல ஒரு சந்தர்ப்பமாகவும், சொல்லியே ஆக வேண்டிய ஒரு விஷயமாகவும் அது இருந்தது, 1953 -ல் சி ஐ ஏ ஆரம்பித்து வைத்த சிக்கல்களால் 1979 -ல் இஸ்லாமியப் புரட்சி துவங்கியது. என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்வுகளை வீர்யத்தோடு சொன்னது இந்தப்படம் மட்டும்தான்.

 

நீங்கள் பிறப்பதற்கு முன்னரே இந்த நாவல் எழுதப்பட்டது. எப்படி இந்தக் காலத்தை உங்களால் உணர முடிந்தது?

ஈரானில் நான் வளர்ந்த விதத்திற்கும், வாழ்ந்த விதத்திற்கும் நாவல் எழுதப் பட்ட காலத்திற்கும் எந்த மாற்றமும் இல்லை. அக்காலத்தை விட இப்பொழுது சுதந்திரம் அதிகமாக இருந்தாலும், SAVAK என்ற ரகசிய போலிஸ் அமைப்பை உருவாக்கி இருந்தார் ஷா. இப்போது இருப்பதைவிட அதிக சுதந்திரம் அப்போது இருந்திருக்கிறது. மதவாதிகளுக்கு முன்னால், கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவிற்கு முன்னால், பிரிட்டிஸிற்கு முன்னால், சிஐஏ விற்கு முன்னால் ஈரான் எப்படி இருந்தது என்ற சின்னச் சின்ன பின்னல்கள் எனது படத்தில் இருக்கும். சுதந்திரம் சுடர் விடும் சூழலை மதவாதிகள் தலைமுறை தலைமுறையாகத் தவற விட்டு விட்டார்கள். எனது தீவிர தேடல் மூலம்தான் கொஞ்சம் கொஞ்சமாக இதையெல்லாம் அறிந்தேன்.

 

நாவலில் அரசியலைப் பின்னணியாக மட்டும் வைத்துக் கொண்டு கதை நிகழ்வுகளை மேஜிகல் ரியலிச பாணியில் பர்ஸிபுர் எழுதினார். நீங்களோ அரசியலை மய்யப்படுத்தியுள்ளீர்கள்; ஆனால் அதே கதை சொல்லும் பாணியைப் பின்பற்றியுள்ளீர்கள். இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா?

தாங்கள் நினைத்ததை தங்கள் கலைவடிவில் நேரடியாக சொல்ல முடியாத சமூக அரசியல் சூழலில் மேஜிகல் ரியலிஸ பாணி தவிர்க்க முடியாதது. தொடர்ந்து தங்களை ஒடுக்கும் அரசு அமையும்போது அதற்கு எதிராகத் தங்கள் கருதுக்களை முன் வைக்கும் கலைஞர்கள் படிம வடிவை நாட வேண்டியுள்ளது. ஆனால் இந்த நாட்களின் அரசாங்கம் இதன் சாரத்தைப் புரிந்து கொள்ளும் நிலையில்தான் உள்ளது. 1953 ல் இக் கதை நிகழ்ந்தாலும் மத ரீதியாக பாலியல் ரீதியாக இது பிரச்சனைக்குரிய நாவல் என்று தீர்மானித்திருக்கிறார்கள். சர்ரியலிஸம் எனக்குப் பிடித்த வடிவம் என்பதால் இந்த நாவலில் உள்ள மேஜிகல் ரியலிஸ அமைப்பை நான் அப்படியே எடுத்துக் கொண்டேன். காலத்தை வெல்வது என்பது இதன் மூலம் சாத்தியமாவது ஒரு காரணம்.

 

இப்படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பும் என்பது நீங்கள் எதிர்பார்த்தது தானே?

இப்படம் பல இஸ்லாமிய நாடுகளில் திரையிடப்பட மாட்டாது என்பது எனக்குத் தெரியும். உதாரணமாக ஒரு காட்சியில் ஃபயிஷா தொழுகை முடிந்து தன் சட்டை பட்டன்களைக் கழற்றித் தன் அரை நிர்வாண உடலைப் பார்க்கிறாள். வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் தன் உடலைப் பார்ப்பதை நான் காட்டியாக வேண்டும். அதே சமயம் அவள் பிரார்த்தனையையும். ஸரின் நிர்வாணமாகக் குளிப்பது அங்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இப்புத்தகத்திலுள்ள அரசியல் குறித்து சிலரும், மதம் குறித்து சிலரும், பாலியல் குறித்து சிலரும் கூட்டம் கூட்டமாகக் குறை சொல்லலாம். ஆனால் இதிலுள்ள உண்மைகள் என்றைக்கும் விவாதத்திற்குரியவை.

 

படம் நீங்கள் நினைத்த மாதிரி முழுமையடைந்ததா?

படம் ஆரம்பிக்கும் போது  எதார்த்தமாக ஆரம்பிக்கிறது. முனிஸிற்கும் அவள் சகோதரனுக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. முதல் அரை மணி நேரம் வழக்கமான படம் பார்க்கும் உணர்வைத்தான் இப்படம் தரும். அதன் பிறகுதான் சர்ரியலிச பாணியைக் கையாண்டேன். அதன் பிறகு படம் முதலிலிருந்தே இந்த வடிவத்தில் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்படிச் செய்தால்தான் பார்வையாளர்களைப் படத்தோடு ஒன்றச் செய்ய முடியும். படத்தின் ஆரம்பத்தில் முனிஸ் கூரை மீதிருந்து பறக்கிறாள். பின் அவள் பறக்கவில்லை, அவள் தற்கொலை செய்து கொண்டு சுதந்திரம் தேட விரும்புகிறாள் என்பதை விளக்கி, அவள் பறந்த வண்ணம் தன் கதையை சொல்ல வைத்தேன். பூமிக்கு மேலே அவள் பறக்கும் போது பூமியில் அவள் வாழ்ந்த வாழ்க்கை சொல்லப்படுகிறது.

இப்படம் கவித்துவமாக சர்ரியலிஸத் தன்மையுடன் இருக்கிறது. வீடியோவில் நான் பயன்படுதிய உத்திகள் எதையும் நான் பயன் படுத்தவில்லை. படக் காட்சிகளின் சட்டகங்களுக்கு நடுவே கதையைப் புரிந்து கொள்ளும் தடயத்தை நான் விட்டு வைத்திருக்கிறேன். இயல்பாக இப் படம் குழப்பமான வடிவம் கொண்டது. நான்கு கதாபாத்திரங்களையும் மோசமான அரசியல் சூழலோடு பின் தொடர்ந்து வந்து நான் சொல்ல நினைத்ததைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

 

தமிழாக்கம் : நடராஜன் ஜெகநாதன்

 

ஷிரின் நெஸாத் முதன்மையாக ஒரு புகைப்படக் கலைஞர். சமூக நிகழ்வின் பெண் அவலங்களை அதன் வலியோடு சொல்வதில் பெரிதும் நிகரானவை அவரது மேஜிக்கல் ரியலிஸப் புகைப்படங்கள். கலை வல்லுனரான இவரது புகைப்படங்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்ற அதே சந்தர்ப்பத்தில் பல சர்ச்சைகளும் பரபரப்புகளும் எழும்பி வெடித்திருக்கின்றன. இவரது புகைப்படங்களையும் வீடியோ படங்களையும் கொண்டு ஈரானின் பெண்ணுலகத்தை ஆழமாகவும் தீவிரமாகவும் அவதானிக்க முடியும். இவரது Women Without Men திரைப்படத்திலும் இந்த அவரது கலை உச்சபட்சமாக வெளியாகியிருக்கிறது. கடுமையான அரசியல் சூழல் நிலவிய ஈரானில் இருந்த பெண்களின் நிலை பற்றிய நுணுக்கமான கலை வடிவமாக இப்படங்கள் இருக்கின்றன. இப் படங்களின் ஒவ்வொரு சட்டகமும் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: Art in America  ஜுன்’ 2009 இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!