home Exclusive உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

தமிழ் மொழியின் நவீன இலக்கிய தளத்தில் தீவிரமாக இயங்கும் எழுத்தாளர்களிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது.

எதிர்வரும் இளம் தலைமுறை இலக்கிய வாசகர்களுக்கு வழிகாட்டும் அறிமுகமாகவும்,  இலக்கிய ஆளுமைகள் கவனப்படுத்தும்  ஆவணமாகவும் இந்தப்பகுதியை கவனம் கொள்ளலாம்.

ஈழத்தின் புலம்பெயர் எழுத்தாளரான டிசே தமிழன் தற்கால நவீன இலக்கியத்தில் புலம்பெயர் வாழ்வியலின் குரலை ஒலித்து வருபவர். இதுவரை இவரது மூன்று நூல்கள் – நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள்), சாம்பல் வானத்தி மறையும் வைரவர் (சிறுகதைகள்), மற்றும் பேயாய் உழலும் சிறுமனமே(கட்டுரைகள்) – வெளியாகியுள்ளன.  தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

 

உன்னதம் : உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

டிசே தமிழன் :  அலெஹாந்த்ரோ ஸாம்ப்ராவின் ‘வீடு செல்வதற்கான வழிகள்’ (Ways of Going Home by Alejandro Zambra).

இந்நாவல் சிலியில் 1985ல் நிகழும் பூகம்பத்துடன் ஒரு ஒன்பது வயதுச் சிறுவனின் நினைவுகளுடன் தொடங்குகின்றது. நகரொன்றில் தமக்கான தனித்துவங்களுடனும் தனிமையுடனும் இருக்கும் மனிதர்களை பூகம்பம் ஒரேயிடத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றது. அப்போது சிலியில் பினோச்சேயின் இருண்ட ஆட்சி நடக்கின்றது.

சிலியின் பினோச்சேயின் காலங்களில் தப்பிப் பிழைத்த தலைமுறையினர், பினோச்சேயின் காலங்களின் பின்னாலும் கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாவலின் ஓரிடத்தில் ‘நாம் போர் முடிந்துவிட்டதென மீண்டும் வீடு திரும்புகின்றோம். ஆனால் உண்மை என்னவென்றால், போர் இன்னும் எங்களின் மனங்களில் முடியவே இல்லை என்பதாகும்’ எனச் சொல்லப்படுகின்றது. பினோச்சே காலத்தின் இருண்ட பக்கங்களும், அமைதியாக்கப்பட்ட குரல்களும், மனச்சாட்சிகளின் குற்ற வாக்குமூலங்களும் முடிக்கப்படாத பிரதியிலிருந்து வாசிக்கும் நமக்கு கடத்தப்படுகின்றன.

நாவல், நாவலுக்குள் இன்னொரு நாவல், பிறகு இந்த இரண்டு நாவல்களைச் சேர்ந்த மூன்றாவது நாவலை வாசகர்களான நாங்கள் என வாசிப்பதென மாயச்சுழல் நிறைந்த வாசிப்பைத் தருகின்ற புதினம் இது.

வீடு திரும்புதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அவ்வாறு வீடு திரும்பியவர்களுக்கும், அவர்கள் விட்டு விலகிச் சென்றதைப் போல, அந்தப் பழைய சூழ்நிலைகள் அப்படியே திரும்பவும் வாய்ப்பதுமில்லை. எவரெனினும் வீடு திரும்புகின்றார்களோ, இல்லையோ, அவர்களால் நினைவுகள் என்றென்றைக்குமாய் சுமந்துகொண்டிருக்கும் வரலாறு எனும் வீடுகளிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பியோடவும் முடிவதில்லை.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!